எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி

மாஸ்கோ, ஏப்.16 எஸ்-400 ஏவுகணைஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் உறுதிபட தெரிவித்தார்.

ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 ஏவுகணை தடுப்பு அலகுகளை வாங்குவதற்கு இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து மேற்படி தளவாடங்களை வாங்கி னால் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.

ஆனால் அப்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் இந்த மிரட்டலையும் மீறி இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர் கொள்ள நேரிடும் என கூறப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க ராணுவ  அமைச்சர் ஆஸ்டின், இந்த தடை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் எதுவும் பேசவில்லை என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் உறுதி பட தெரிவித்தார்.

இது தொடர்பாக 14.4.2021 அன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எஸ்-400 மற்றும் பிற ஒப்பந்தங்களை பொறுத்தவரை, ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு மற்றும் பிற கடப்பாடுகளை பூர்த்தி செய்ய இந்தியாவும், ரஷ்யாவும் கடமைப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது என்று கூறினார். இருதரப்பு பொருளாதார தடைகளை இந்தியாவும், ரஷ்யாவும் அங்கீகரிப்பதில்லை எனக்கூறிய குதாசேவ், இது அழகற்ற, போட்டித் தனமான, மிரட்டலுக்குரிய சட்ட விரோதமான ஆயுதம் எனவும் குற்றம் சாட்டினார்.

Comments