கோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

கோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்?

35 ஆயிரம் கோடி ரூபாயில் நாடாளுமன்றம் கட்டுவதைத் தவிர்த்து, கரோனா ஒழிப்பிற்குப் பயன்படுத்துக!

தமிழ்நாடு முதலமைச்சர் கோரும் நிவாரண நிதிக்கு உலகத் தமிழர்களே தாராளமாக வாரி வழங்கி உதவிக்கரம் நீட்டுவீர்! 

கோவிட் 19 - இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடும் இந்தக் காலகட்டத்தில், ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதைத் தவிர்த்து, அந்த நிதியை கரோனா ஒழிப்புப் பணிக்குத் திருப்பவேண்டும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் கோரும் நிவாரண நிதிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்கி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கரோனா தொற்று (கோவிட் 19) அதன் கோரத் தாண்டவம் தலைவிரித்தாடுகிறது - இரண்டாம் அலை வீச்சுமூலம்!

நாட்டில் எங்கணும் நோய்த் தொற்று, படுக்கை பற்றாக்குறை - மருந்து - தடுப்பூசி பற்றாக்குறை மட்டு மல்ல; இறந்த நோயாளிகளை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ போதிய இடப் பற்றாக்குறை.

நம் கவலையை மேலும் அதிகரிக்கிறது

வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் சில மாநிலங்களில் கங்கையில் பிணங்கள் மிதக்கும் பழைய நிலை திரும்பும் வேதனையான அதிர்ச்சிக் குள்ளாக்கும் காட்சிகள்! கண்காணிக்க ஒரு புதிய குழுவையே அரசுகள் இதற்கென போடும் விபரீத நிலை.

மூன்றாம் அலையின் அச்சுறுத்தல்பற்றியும், அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுப்பதும் நம் கவலையை மேலும் அதிகரிக்கிறது.

இவ்வளவு இருந்தும் மத்திய அரசு என்னும் பா... அரசு அதன் பங்களிப்பை சென்ற முறை முழுக் கட்டுப்பாட்டில் கரோனா தொற்று - சிகிச்சைபற்றி பொறுப்பு எடுத்து, ஒவ்வொன்றையும் கூறிக் கொண் டிருந்தது. ஆனால், முன்னும் பின்னும் முரண்பாடே இருந்தது.

மத்திய அரசின் தலையாய கடமை அல்லவா?

ஆனால், இப்போது நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், தனது நிதி உதவிகளைத் தாராளமாக செய்து, நடைமுறையில் பல்வேறு வசதிகளை மாநிலங்களுக்குச் செய்து தரவேண்டியது அதன் தலையாய கடமை அல்லவா?

இந்த காலகட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சியினரும் கூட்டாக பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு உடனடியாக பதில் கூட அவரிடமிருந்து வந்ததாகவோ, நிலைமையை சரிப்படுத்துகிறோம் என்ற உறுதி மொழியோகூட தந்த பாடில்லை என்பது வேதனைக் குரியதல்லவா?

இந்த காலகட்டத்தில், தடுப்பூசி கொள்முதலை மத்திய அரசு செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி, அனைவருக்கும் இளைஞர்கள் உள்பட - தடுப்பூசி போடும் நாடு தழுவிய நிலையை ஏற்படுத் துவதற்குப் பதிலாக, மாநிலங்களே பார்த்துக் கொள் ளுங்கள் என்று இப்பொழுது கூறி, தன் பொறுப்பிலிருந்து நழுவும் தோற்றத்தை உருவாக்கி விட்டது!

எதிர்க்கட்சிகள் கேட்பது தவறா?

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு, ஆக்சிஜனுக்குக் கடும் பஞ்சம் என்று நிலை உச்சத்திற்குச் செல்லும் நிலையில், நாடாளுமன்றக் கட்டடம் என்ற பெயரில் 35,000 கோடி ரூபாய் செலவழிப்பது தேவைதானா? அதை நிறுத்தி, அந்தப் பணத்தின் பெரும்பகுதியை கரோனா தொற்று ஒழிப்பிற்குப் பயன்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்பது தவறா?

இடிப்பாரை இல்லாத' ஆட்சியாக இருக்கவேண்டும் என்றால், அது ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியுமா?

சத்தீஸ்கர் மாநிலத்தின் (காங்கிரஸ்) முதலமைச்சர், தனது புதிய சட்டமன்ற வளாகம் அமைப்பதை நிறுத்தி வழிகாட்டியுள்ளாரே!

இதில் வீண்பிடிவாதம் தேவைதானா?

பஞ்சத்தில் அடிபடும் நிலையில், பன்னீரால் வாய் கொப்பளிப்பது போன்ற நிகழ்வுகள் தொடரலாமா?

மாநில முதல்வர்கள் பலரும், நிதியமைச்சர்களும், ‘‘தடுப்பூசி போன்ற மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி அதிவேகமாக நடைபெற வேண்டும்; உயிர்க் காப்பு பணிகள் புயல் வேகத்தில் தொடரவேண்டிய இக்கால கட்டத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விலக்குகளை அவற்றிற்குத் தரவேண்டும்; உடனடியாக அறிவிக்க வேண்டும்'' என்று நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் உள்பட பலரும் கோருவது நியாயம்தானே!

அதுமட்டுமா? சில வெளிநாட்டு ஏடுகளும், ஊடகங் களும் ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளன.

கைக்கெட்டியது வாய்க்கு எட்டவேண்டும்!

வெளிநாட்டினர் கருணையோடு அனுப்பிய உதவிக்கான மருத்துவக் கருவிகள் மற்றும் சில - இங்கே மத்திய அரசின் விதிகள் தளர்வுகள் இல்லாததால், விமான நிலையங்களிலிருந்து வெளியே வர முடியாத தேக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது!

இச்செய்திபற்றி ஆராய்ந்து உடனடியாக நிதிய மைச்சகம், வெளியுறவுத் துறை, மருத்துவத் துறை இணைந்து ஒரு விரைந்த செயல் திட்டத்தை அமுல் (‘கைக்கெட்டியது வாய்க்கு எட்ட') செய்திட வேண்டும்.

கரோனா ஏற்பட்டவுடன் (முதல் அலை) நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை மத்திய அரசு தன் வசமே ஆக்கிக் கொண்டதை விடுவித்து, அந்த நிதி முழுமையாகத் தடுப்பூசி வாங்கிப் போட, பயன்படுத்த உடனடியாக அனுமதிக்கவேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்மிகு தோழர் சு.வெங்கடேசன் வேண்டுகோள் நியாயமானது - ஆக்கப்பூர்வமானது. உடனடியாக மத்திய அரசு அதனை ஏற்று செயல்படவேண்டும்.

அபராதம் போட்டு கடுமையாக தடுக்க ஆணையிட்டிருப்பது சரியான முடிவு

நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஊரடங்கைகடிதோச்சி மெல்ல எறிக' என்னும் நிலை பயன் தரவில்லை; தேவையில்லாமல் பலர் வெளியே சுற்றும் வேதனையான நிலை உள்ளது; நோயின் விபரீத தாக்குதல்பற்றி இந்நிலையில் புரியாது அலைந்து திரிவதைத் தடுத்து அபராதம் போட்டு கடுமையாக தடுக்க ஆணையிட்டிருப்பது சரியான முடிவு.

மக்கள் ஒத்துழைப்புதான் தலையாயது; யாருக்காக - மக்களுக்காக, மக்கள் நலத்திற்காக, மக்கள் பாது காப்புக்காக - மருத்துவம், மக்கள் நலப் பணி புரிவோர் உயிரைத் துச்செமன மதித்து களத்தில் போராடும் போர் வீரர்களாகக் கடமையாற்றும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், ஒத்துழைப்பு நல்குவது என்பது அவசர அவசியம் அல்லவா!

வள்ளலார் பசிப் பிணி அகற்றும் திட்டம்'

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் பொறுப்பேற்றவுடன், கோவில் களில் நடைபெற்று வந்தஅன்னதானம்' திட்டத்தை சீரமைத்து, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக எல்லா வேளை உணவையும் அளிக்கும் ஏற்பாட்டை விரிவாக்கி இருப்பது மிகவும் பாராட்டத் தக்கது. ‘வள்ளலார் பசிப் பிணி அகற்றும் திட்டம்' என்றுகூட பெயர் சூட்டலாம்!

நிதி உதவி கோரியுள்ளார் முதலமைச்சர்! உலகத் தமிழர்களே, கருணை உள்ளம்மிக்கோரே, கனிவுடன் முன்வந்து உதவுக.

உதவி என்னும் பெருங்கரத்தை நீட்டுங்கள்! நீட்டுங்கள்!!

‘‘புலம் பெயர்ந்த உடன்பிறப்புகளே, மானுடப் பற்றாளர்களே, உங்கள் உதவி என்னும் பெருங்கரத்தை நீட்டுங்கள்! நீட்டுங்கள்!! நீட்டிக் கொண்டே உதவுங்கள்'' என்றும் நன்றியுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருப்பதை மறவாதீர்!

உடனே செயல்படத் தொடங்குங்கள்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.5.2021

No comments:

Post a Comment