முகக் கவசம் அணியாமல் வங்கிக்குள் வர அனுமதி இல்லை: மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

முகக் கவசம் அணியாமல் வங்கிக்குள் வர அனுமதி இல்லை: மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

 சென்னை, ஏப். 13- கரோனா தொற்று பரவல் தொடர்பாக தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 30ஆம் தேதி வரை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கிகளில் பின்பற்றவேண்டிய நிலையான செயல்பாட்டு வழி முறைகள் குறித்தும் அதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதன்படி, வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியா மல் வங்கிக்குள் வர அனுமதிக்கக் கூடாது. முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்கள் வங்கியை விட்டுச் செல்லும் வரை வாய் மற்றும் மூக்கை மூடும்வகையில் அணிந்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடுதல் இல்லாதவகையில் கிருமி நாசினி திரவம் மற்றும் கை கழுவும் திரவங்களை வங்கி வாசலிலும், வளாகத்தின் பொது இடத்திலும் வைக்க வேண்டும். வங்கியில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அலுவலக லிப்டுகளில் உடல் எடையைப் பொறுத்து இரண்டு அல்லது நான்கு நபர்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே, தனிமனித இடைவெளியை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வங்கிக் கிளைகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அரசு விதிகளின்படி, கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது. அவற்றை உடனடியாக அமல்படுத்தி வருகிறோம். இந்த தகவல்களை மாநில வங்கியாளர் கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்

தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஏப். 13- அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு பல மாதங்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டன.

இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன.

இந்நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்ற இளநிலை படிப்புகளுக்கான இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் எழுதிய பொறியியல் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மேலும் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை யும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment