அமெரிக்க படைத்தள விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்

 பாக்தாத், ஏப்.16 ஈராக்கில் அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஈரான் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், அய்.எஸ்., அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஈராக் நாட்டில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க படையினர் ஈராக் நாட்டில் படைத்தளங்களை அமைத்து அங்கிருந்தவாறு ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில், ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமான குர்திஷ்தானில் உள்ள எர்பில் நகரில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் ஒரு பகுதியில் அமெரிக்க படையினர் படைத்தளம் அமைந்துள்ளது. அந்த படைத்தளத்தை குறிவைத்து ஏர்பில் பன்னாட்டு விமான நிலையம் மீது நேற்று (15.4.2021) ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட் தாக்குதல் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நடத்தப்பட்டது என குர்திஷ்தான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

செவ்வாய்க் கோளில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு  - ஒத்தி வைப்பு

வாசிங்டன், ஏப்.16 செவ்வாய்க் கோளில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் தற்போது நடத்தப்படும் ஆய்வுகளுக்கு ரோவர் என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஆய்வுப் பணிகளுக்கு இலகுரக ஹெலிகாப் டரைப் பயன்படுத்துவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு இந்தச் சோதனை வெற்றியடைந்தது.

ஒரு கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர், ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்  தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2ஆவது முறையாக இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு செவ்வாயில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு எந்த தேதியில் நடைபெறும் என்பது அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்  என்று நாசா

தெரிவித்துள்ளது.

யுரேனியம் செறிவூட்டல் அதிகரிப்பு ஈரான் அதிபர் விளக்கம்

தெக்ரான், ஏப்.16  யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக அதிகரித்தது ஏன்? என்பது குறித்து ஈரான் அதிபர் விளக்க மளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.4.2021) ஈரானில் உள்ள நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது.

இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது. எனினும், ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை ஈரான் தொடங்கியது. யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் முடிவானது, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு கொடுக்கும் பதிலடி என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிவிபத்தை குறிப்பிட்டு பேசிய அவர், நீங்கள் (இஸ்ரேல்) செய்தது அணுசக்தி பயங்கரவாதம், நாங்கள் செய்வது சட்டத்திற்குட்பட்டது என்றார். அணு ஆயுதங்ளை உற்பத்தி செய்ய 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்பதால் அந்த இலக்கை நோக்கி ஈரான் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை ஈரான் மறுத்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் செறிவூட்டலை 3.67 சதவீதமாக வைத்திருப்பதாக உறுதியளித்தது. இருப்பினும் ஜனவரி மாதத்தில் செறிவூட்டலை 20 சதவிகிதம் வரை அதி கரித்தது.

மருத்துவ நோக்கங்களுக்காக அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்று ஈரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments