சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் கடனைத் திரும்பச் செலுத்த கூடுதல் கால அவகாசம்கோரி ஒன்றிய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் வலியுறுத்துவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 10, 2021

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் கடனைத் திரும்பச் செலுத்த கூடுதல் கால அவகாசம்கோரி ஒன்றிய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் வலியுறுத்துவோம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் 12 மாநில முதல்அமைச்சர்களுக்கு கடிதம்

சென்னை,ஜூன் 10 தமிழ்நாட்டில் 23.60 லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. மொத்த முதலீடு 2.73 லட்சம் கோடி. நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவ னங்களில்

8 சதவீதம் தமிழ்நாட்டில் இயங்கு கின்றன. இந்தியாவிலேயே சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ் நாடு 3ஆவது இடத்தில் உள்ளது.

கரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பி செலுத்த கூடுதல்  கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இணைந்து வலி யுறுத்த வேண்டும் என்று 12 மாநில  முதல்அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு திடீரென்று கரோனா தொற்று அதி கரிக்கத் தொடங்கியது. இதனால் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊர டங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு கட்டமாக நிவாரண உதவியாக 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 2 ஆயிரம் வழங் கப்பட்டது. 2ஆவது கட்டமாக 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் இரு நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். மேலும், வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருக்க தெருக்களிலேயே மளிகை மற்றும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஆனாலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் பலர் வாங்கிய கடன் தவ ணைகளை கட்ட முடியாமலும், வட்டி கட்ட முடியாமலும் அவதிப் பட்டு வருகின்றனர். இது குறித்து முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (8.6.2021) எதிர்க்கட்சிகள் ஆளும் ஆந்திரா, பீகார், சட்டீஸ்கர், டில்லி, ஜார் கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்ப தாவது: தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றை பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்ற கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம். ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தினோம்.

இந்த நிலையில், நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, இந்திய பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று மாற்றி யமைத்துள்ளார். அதன்படி 18 வயது முதல் 45 வயதுக்கு உட் பட்டோர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் தடுப்பூசி இலவச மாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் கட னாளர்களை, குறிப்பாக குறு, சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கரோனா பெருந்தொற்றின் முத லாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் ஏற்பட் டுள்ளது.  2021 ஏப்ரல்- ஜூன் மாதங் களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக் கப்பட்டுள்ள சூழலில், கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்டது போன்ற நிவா ரணம் தற்போது அளிக்கப்பட வில்லை என்பதால், கடன்களை திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு கொண்டு சென்றுள்ளது.

எனவே, ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளை கொண்டுள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களை திருப்பிச் செலுத்து வதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத் திற்கும் நாம் அனைவரும் இணைந்து கொண்டு செல்ல வேண்டும். இக் காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப் படுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு கடிதத்தில் மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment