தீர்மானிக்கும் நாள்! -கவிஞர் கலி.பூங்குன்றன்

ஏப்ரல் 6

நம்மை ஏப்பமிடத்

துடிக்கும்

எதிரிகளாம்

முதலைகளின்

மூர்க்கத்தனத்துக்குத்

முடிவுரை எழுதும் நாள்!

 

துணை போகும் - ஊழல்

திமிங்கலங்களின்

உதடுகளை

ஊசி போட்டுத்

தைக்கும் நாள்!

 

பத்தாண்டு

பட்டது போதாதா?

பாமர மக்களின்

வயிற்றில் அடித்த

வஞ்சகமும், பாதகமும்

போதாதா, போதாதா?

 

வட்டியும் முதலுமாய்க்

கொடுப்போம்

வாக்குச் சாவடிக்கு

வாரீர் வாக்காளரே!

 

ஏப்ரல் 6

சமூகநீதி என்னும்

திராவிடப்

பேருழைப்பின்

அறுவடைச் செல்வத்தை

களத்து மேட்டிலேயே

களவாடும் கூட்டத்திற்கு

சாவு மணி

அடிக்கும் நாள்!

 

வருணா சிரமப்

பாம்புக்கு

உயிரூட்டி - நம்

வாழ்க்கையைக் கொத்த வரும்

கொடியோர்க்கும்

குடிலர்க்கும்

சாவோலை எழுதும் நாள்

 

வட்டியும் முதலுமாய்க்

கொடுப்போம்

வாக்குச் சாவடிக்கு

வாரீர் வாக்காளரே!

 

ஏப்ரல் 6

கார்ப்பரேட்டுகளின்

கைகளில்

கொழுக்கும்

கயிற்றைக் கொடுத்து

உழைப்பாளிகளின்

கழுத்துக்குச்

சுருக்கு மாட்டும்

காவிகளுக்குக்

கடைசிச் சிரிப்பைச்

கொடுக்கும் நாள்!

குலக்கல்வியை

சீவி சிங்காரித்து

சிவிகை ஏற்றி

கூண்டோடு நமையழிக்கும்

கோணல் கோத்திரத்தை

குறிவைத்து

வீழ்த்தும் நாள்!

 

ஆதிக்கப் புரியின்

அடிவேர் நொறுங்க

அணி திரண்டு வரும்

அறுவடைத் திருநாள்!

 

வட்டியும் முதலுமாய்க்

கொடுப்போம்

வாக்குச் சாவடிக்கு

வாரீர் வாக்காளரே!

 

கரணம் தப்பினால்

மரணம், மரணம்!

அலட்சியம் காட்டினால்

சரணம், சரணம்!

உங்கள் வாழ்க்கையைத்

தீர்மானிக்க வேண்டாமா?

உங்கள் எதிர்காலம்

உங்கள் கைகளில்!

 

உற்றாரோடும்

நட்பாரோடும்

கை கோர்த்து வருக

கடமையாற்றிட

கட்டாயமாய் வருகவே!

 

உதயசூரியனை

உதிக்கச் செய்வீர் - நம்

உயிரைக் கவ்வும்

காரிருளை ஓடச்செய்வீர்!

 

மே இரண்டில்

மே தினம் கொண்டாடுவோம்

மேளதாளத்தோடு

மேக மழையின்

கொட்டு முழக்கத்தோடு

கொண்டாடுவோம்

கொண்டாடுவோம்!

ஆனாலும்

ஏப்ரல் 6

நினைவிருக்கட்டும்!

நினைவிருக்கட்டும்!

 

உங்கள் சந்ததியையும்

சேர்த்து

தீர்மானிக்கும் திருநாள்!

 

வாக்குச் சாவடிக்கு

வாரீர் வாக்காளரே - நம்

வாழ்வுக்கு உத்தரவாதம்

வழங்கும் நாள்!

திரண்டு வாரீர் சோதரரே!

Comments