தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம் மத்திய பா.ஜ.க. அரசின் தாமதமான கொள்முதலே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம் மத்திய பா.ஜ.க. அரசின் தாமதமான கொள்முதலே!

 வைரஸ் ஆராய்ச்சியாளர் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 26 இந்தியாவில் ஒருபுறம் தொற்று அதிகரிப்பும், மற்றொரு புறத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் தாமதமான தடுப்பூசி கொள்முதலே பிரச்சனைகளுக்குக் காரணம் என்று நாட்டின் மிகச்சிறந்த வைரஸ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ககன்தீப் காங் கூறியுள்ளார்.

கரோனா தடுப்பூசிக் கொள்முதலில் மத்திய பாஜக அரசின் கையாண்டுவரும் நடைமுறைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.கடந்த மார்ச்சிலேயே (2020) ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்கா 10 பில்லியன் டாலர்களை, கரோனா தடுப்பூசியில் முதலீடு செய்த நிலையில், இந்தியாவோ பெரிய கொள்முதலில் நாட்டம் செலுத்தவில்லை. முன்னுரிமை அளிக்கப்பட்டவர்களுக்காக சிறு, சிறு தடுப்பூசிக் கொள்முதல்களை மட்டுமே இந்தியா செய்தது.

சீரம் இன்ஸ்டிட்யூட் 11 மில்லியன் டோஸ்களையும், ,பாரத் பயோ டெக் 5.5 மில்லியன் கரோனா தடுப்பூசி டோஸ்களையும் முதல் கட்டத்தில் வழங்கின. முதல்கட்ட தடுப்பூசி செலுத் தும் நடவடிக்கைகள் ஜனவரி 16 அன்று தொடங்கியபோது, கரோனா களப் பணியாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன்பிறகு கூடுதல் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில்தான், டாக்டர் ககன்தீப் காங்கும், ‘கரோனா தடுப்பூசிக்கான கொள்முதலில், இந்தியாவின் தாமதமே தற்போதைய தடுப்பூசிப் பற்றாக்குறைக்குக் காரணம்' என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி விநியோகம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றிருப்பவரான டாக்டர் ககன்தீப் காங், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் நவம்பர் இறுதியிலேயே 700 மில்லியன் தடுப்பூசி டோஸ்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து விட்டன. அந்த நிலையில் தடுப்பூசிகள் உற்பத்தி சோதனை நிலையில்தான் இருந்தன. எனினும் எதிர்கால தேவையை உணர்ந்து செயல்பட்டன. இப்படி, மற்ற நாடுகள் தடுப்பூசிக்கான கொள்முதலில், முந்திக் கொண்ட நிலையில் இந்தியாவோ மிகப் பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதை தாமதித்தது. உதாரணமாக 2020 மார்ச் மாதம்- அமெ ரிக்கா, முக்கிய தடுப்பூசிகள் முழுவதும் தயாராகாத நிலையிலேயே 10 பில்லியன் டாலர்களைத் தடுப்பூசிக்காக முதலீடு செய்து விட்டது.

ஆனால், நாம் தடுப்பூசி கோரும் ஒப்பந்த அட்டவணையில் பின் தங்கி விட்டோம் என்பதுதான் உண்மை. உலகின் மற்ற நாடுகள் ஓராண்டில் உற்பத்தியாகும் தடுப்பூசி முழுவதும் தங்களுக்கு வேண்டும் என்று முன்கூட்டியே ஒப்பந்தம் கொடுத்து விட்ட நிலையில், இந்தியா எந்த சந்தையில் போய் தடுப்பூசிக்கு கொடுக்க முடியும்? இப்போதுள்ள நிலையில், ஜைடஸ் கெடில்லா, பயலாஜிக்கல்-, உள்பட தடுப்பூசி உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனங்களில் நாம் முதலீடு செய்து, அவர்களை வேகமாக உற்பத்தி செய்யுமாறு கூற வேண்டும். உற்பத்தியை அதிகப்படுத்த வலியுறுத்த வேண்டும். தற்போது இவர்கள் தடுப்பூசி உற்பத்தி செய்யும் வேகத்தின்படி பார்த்தால், இந்த ஆண்டின் பிற்பகுதியில்தான் நமக்கு தடுப்பூசி கிடைக்கும். என் றாலும், எவ்வளவு விரைவில் எவ்வளவு அதிகமாக உற்பத்தி செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று கூற வேண்டும். உங்கள் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தது என்றால் உங்களது தடுப்பூசிகள் அனைத்தையும் எடுத்து கொள்கிறோம், என்று கூறி டோஸ்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்யவேண்டும். இதுதான் தடுப்பூசி பற்றாக்குறையிலிருந்து மீண்டுவர தற்போதுள்ள ஒரே வழி. இவ்வாறு டாக்டர் ககன் தீப் காங் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment