கேதார்நாத்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

கேதார்நாத்?

 உத்தரகாண்டில் உள்ள ஒரு கோவில் கேதார்நாத். கடந்த 17 ஆம் தேதி அக்கோவில் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல் பூஜை நடத்தப்பட்டது.

உண்மை என்னவென்றால், கரோனா காரணமாக கடந்த ஆறு மாதங்களாகக் கோவில் திறக்கப்படவில்லை என்பதுதான்.

இப்பொழுதாவது நம் மக்களுக்கு புத்தி வருமா என்று தெரியவில்லை. கோவிட்-19 என்னும் வைரசுக்குமுன் சர்வ சக்திக் கடவுள்கள் சர்வசரண்டர்!'

உத்தரகாண்ட் முதலமைச்சர்  தீரத்சிங் கூறியதுதான் வயிறு குலுங்கும் தமாஷோ தமாஷ்! ‘‘கேதாரீஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்படி பிரார்த்தனை செய்கிறேன்'' என்று சொன்னதுதான் அந்தத் தமாஷ்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன.

ஜூன் 16, 2013 அன்று மாலை  கேதார்நாத் கோவிலுக்கு அருகில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து மந்தாகினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கட்டுக்கடங்காது பெரும் பாறைகளையும் அடித்துக் கொண்டு ஓடியது. வெள்ளத்தில் சிக்கிய கேதார்நாத் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கேதார்நாத்திலுள்ள கடைகள், விடுதிகள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பகுதியை மொத்தமாக அழித்துவிட்டது, சுமார் 40-க் கும் மேற்பட்ட மலைக்கிராமம் முற்றிலும் அழிந்துவிட்டது.  மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய 25,000  குஜராத்திகளை மோடி மீட்டதாகக் கூறி 2014 ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து சமூகவலைதளம் மற்றும் பாஜக ஹிந்துத்துவ ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தன்னை நாடி வந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியாத கேதாரீஸ்வரர்தான் பக்தர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பாராம், ஹி...! ஹி...!!

இதில் கவனிக்கவேண்டிய அண்டப் புளுகு - ஆகாயப் புளுகு ஒன்று உண்டு.

ரீடிஃமெயில் டாட் காம் செய்திப் பிரிவு குஜராத் அதிகாரிகளிடம் கேதார்நாத் பிரச்சினையில் குஜராத் அரசு எப்படி செயல்பட்டது என்று கேட்டபோது, நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநில அதிகாரி ஒருவர் அளந்து கொட்டியதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

பூகம்ப இயற்கைப் பேரழிவை ஏற்கெனவே அனுபவித்த குஜராத் பேரிடர் மீட்புக் குழு திறமையானது என்றும், அதன் திறமையை வைத்து முதலமைச்சர் மோடியால் காப்பாற்றப்பட்ட குஜராத்திகள் 25 ஆயிரம் பேர்களாம்!

கேட்பவன் கேனயனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளான் ஓட்டியது என்பானாம். அதேபோல், என்ன சொன்னார்கள்?

டேராடூனுக்கும் - கேதார்நாத்துக்கும் இடைப்பட்ட தூரம் 221 கி.மீ. 7 பேர் முதல் நெருக்கி அமர்ந்தால் 10 பேர் பயணம் செய்யும் ஒரு சிலஇன்னோவா' கார்மூலம் இரண்டே நாளில் 25 ஆயிரம் குஜராத்திகளை மீட்டார் மோடி என்று சொன்னது நினைவில் இருக்கிறதா?

நட்ட கல்லும் பேசுமோ!' - சித்தர் சிவவாக்கியம்.

 - மயிலாடன்

 

No comments:

Post a Comment