சமூக நீதிப் போராளியான சட்ட நிபுணர் சுப்பாராவிற்கு நமது வீரவணக்கம்

உச்சநீதிமன்றத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் வாதாடிய மூத்த வழக்குரைஞரும், சமூகநீதியில் ஆழ்ந்த பற்றுறுதியும் கொண்ட பண்பாளர், எமது அருமை நண்பர் சுப்பாராவ் அவர்கள் டில்லியில் நேற்று (2.5.2021) காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ந்து போனோம்!

வயதில் மூத்தவரானவர், ஆந்திர மாநிலம் தெனாலியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து பெரும் சட்ட அறிஞராக உயர்ந்தவர்.

மறைந்த ஜஸ்டிஸ் பி.எஸ்.. சுவாமி அவர்களுடனும், நம்முடனும் சமூகநீதி சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு உழைத்த சட்ட மேதை.

மண்டல் கமிஷன் அறிக்கை பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆணவத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறிய மூத்த சட்ட நிபுணர் பல்கிவாலாவுக்கு பதில் கூறி அவரை வருத்தம் தெரிவிக்க வைத்த வைராக்கிய வீரர்.

சமூகநீதி வழக்குரைஞர்கள் டிரஸ்ட் அமைய அவரும், நானும் கருநாடக சட்டநிபுணர் நண்பர் ரவிவர்மகுமார் அவர்களும் பொறுப்பாளர்கள்.

அவரது இழப்பு சமூகநீதிப் போராளிகளாகிய நமக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவருக்கும், அவரது குழுவினருக்கும், நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகநீதிப் போராளி சுப்பாராவ்காருவுக்கு நமது வீரவணக்கம்.

(கி.வீரமணி)

தலைவர்,

திராவிடர் கழகம்

3.5.2021              

சென்னை       

Comments