நுழைவுத் தேர்வுதான் தகுதியின் அளவுகோலா?

 சமூகநீதி, இட ஒதுக்கீடு என்று வரும்பொழுது

உஞ்சிவிருத்திப் பார்ப்பானிலிருந்து உச்ச பதவிகளில் இருக்கும் பார்ப்பான் வரை சுருதி பேதம் கிஞ்சிற்றும் இன்றி ஒரே ராகத்தில் தொண்டை கிழியப் பாடுவதைக் கேட்க முடியும்.

''ஏன் வேண்டும் போட்டித் தேர்வுகள்?'' எனும் தலைப்பில் 'தினமலர்' திரிநூல் ஏடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது (4.6.2021, பக்கம் 6).

'நீட்' தேர்வை எத்தனைப் பேர் எழுதுகிறார்கள்? தேசிய அளவில் நடத்தப்படும் +2 தேர்வு எண் ணிக்கை அதிகமாம்.

எத்தனைப் பேர் எழுதுகிறார்கள் என்பதல்ல முக்கியம்? இவர்களுடையே நோக்கமே வேறு! எத்தனைப் பேர் எழுதினால் என்ன?

பயிற்சி வகுப்புக்குச் செல்லாதவர்கள், நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கு இணையாக மோத முடியுமா? என்ற கேள்வியை இதே கட்டுரையில் 'தினமலர்' ஒரு பக்கம் எழுதிவிட்டு, கட்டுரையின் இறுதிப்பகுதியில் திறமையைப் பற்றிச் சிலாகிப்பதுதான் வேடிக்கை.

"நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக வாதாடுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களைப் பெற்ற அம்மாவோ, அப்பாவோ நோய்வாய்ப்பட்டு ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர் என வைத்துக் கொள்வோம். திறமையற்ற டாக்டர் உங்கள் பெற்றோருக்கு வைத்தியம் பார்த்தால் என்னாகும்?'' என்ற கேள்வியை எழுப்புகிறது 'தினமலர்.'

நோய்வாய்ப்பட்டு மருத்துவம் செய்யச் செல்லும் எவரும் எந்த டாக்டர்  எவ்வளவு மதிப்பெண் வாங்கினார் என்று தெரிந்துகொண்ட பிறகுதான் டாக்டர்களைத் தீர்மானிக்கிறார்களா?

மருத்துவத் தேர்வில் தங்க மெடல் வாங்கிய டாக்டர்கள்தான் கெட்டிக்கார டாக்டர்கள் என்று சொல்லுவதற்கான தரவுகள், புள்ளிவிவரங்கள் இருந்தால் 'தினமலர்' எடுத்துக்காட்ட வேண்டியது தானே!

தமிழ்நாட்டில் +2 தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில்தானே மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்தனர். அகில இந்திய போட்டிகளில் அந்த மாணவர்கள்தானே அதிகம் இடம்பெற்று வந்தனர்.

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் நுழைந்து படித்து வெளியேறியவர்கள் எல்லாம் தரமற்ற, தகுதியற்ற டாக்டர்களா?

இட ஒதுக்கீடே கூடாது - அதனால் தகுதி, திறமை அழிந்துவிடும் என்று ஒரு காலகட்டத்தில் காட்டுக் கூச்சல் போட்ட இதே 'தினமலர்' பார்ப்பன வகையறாக்கள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டது ஏன்? அப்பொழுது மட்டும் தகுதி திறமை ஒழிந்து போய்விடாதா?

பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினர் என்ற பெயரில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறதே - அதன்படி தாழ்த்தப்பட்டவர்களை விடக் குறைந்த அளவு மார்க் வாங்கிய பார்ப்பனர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதே அதனால் தகுதி திறமை தரைமட்டமாகி விட்டது என்று தர்ப்பைப் புல்லினால் 'தினமலர்கள்' எழுதியதுண்டா?

நீட்' வந்த பிறகு மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்தவர்கள், கிராமப் பகுதிகளில் படித்தவர்கள் எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளில் பெரும் சரிவு ஏற்பட்டதும், அதன் முழுப் பலனை கல்வி ரீதியாக ஏற்கெனவே முன்னேறிய கூட்டம் அனுபவித்ததுமான ருசியைக் கண்ட நிலையில், 'நீட்'டை விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்கின்றனர் என்பது பெரியார் மண்ணில் வாழும் ஒவ்வொருவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

பார்ப்பனர்கள் தங்கள் திருகு தாளங்களை திராவிடப் பூமியில் வைத்துக்கொள்ள வேண்டாம்!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image