பிரச்சாரக் களமாக இருந்தாலும் - தேர்தல் களமாக இருந்தாலும் பெரியார் என்பவர்தான் நமக்குப் பேராயுதம் - போராயுதம்!

 புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை

திருச்சி, ஏப்.7 ‘‘பிரச்சாரக் களமாக இருந்தாலும் சரிதேர்தல் களமாக இருந்தாலும் சரி - பெரியார் என்பவர் தான் நமக்குப் பேராயுதம் - போராயுதம்'' என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புத்தகங்கள் வெளியீட்டு விழா

திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை, அன்னை .வெ.ரா. மணியம்மையார் அரங்கில் மார்ச் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  நடைபெற்ற  புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் புத்தகங்களை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இது அரசியல் மேடையல்ல - இலக்கிய மேடை.

மிகத் தெளிவாக சொல்லவேண்டுமானால், கடன் வாங்குவது எதற்காக என்றால், ஆக்க ரீதியான திட்டங்களை செயல்படுத்துவதற்காக அல்ல -  வட்டி கொடுப்பதற்காகத்தான். நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘‘கூரை ஏறி கோழி பிடிக்க முடி யாதவன்; வானத்தைக் கீறி வைகுந்தத்தைக் காட்டுகிறேன்'' என்று சொல்வது போன்று - இல்லாத வைகுந்தத்தைக் காட்டுவதுபோன்றதுதான்.

துறையூரில் சுயமரியாதை

இயக்க மாநாட்டில்....

துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில்  அண்ணா அவர்கள் சொல்கிறார்,

‘‘தமிழ்மொழி, எந்த ஆட்சி வந்தாலும் சரி, தமிழர் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவைகள் சில உள்ளன. அவர்களுக்கு எந்தக் கட்சியின்மீது அபிமானம் இருப்பினும், தமிழரின் ஜீவ நாடி தளரவிடலாமா?'' என்றார்.

இதற்காகத்தான் இன்றைக்குப் போராட்டமே - அதற்காகத்தான் அரசியல் போராட்டம். இல்லை யென்றால், தேர்தலில் நிற்காத இயக்கமான திராவிடர் கழகம், ஏன் இவ்வளவு முனைப்புக் காட்டவேண்டும்? தேர்தலுக்கு நிற்கின்றவர்களைவிட, அதிகமாகக் கவலைப்படுகின்றவர்கள் நாங்கள்தான். ஏனென்றால், ஒரு கட்சியில் இருக்கும் அரசியல்வாதி, வெற்றி பெறு கின்ற கட்சிக்கு தாவிவிடுவார். இது மிகச் சாதாரணம்.

உள்ளபடியே அண்ணாவை மதிப்பவர்களாக இருந்தால், அண்ணா பேசுவதைக் கேட்கட்டும்.

அண்ணாவை  ஆளாக்கியவர்

தந்தை பெரியார்

‘‘அந்த ஜீவநாடிகளுக்கு ஆபத்து வரக்கூடுமா? காலம் மாறுகிறதல்லவா? புதிய புதிய ஆபத்துகள் வரலாம்'' என்றார்.

இதுதான் அண்ணாவினுடைய தொலைநோக்கு. அரசியல்வாதியாகவோ, அரசியல் வியாதியாகவோ இன்றைக்குப் பலர் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் ஞானியாக இருக்கிறவருடைய சிந்தனை இருக்கிறதே - அண்ணாவை  ஆளாக்கியவர் தந்தை பெரியார்  -  கொள்கையால் அவர் ஆளாக்கப்பட்டார் - கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

இதே திருச்சியில், சிலை திறப்பு நிகழ்விற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் சொன்னார்.

செப்டம்பர் 17, 1967 இல்.

அண்ணா அவர்களுடைய தொத்தா (சின்னம்மா)விடம், ‘‘எம்.., படித்துக் கொண்டிருந்தாரே, உங்கள் பையன் என்ன வேலையில் இருக்கிறார் இப்பொழுது?'' என்று ஒருவர் கேட்டார்.

யாரோ, ஈரோட்டில் இருந்து ஒருவர் வந்தார்; பிள்ளைப் பிடிப்பதுபோன்று அவரைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்'' என்று தொத்தா சொன் னாராம்.

இந்தத் தகவலை மேடையில் அண்ணா அவர்கள் சொன்னபொழுது, தந்தை பெரியார் அவர்கள் ரசித்து சிரித்துக்கொண்டே இருந்தார். நாங்கள் எல்லோரும் அவருடைய பக்கத்தில் இருந்தோம்.

ஜீவநாடிகள் காப்பற்றப்படவேண்டும் என்ற பார்வையில்தான்

அண்ணா மேலும் தன் உரையில்,

‘‘எப்பாடுபட்டேனும் அவைகளைக் காப்பாற்றியே தீரவேண்டும். அந்த ஜீவநாடிகள் மிக முக்கியம்'' என்றார்.

இப்பொழுது அந்த ஜீவநாடியைக் காப்பாற்றுகின்ற போர்தான் தேர்தல். ஆகவே, தேர்தலை, திராவிடர் கழகம் என்ன பார்வையில் பார்க்கின்றதென்றால், ஜீவநாடிகள் காப்பற்றப்படவேண்டும் என்ற பார்வையில்தான்.

1. தமிழ் மொழி

2. வகுப்புவாரி பிரதித்துவம் - சமூகநீதி

3. இந்து மத தர்ம பரிபாலன சட்டம்.

நீதிக்கட்சி ஆட்சியின்போது பனகால் அரசர் கொண்டுவந்தது.  தர்மம் தழைக்கவேண்டும் என்று அதைச் செய்தார். அந்தத்தர்ம துட்டு' நியாயமாகச் செலவழிக்கப்படவேண்டும் அல்லவா?

இன்றைக்கு அதைத் தலைகீழாகச் செய்கிறார்கள்.

என்ன செய்கிறார்கள் என்றால், ஈஷா சாமியார் ஒரு பக்கமும்,  மற்றவர்களும் சேர்ந்து ஒரு பெரிய திட்டம் போட்டுள்ளார்கள். எல்லாவற்றையும் பழைய அளவிற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள ஒரு வழக்கு இருக்கிறது.

ஆகவே, மிக முக்கியமான அளவிற்கு, எதை எதையெல்லாம்         திராவிட இயக்கம் செய்ததோ - அதையெல்லாம் தலைகீழாக ஆக்கவேண்டும் என்று செய்து -இப்பொழுது தலைகீழாக வந்தாயிற்று.

நீட்' தேர்வினால் நம்  பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடையாது. பட்டப் படிப்புப் படிக்கவேண்டும் என்றால், அங்கேயும் நீட் தேர்வு வரப் போகிறது. இப்படி எல்லாவற்றிற்கும் ஆபத்து என்றால், ஒரே பதில் ஏப்ரல் 6 ஆம் தேதிதான்.

மறைந்த ஜீவா அவர்களின்

மகள் திருமணத்தில்...

7.6.1967 ஆம் ஆண்டு திருச்சி பெரியார் மாளிகை யில் மறைந்த ஜீவா அவர்களின் மகளுக்குத் திரு மணத்தை  அய்யா நடத்தி வைக்கிறார். அப்பொழுது முதலமைச்சராக இருந்த அண்ணா, குன்றக்குடி அடிகளார் போன்றோர் உரையாற்றினார்கள்.

அண்ணா பேசுகிறார்!

அந்தத் திருமணத்தில் அண்ணா அவர்கள், அவரு டைய மிக முக்கியமான அனுபவத்தைச் சொல்கிறார்.

‘‘நமது தமிழ் நாட்டில் மட்டும், வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப் பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும், ஒருவர் எஞ்சினீயராகவும், ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். வீட்டில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின் போது, அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக்காட்டிஅதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான், இவன் அவனுக்கு அடுத்தவன், எஞ்சினீயராக இருக் கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள்என்று கூறி, பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார். அது போன்று பெரியாரவர்கள், தம்மாலே பயிற்சியளிக்கப் பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தாலும்அவன் என்னிடமிருந்தவன்; இவன் என்னுடன் சுற்றியவன்என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பெருமை இந்தியா விலேயே ஏன்? உலகிலேயே பெரியார் அவர்களுக்குத் தான் உண்டு'' என்று உரையாற்றினார்.

 நம் நாட்டு மக்கள் யாரையெல்லாம் சாமியாராக்குகிறார்கள் பார்!’

‘‘நாம் மனித இயற்கையின் பாற்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். நான் பெரியாருடன் இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன் அரித்துவாருக்குப் பெரியாருடன் நானும் சென்றேன். கங்கைநதி தீரத்தில் அவர் கம்பீரமாக நடந்து செல்கையில் வீசிய தென்றல் பெரியாரின் வெண்தாடியைத் தழுவி அசைத்து, அவர்மேல் போட்டிருந்த மஞ்சள் சால்வையையும் அசைத்துச் சென்றது. எனக்கு அவர் கம்பளிக்கோட்டு வாங்கிக் கொடுக்காத காரணத்தால், நான் குளிரால் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் பின் சென்றேன். அது குருவுக்குப்பின் சீடன் மிகுந்த பயபக்தியுடன் செல்வது போல் இருந்தது. பெரிய சாமியார் என்று அவரையும், அவருக்குப்பின்  கைகட்டிச் சென்ற என்னை அந்தச் சாமியாரின் (பெரியாரின்) சீடன் என்றும் கருதி, வழி நெடுக எங்கள் காலில் விழுந்தனர்.

பெரியார் அவர்கள் என்னைப் பார்த்து, ‘நம் நாட்டு மக்கள் யாரையெல்லாம் சாமியாராக்குகிறார்கள் பார்என்று சொன்னார்.

பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால் தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முடியும் என்றும், அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென்பதற் காக வும் பாடுபட்டுக் கொண்டு வருகிறோம்'' என்றார் அண்ணா.

அப்படிப்பட்ட தமிழ் உணர்வுக்கு ஆளாகி, இன்றைக்கு அந்தத் தமிழ்  என்ற உணர்வை வைத்துக்கொண்டு, அதனைப் பாதுகாத்து வரக்கூடிய உணர்வு என்பது, அது காலங்காலமாக இந்த மண்ணில் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று.

எனவேதான், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு வரக்கூடாது என்பதற்காக இந்த நூல்கள் பயன்படு கின்றன.

மனித ஜீவனுடைய மிக முக்கியமான அறிவுச் சுரங்கள் - ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டதினால்தான், இந்தக் கருவி (ஒலி பெருக்கி) நமக்குக் கிடைத்தது; மேலே சுற்றுகின்ற மின் விசிறி நமக்குக் கிடைத்தது.

இன்றைக்கு இவ்வளவு பெரிய ஊர் அடங்கல் - ஊர் முடங்கல் - வீட்டிற்குள்ளேயே நாம் அடங்கிக் கிடந்தோம் - அந்த சூழ்நிலையில், நம்மை ஒரே ஒரு கருவிதான் காப்பாற்றியது. அந்தக் கருவி என்ன? நம்முடைய கையில் இருக்கும் செல்போன். அதை வைத்துத்தான் வீட்டிலிருந்தேபடியே எல்லோரு டனும் தொடர்பு கொண்டோம்.

பகுத்தறிவின் பயன்!

பிறகு ஜூம் மூலம் காணொலி நிகழ்வினை நடத்தினோம். இவையெல்லாம் யார் கண்டுபிடித்தது? இது பகுத்தறிவின் பயன் அல்லவா! விஞ்ஞானத் தினுடைய குழந்தை அல்லவா!

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக் காவது செல்போன் என்றால், என்னவென்று தெரியுமா?

42 ஆயிரம் ரிஷிகள் என்று சொல்கிறார்களே, அவர்களுக்காவது தெரியுமா?

இவனுக்கும் சேர்த்து இன்றைக்கு வீடியோ கான்பரன்சிங் நடைபெறுகிறது.

கரோனா தொற்று இராமன் சிலையைத் தாக்கி விடப் போகிறது என்று, அந்த சிலைக்கு போர்வை போடுகிறார்கள்; முகமூடி அணிவிக்கிறார்கள்.

‘‘சர்வ சக்தி படைத்த கடவுளுக்கே'' - கரோனா வினுடைய சர்வ சக்தியிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முகமூடியும், போர்வையும் அணிவிக்கிறார்கள்.

பகுத்தறிவின்மூலம் மூடநம்பிக்கைகளைத் தோற்கடிக்க முடியும்!

பகுத்தறிவின்மூலம்தான், இதுபோன்ற மூடநம்பிக் கைகளைத் தோற்கடிக்க முடியும்.

எனவே நண்பர்களே,  அன்னை மணியம்மையார் புத்தகத்திலிருந்து சில தகவல்களை சொன்னார்கள் இங்கே.

‘‘பெண்களைப்பற்றி பெரியார் அவர்கள் சொல் லும்பொழுது,

பெண்கள் அலங்கார பொம்மைகளா?

பெண்கள் என்ன படுக்கையறை பதுமைகளா?

பெண்கள் நல்ல சமையல்காரர்களா?'' என்று கேள்வி கேட்டார்.

‘‘பாலினப் பண்டங்கள்'' என்றும், பெண் உடலைக் குத்தகைக்கு என்றும் சொல்கிறார்களே, இது எவ்வளவு அசிங்கம்?

செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டுத் தீர்மானம்

ஒன்றை இங்கே வேதனையோடு சொல்கி றேன் - இது அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசிக்கவேண்டிய விஷயம்.

பெரியார், இந்த மக்களுக்காகப் பாடுபட்டார். அவர் கண்ட களங்களைப்பற்றி சொல்லும் பொழுது, நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டில் ஒரு தீர்மானம் போடுகிறார்.

‘‘பெண்களுக்கு சம உரிமை வேண்டும்

பெண்களுக்குக் கல்வி உரிமை வேண்டும்

பெண்கள் படித்தால் மட்டும் போதாது - அவர்கள் காவல்துறையில், இராணுவத் துறையில் பணிபுரி வதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

இதை அன்றைக்கு யாராலும் ஜீரணிக்க முடிய வில்லை. ‘‘அதெப்படிங்க, பெண்கள் காவல்துறை யிலும், இராணுவத்திலும் பணி புரிய முடியுமா?'' என்று கேட்டார்கள்.

ஏனென்றால், அன்றைக்குப் பெண்களுக்கு, அடுப்பங்கரையைத் தவிர வேறொன்றும் கிடையாது - மனுதர்மத்தின் அடிப்படைதான் அது.

கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு திருப்பம் ஏற்பட்டது.   பெண்கள் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது - பெண்கள் காவல்துறை அதிகாரிகளாக வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இது எப்படி நடந்தது?

சரசுவதி பூஜை செய்ததினாலா? லட்சுமி பூஜை செய்ததினா? இல்லை நண்பர்களே!

சிலர் புரியாமல் கேட்கிறார்களே, திராவிடம் என்ன செய்தது? என்று அவர்கள் எல்லாம் மிக முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஏன் இது திராவிட மண் - ஏன் இது சமூகநீதி மண் - ஏன் இது பெரியார் மண் என்று நாம் சொல்கிறோம்.

சென்னை உயர்நீதிமன்றத்

தலைமை நீதிபதிக்கு ஏற்பட்ட வியப்பு!

பீகார் மாநிலத்திலிருந்து சென்னை உயர்நீதி மன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக பதவி யேற்று, அவர் ஓய்வு பெற்று செல்லும்பொழுது சொல்கிறார்,

‘‘இந்தத் தமிழ்நாட்டை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியா முழு வதும் உள்ள உயர்நீதிமன்றங்களில்  பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 23. அதில் தமிழ் நாட்டில் மட்டுமே 13 பெண் நீதிபதிகள் இருக் கிறார்கள். இதைப் பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது'' என்றார்.

இதற்கு யார் காரணம்?

பெரியார் காரணம்.

உயர்நீதிமன்றங்களில் இவ்வளவு  பெண் நீதிபதி கள் வந்தார்கள் என்பதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

மாவட்ட நீதிபதிகள் வரையில் இட ஒதுக்கீடு உண்டு.  வக்கீல்களிலிருந்து நீதிபதிகளாகலாம்; மாவட்ட நீதிபதிகளிலிருந்தும் வரலாம். இதுபோன்று மற்ற மாநிலங்களில் இல்லை. இந்த நிலையை ஒழிக்க வேண்டும் என்றுதான் சனாதனிகள் முயற்சி செய் கிறார்கள்.

எனவே, கொஞ்சம் அசந்தோம் என்றால், நம்முடைய சமுதாயம் பின்னோக்கிச் சென்றுவிடும்.

எந்த ஆயுதங்களையும் கையாளாமல் -

அமைதிப் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது

இங்கே நிறைய கல்வியாளர்கள் இருக்கிறீர்கள். நான் பேசுவதைவிட, நடைமுறையில் சமூக மாற்றம், சமூகப் புரட்சி - அதுவும் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் - எந்த ஆயுதங்களையும் கையாளாமல் - அமைதிப் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது.

இங்கே வந்திருக்கின்ற மகளிருக்கு மட்டும் ஒரு கேள்வி - அதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும்.

இன்றைக்கு நீங்கள் எல்லாம் பட்டதாரிகளாக இருக்கிறீர்கள் உங்களுடைய அம்மா, பட்டதாரியாக இருந்தால் அவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்.

மூன்று பேர் மட்டும்தான்  கையைத் தூக்கியி ருக்கிறீர்கள்.

சரி, உங்களுடைய பாட்டி, பட்டதாரியாக இருந் தால், அவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்.

யாருமில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அம்மா, பாட்டி இருந்தால் கையைத் தூக்குங்கள்.

32 பேர் கையைத் தூக்கினார்கள்.

இங்கே வந்திருக்கின்றவர்களில் எத்தனை பெண் கள் பட்டதாரிகள், அவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்!

90 பேர் கையைத் தூக்கினார்கள்.

பெரியார் என்ன செய்தார்?

இதைத்தான் செய்தார்.

திராவிட இயக்கம் என்ன செய்தது?

இதைத்தான் செய்தது.

காமராசர் என்ன செய்தார்?

இதைத்தான் செய்தார்.

இதுதான் சமூகநீதி.

சரசுவதி பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால், இன்றைக்கு சரசுவதி பேத்தி மருத்துவர், பொறியாளர், வழக்குரைஞர், நீதிபதிகளாக இருக் கிறார்கள்.

ஆகவே, இதனை ஒழிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. அதனைக் காப்பதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

பெரியார் என்பவர்தான்

பேராயுதம் - போராயுதம்

அது எந்தக் களமாக இருந்தாலும் சரி; ஒரு நேரத்தில், அது பிரச்சாரக் களமாக வருகிறது; இன்னொரு நேரத்தில், அது தேர்தல் களமாக வருகிறது.

எனவேதான், பெரியார் என்பவர்தான் நமக் குப் பேராயுதம் என்பதை மறந்து விடாதீர்கள்!

பெரியார் என்பவர்தான் பேராயுதம்போராயுதம்.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், புத்தகங்களை வாங்கிய தோழர்களுக்கும் நன்றி!

இந்த சமுதாய மாற்றம் வளரவேண்டும் - பெருக வேண்டும்! நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

Comments