வாடாப் புரட்சிப் பூ மரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

வாடாப் புரட்சிப் பூ மரம்!

வயது என்பது வெறும் எண்ணிக்கைதான் என்பதற்குச் சமகால உதாரணம் கே.ஆர்.கவுரியம்மா. கேரளத்தின் முதல் பெண் அமைச்சரான இவர், அண்மையில் நூறு வயதைக் கடந்திருக்கிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயது எனப் பலராலும் நம்பப்படும் இந்த வயதில் முதுமையை ஊதித்தள்ளிவிட்டுப் பொதுவாழ்வில் நேர்மையோடும், உற்சாகத்தோடும் நடைபோட்டுக்கொண்டிருந்தவர் கவுரியம்மா.

ஜனாதிபத்திய சம்ரக் ஷண சமிதிஎன்னும் பெயரில் கட்சி தொடங்கிய கவுரி,  அதன் பொதுச்செயலாளராகத் இருந்தவர்.  சமரசத்துக்கு இடமின்றி வெளிப்படையான விமர்சனங்களை முன் வைத்தவர். அகவை நூறைத் தொட்ட இவர், கேரள மக்களால் குஞ்சம்மை (குட்டியம்மா) என்றும், கவுரியம்மா என்றும் அன்பொழுக அழைக்கப்படுபவர்.

அரசியல் அரங்கில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த அன்றைய காலத்திலேயே அதில் தடம்பதித்தவர் கவுரி. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு கேரளம் உருவாவதற்கும் முன்பே தொடங்கிய அரசியல் பயணம் அவருடையது. அந்த வீச்சை அவர் இன்னும் தக்கவைத்துக் கொண்டிருப்பதே கவுரியம்மாவைத் தன்னிகரற்ற தலைவராக முன்னிறுத்துகிறது.

எந்தவொரு பிரச்சினையிலும் கவுரியம்மா என்ன சொல்கிறார் என உன்னிப்பாகக் கவனித்தனர் கேரள மக்கள். அதனால்தான் அவரது நூறாம் பிறந்தநாளான்று கேரள சட்டப்பேரவைக்குச் சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டது. அந்த அளவுக்கு தம் இறுதி காலம் வரை வலம் வந்தார் கவுரியம்மா.

சட்டப்பேரவையில் இது பற்றிப் பேசிய கேரள அவைத் தலைவர் ராமகிருஷ்ணன், கவுரியம்மாவை, என்றும் வாடாத புரட்சிப் பூமரம் எனக் குறிப்பிட்டார். அப்படி என்ன சாதனைகளை இவர் நிகழ்த்திவிட்டார்? கேரளம் பிறப்பதற்கு முன்னரே இருந்த திருக்கொச்சி சமஸ்தானத்தில் 1952, 1954 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 1929 ஜூன் 21 அன்று ஆலப்புழை மாவட்டத்தில் பிறந்த கவுரியம்மா, தன் சகோதரன் சுகுமாரன் வழியாக இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். கேரளத்தில் அன்றைய காலத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த ஈழவர் சமூகத்தில் இருந்து சட்டம் படித்த முதல்பெண்ணும் இவர்தான்!

பெண்கள் பாதுகாப்பு மசோதா

1957இல் நடந்த பொதுத்தேர்தலிலும் வாகைசூடினார் கவுரியம்மா. அப்போது முதல்வராக .எம்.எஸ்.நம்பூதிரிபாட் பதவியேற்றார். உலகிலேயே முதன்முதலில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த முதல் இடதுசாரி அரசும் அதுதான். அதில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த கவுரியம்மா செய்த புரட்சிகள் வார்த்தைகளில் அடங்காதவை. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றும், ஒருவரால் இவ்வளவு நிலமே வைத்துக்கொள்ள முடியும் எனவும் நிலச்சீர்திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார்.

கவுரியம்மாவின் அரசியல் வரலாறு அடுத்த தலைமுறைக்கான பாடம். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கட்சியில் இருந்துகொண்டு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பலன் அனுபவிப்பதுண்டு. ஆனால், கவுரியம்மா தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்தின் மீதான பற்றால் குடும்ப வாழ்வையே தியாகம் செய்தவர். தன் சக கட்சிக்காரரான டி.வி.தாமசைக் காதலித்து மணம்புரிந்திருந்தார் கவுரியம்மா. 1957இல் அமைந்த முதல் இடதுசாரி அரசில் கணவன், மனைவி இருவருமே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

1967இல் மீண்டும் .எம்.எஸ். நம்பூதிரிபாட் இரண்டாம் முறையாக முதல்வரானார். அப்போதும் கவுரியம்மாவும் தாமசும் அமைச்சர்கள் ஆனார்கள். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைச்சர்களுக்கான குடியிருப்பில் இருவருக்கும் அடுத்தடுத்த வீடு ஒதுக்கப்பட்டது. கணவன், மனைவியான இருவரும் வீடுகளுக்கு இடையே இருந்த சுவரை எடுத்துவிட்டு வாழ்ந்தனர்.  பொதுச்சேவை, குடும்பம் என கவுரியம்மாவின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தபோதே இடதுசாரி இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியை நோக்கி நகர்ந்தார் கவுரியம்மா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தங்கினார் அவருடைய கணவர் தாமஸ். இது தம்பதிக்குள் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தியது. 44 ஆண்டு கால சட்டப்பேரவை உறுப்பினர் பணிக் காலத்தில் 20 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தார் கவுரியம்மா. இயக்கத்தின் மீதும், கொண்ட கொள்கையின் மீதும் காதலோடு இருந்த கவுரியம்மாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறின.

1987இல் கவுரியம்மாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ‘இந்த நாடு கவுரியம்மாவின் சொந்த நாடுஎன்னும் முழக்கம் கடைக்கோடி கிராமம்வரை கொண்டுசெல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் ஆட்சியும் அமைத்தது. ஆனால், கட்சிக்குள் கவுரியம்மாவுக்கு எதிராக ஒலித்த கலகக்குரலால் .கே.நாயனார் முதல்வர் ஆனார். இது ஒரு சமூகப் பிரச்சினையை உள்ளடக்கிய வரலாறு. ஒருகட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 1994இல் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.

ஆலப்புழையில் இருந்த கவுரியம்மாவின் வீட்டின் முன்பு கண்ணீரோடு மக்கள் திரண் டனர். அவர்களுக்கான தலைமையேற்க, மக்க ளை வழிநடத்த 75 வயதில், ஜனாதிபத்திய சம்ரக் ஷண சமிதியைத் தொடங்கினார். தொடர்ந்து தேர்தல்களைச் சந்தித்தார். ஏற்றத் தாழ்வுகள் தொடர்கதையாயின.

இடதுசாரி இயக்கத்தில் இருந்து வெளியே வந்தபின்னரும், வெகுமக்களால் தோழராகவே உணரப்பட்ட அவர், 2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வென்றார். அப்போது அது விமர்சனமாக எழுந்தது. காங்கிரஸ் அரசு அவருக்கு விவசாயத் துறை அமைச்சர் பதவி வழங்கியது. காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சராக இருந்தபோதும், அவரிடம் இருந்து வீரியமிக்க இடதுசாரியே வெளிப்பட்டார். 87 வயதில் அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்கு உண்டு.

2011-ல் சேர்த்தலா தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். அப்போது அவருக்கு 92 வயது. முகமன் பாடி எப்போதுமே அவருக்குப் பழக்கம் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள சட்டப்பேரவையில் பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் கேரளத்தின் முதல் அமைச்சரவையில் இருந்தவர் என்னும் முறையில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

அந்த நிகழ்விலும்கூட, “நானெல்லாம் எம்.எல்.ஏவாக இருந்தபோது நள்ளிரவில்கூடப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குப் போவேன். இப்போது பகலில்கூட அது முடியவில்லை. முதல்வர் பினராயி விஜயன் சேலைகட்டிப் போனால்தான் பெண்களின் கஷ்டம் புரியும்எனப் பேசினார். இந்த வெளிப்படையான பேச்சுதான் அவரது ஆளுமை என்பது பினராயி விஜயனுக்கும் தெரியும். அதனால்தான் அவர் பிறந்தநாளுக்கு நேரில்வந்து வாழ்த்திவிட்டு ஆசி பெற்றுச் சென்றார்.

கட்சியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே  கைது செய்யப்பட்டது தொடங்கி கவுரியம் மாவின் வாழ்வில் நடந்த ஒவ்வொன்றின் பின்னாலும் வரலாறு வரிசை கட்டும். கேரள அரசியல் வரலாற்றின் தொடக்கப்புள்ளியில் இருக்கிறார் அவர். கேரள விவசாயிகள் சங்கத் தலைவர், கேரள மகளிர் சங்கத் தலைவர் எனத் தான் ஏற்ற பதவிக்கெல்லாம் பெருமை சேர்த்த  அம்மா தன் 102ஆம் வயதில் முடிவெய்தினார். (11.5.2021) இவரது காலம் 14.7.1919 - 11.5.2021. இந்திய சமூக அமைப்பில் பெண்கள் அதுவும் ஒடுக்கப்பட்ட சமூத்தைச் சேர்ந்தவர்கள் முன் வரிசைக்கு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல! போர்க்குணமும், தியாக உணர்வும், இலட்சிய வேட்கையும் கொண்ட கவுரியம்மாவை கவுரவமான இடத்தில் கொண்டு சேர்த்தது. வாழ்க அந்த வீராங்கனை!

No comments:

Post a Comment