கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 28, 2021

கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம்

புதுடில்லி, ஏப்.28 கரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டத்தொடங்கி இருக்கின்றன.

கரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இந்தியா, 2ஆவது அலையை வீழ்த்துவதற்காக போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கி தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள்.

இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டத்தொடங்கி இருப்பது சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும், உலக சுகாதார நிறுவனம், அய்ரோப்பிய யூனியன் போன்றவையும் அவசர மருத்துவ உதவியை இந்தியாவுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளன.

அவசர மருத்துவ உதவி

இந்த நிலையில் இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள், திரவ ஆக்சிஜன் கண்டெய்னர்கள், வென்டி லேட்டர்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை வான் வழி யாகவும், கடல் மார்க்கமாகவும் அனுப்பி வைக்க முன்வந்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், இந்தியாவுக்கான மருத்துவ வினியோகத்தில் 8 ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு 10 ஆண்டுகளுக்கு இடைவிடாத ஆக்சிஜன் விநியோகம் செய்ய முடியும் என தெரிவித்தது.

10 ஆயிரம் நோயாளிகளுக்கு

தினமும் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வினியோகிக்க ஏற்ற வகையில் 5 ஆக்சிஜன் கன்டெய்னர்கள், 28 வென்டிலேட்டர்கள், 200 மின்சார சிரிஞ்ச் பம்புகளையும் பிரான்ஸ் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு கரோனாவுக்கு எதிரான போரில் வளங்களை திரட்டுவதற்கும், உதவுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப் பதற்கும் அமெரிக்காவின் 40 முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் ஒன்றிணைந்துள்ளனர்.

30 ஆயிரம் செறிவூட்டிகள்

அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்க இந்திய மூலோபாய மற்றும் கூட்டு மன்றம், வர்த்தக வட்டமேஜை ஆகியவற்றைக் கொண்ட இதன் பணிக்குழு 20 ஆயிரம் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களை (செறிவூட்டிகள்) இந்தியாவுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளது. இந்த வார இறுதியில் 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்து சேரும் என டெலாய்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புனித் ரெஞ்சன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment