கருநாடக பாஜக அரசைக் கண்டித்து போராட்டம்

பெங்களூரு,ஏப்.7- ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருநாடக மாநில போக்குவரத்து ஊழியர்கள் கடந்த டிசம்பரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது , பாஜக அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 4 மாதமாகியும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, அம் மாநில போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கருநாடக மாநில பாஜக அரசுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக எல்லையான ஓசூரில் இருந்து கருநாடகத்துக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர்

25வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்க அனுமதிக்க  மராட்டிய  முதல்வர் கோரிக்கை

மும்பை,ஏப்.7- மராட்டிய மாநிலத்தில் கூடுதலாக 1.5 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும், 25 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மகாராட்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி, தற்போது 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

இதில், “மராட்டிய மாநிலத்தில் கூடுதலாக 1.5 கோடி கரோனா தடுப்பூசி டோஸ் வழங்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் மும்பை, புனே, தானே, நாசிக், அவுரங்காபாத், நாக்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கரோனா தொற்று இளம் தலைமுறையினரை அதிகம் பாதிப்பது கவலை அளிக்கிறது. எனவே, மாநில அரசு தொற்று நோயை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 25 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments