மூன்று முக்கிய மருந்துகள்!

 கரோனாவின் முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை தாக்கி மக்களைக் கிறுகிறுக்க வைத்துவிட்டது!

அமெரிக்காவில் உள்ள வாசிங்டனின் ‘‘சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ் எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி'' அமைப்பின் இயக்குநர் பிரின்ஸ்டன் டிஸ்கலைன் பல்கலைக் கழகத்தின் தொற்று நோயியல் துறை விரிவுரையாளர் ரமணன் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ள அபாய அறிவிப்பு மிகவும் முக்கியமானது!

இரண்டாவது அலை மட்டுமல்ல; மூன்றாவது அலையும் பாய்ந்திட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். உண் மையைச் சொல்லப்போனால், இந்தியாவின் தலைநகரமான டில்லி நான்காவது தாக்குதலில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தைப்பற்றி அவர் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது.

‘‘தடுப்பூசித் தயாரிப்பில் உலகிலேயே மிகப்பெரிய நாடு இந்தியா. ஒரு நாளைக்கு 2 புள்ளி 2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளையே தயாரிக்கிறது. இது இன்னும் சில நாள்களில் 3 மில்லியனைத் தொடலாம். ஆனால், இந்தியா ஒரு நாளைக்கு 5 மில்லியன் அல்லது அதற்கு மேலானவர்களுக்குத் தடுப்பூசி போட நினைத்தால், நிச்சயம் பற்றாக்குறை ஏற்படும். தினசரி 2 மில்லியன் டோஸ், அதில் வேஸ்டேஜையும் சேர்த்துக் கணக்கிட்டால் 70 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆகும். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம் இந்த இலக்கை அடையத் தடையாக இருக்கும்'' என்கிறார். (‘ஆனந்தவிகடன், 28.4.2021, பக்கம் 101).

உண்மை நிலை இவ்வாறு இருக்க, தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று திருப்பித் திருப்பிக் கூறிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க சக்தியுள்ள நிறுவனங்கள் ஏராளமிருந்தும் இரு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அந்த உரிமை அளிக்கப்படுவது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

உலகிலேயே இந்தியாவில்தான் தடுப்பூசியின் விலை குறைவு என்று பிரதமர் அறிவித்த சொற்களின் ஈரம் காய்வதற்கு முன்பாகவே ஒரு டோஸ் தடுப்பூசி விலையை இருமடங்காக அந்த நிறுவனங்கள் உயர்த்திவிட்டன.

தொடக்கத்தில் மத்திய அரசே தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. நிலைமை கடுமையான இந்தக் காலகட்டத்திலோ, இனி மாநில அரசுகளே நேரிடையாகக் கொள்முதல் செய்யும் என்று கையை விரித்துவிட்டது.

கோவி ஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம் மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை 150 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 250 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தது. இனி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்; தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்று விலையை உயர்த்திவிட்டது.

நியாயமாக தேசிய அளவில் இந்தப் பணியை மேற் கொள்ளவேண்டியது மத்திய அரசுதானே!

இந்த உயிர்ப் பிரச்சினையில் தடுப்பூசியின் விலையைக் கட்டுப்படுத்தும் கடமையும், அதிகாரமும் மத்திய அரசிடம் இல்லையா - கிடையாதா? இரண்டே தனியார் நிறுவனங் களுக்கு உற்பத்தி செய்யும் உரிமையைக் கொடுத்ததால்தானே இந்த நிலைமை!

தடுப்பூசிப் பிரச்சினை இது என்றால், ஆக்சிஜன் பிரச்சினை இரண்டாவதாகும். இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லவே இல்லை. தேவைக்கான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என்று மத்திய அரசு நீட்டி முழங்குவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால், நாள்தோறும் வரும் செய்திகள், அது தவறான தகவல் என்பதைப் பறையடித்துச் சொல்லுகின்றன.

ஆக்சிஜன் இல்லாமையால் நோயாளிகள் மரணம் என்று, இந்தியாவின் தலைநகரமான டில்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கவில்லையா?

மூன்றாவதாகக் கரோனா தொற்றுநோயாளிகளுக்குத் தேவையான மருந்துரெம்டெசிவிர்'' என்பதாகும்.

இம்மருந்து தாராளமாகக் கிடைக்கிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் சொல்லுகிறார். ஆனால், இந்த மாத்திரைக்குத் தட்டுப்பாடு என்ற நிலையை உருவாக்கி கருப்புச் சந்தையில் (பிளாக்கில்) பல மடங்கு விலையை உயர்த்தி விற்கப்படும் செய்திகளும் வந்து கொண்டுதான் உள்ளன.

முதல்கட்ட தொற்றை வென்று விட்டோம் என்று தோள் தூக்கிய இந்திய அரசு, இரண்டாவது அலையில் தோற்று விட்டோம் என்று கூறப் போகிறதா? இல்லை எந்த இடத்தில் தவறு என்பதை நிபுணர்களுடன் ஆலோசித்து சரியான பாதையில் பயணிக்கப் போகிறதா என்று நாடே எதிர்பார்க் கிறது. இதில் கண்டிப்பாக அரசியல் பார்வை இல்லை, இல்லவே இல்லை!

Comments