மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வாம்: மத்திய அரசு அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வாம்: மத்திய அரசு அறிவிப்பு!

புதுடில்லி, ஏப்.9 நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு வரும் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு அமைத்த 7 பேர் கொண்ட குழு சமீபத்தில் தமது பரிந்துரையை அளித்துள்ளது. இதனை ஏற்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உட்பட நாடு முழுவதும் மத்திய  அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 41 பல்கலைக் கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த உயர்கல்வித் துறை தீர்மானித்துள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடர் பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு ஜூன் இறுதியில் நுழைவுத் தேர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி தெரிவித்துள்ள மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் கரே, புதிய கல்வி கொள்கைப்படி மத்திய பல்கலைக் கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் சேர்க்கை பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உட்பட மத்திய பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த பரிந்துரைத்துள்ள நிபுணர் குழு ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்திடலாம் என்று தெரிவித்துள்ளது. புதிய கல் விக் கொள்கையை பின்பற்றி மத்திய அரசு மேற்கொள்ளும் பொது நுழைவுத் தேர்வானது, குறிக்கோள் வகை மற்றும் விரிவான பதில் எழுதல் என இரண்டு பிரிவுகளாக நடத் தப்பட உள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள் ளன.

No comments:

Post a Comment