தடுப்பூசி போட்டு கொண்ட பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தேவை இல்லை: அரசு ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

தடுப்பூசி போட்டு கொண்ட பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தேவை இல்லை: அரசு ஆலோசனை

புதுடில்லி, ஜூன் 8 தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் உள்நாட்டில் பயணம் செய்யும் போது கரோனா பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

இரண்டாம் அலை தாக்குதலால் நாடெங்கும் கரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.  இதைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  அதில் ஒன்றாக கரோனா அதிகம் உள்ள மாநிலத்தில் இருந்து உள்நாட்டில் மற்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்ய கரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடெங்கும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  மத்திய அரசு ஏற்கெனவே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போட அனுமதித்துள்ளதால் பல மாநிலங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   இவ்வாறு கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களால் கரோனா பரவாது என கூறப்படுகிறது.

அண்மையில் மத்திய விமான பயணத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களைச் சந்தித்த போது  அவர், இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களைச் சோதனை இன்றி உள்நாட்டில் பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து அனைத்து அமைச்சரக பிரதிநிதிகள்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருடன்  ஆலோசனை நடந்து வருகிறது. அதே வேளையில் மக்கள் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ளது.  எனவே உள்நாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை தேவை என முடிவு எடுப்பது மாநில அரசுகளின் முடிவைப் பொறுத்ததாகும்.  வெளிநாடுகளில் உள்ளது போல் தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment