துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட படுகொலை மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 12, 2021

துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட படுகொலை மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

சிலிகுரி, ஏப்.12- "மேற்கு வங்கத்தின் கூச் பெகார் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு திட்ட மிட்ட படுகொலை" என்று அம்மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு 10.4.2021 அன்று நடை பெற்றது. இதில், கூச் பெகார் மாவட்டத்தில் உள்ள சிட்லக்குச்சி தொகுதிக்கு உட்பட்ட 126 ஆவது வாக்குச்சாவடியில் ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. அந்தக் கும்பல் தாக்கியதில் பாஜக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது சிஅய்எஸ்எப் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். ஆனால், படை வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்திய அந்த கும்பல், அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளையும் பறிக்க முயன்றனர். இதன் தொடர்ச்சியாக, சிஅய்எஸ்எப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் காரணமாக, அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்தவிவகாரம் குறித்துமுதல்வர்மம்தா செய்தி யாளர்களிடம் நேற்று (11.4.2021) கூறியதாவது: பாஜக அரசின் கைப்பாவையாக மத்திய பாது காப்புப் படையினர் மாறிவிட்டனர் என்பதற்கு கூச்பெகார் துப்பாக்கிச் சூடு சம்பவமே சிறந்த உதாரணம். மேற்கு வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்தே, பொதுமக்கள் மீது மத்திய பாதுகாப்புப் படையினர் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். கூச் பெகாரில் அப்பாவி பொதுமக்கள் 4 பேரை சிஅய்எஸ்எப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட படு கொலை ஆகும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரி லேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. எனினும், இது தொடர்பான உண்மைகளை தேர்தல் ஆணையம் மறைத்து வருகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் தாக்கத்தால் இரண்டு நாள்களாக என்னால் உறங்க முடியவில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் ஒரு தகுதியற்ற பிரதமர் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை யில்லை. நாட்டு மக்கள் மீது அடக்குமுறைகளை கையாண்டு வரும் பாஜகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.

இவ்வாறு மம்தா கூறினார்.

No comments:

Post a Comment