கடன்கள் வாங்கி மோசடி செய்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விரைந்த-தக்க நடவடிக்கைகள் தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 24, 2021

கடன்கள் வாங்கி மோசடி செய்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விரைந்த-தக்க நடவடிக்கைகள் தேவை!

 இந்திய ரிசர்வ் வங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் மேல் கூடுதலான, கடுமையான கட்டுப்பாடுகளையும் மேற்பார்வையையும் மேற்கொண்டு, நடைபெற்ற தவறுகளை சரி செய்வதுடன், மேற்கொண்டு தவறுகள் நடைபெறாமல் இருப்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும். இத்தகைய நடவடிக் கைகளை மேற்கொள்வதில் காட்டப்படும் எந்தவித தயக்கமும் சுணக்கமும், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலைத் தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதாகவே ஆகிவிடும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடி செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடிச் சென்ற  இந்திய வைர வியாபாரி நீரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து நாட்டின் உள்துறை செயலாளர் பிரிதி படேலின் அறிவிப்பு, மோசடிகளுக்கு எளிதில் உள்ளாகும் நிலையில் உள்ள இந்திய வங்கித் துறையின் நடைமுறை தக்க அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டியது என்பது அவசியமானதும் அவசரமானதுமான தேவையை நினைவூட்டுவது போல இருக்கிறது.

நீண்ட காலமாகத் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கும் பெருந்தொகைக் கடன்களின் சுமையை பொதுத் துறை வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் சுமந்து கொண்டிருப்பது மட்டுமன்றி, பொதுத் துறை வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்களால் மேற் கொள்ளப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கையும்  மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகையின் அளவும் வளர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அண்மைக் கால ஆண்டு அறிக்கை யில், வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் (ஒரு லட்ச ரூபாயும் மற்றும் அதற்கு அதிகமான அளவிலான) மோசடிகளின் மொத்த எண்ணிக்கை 28 சதவிகித அளவிலும், மொத்த மோசடிபணத்தின் அளவு 159 சதவிகித அளவிலும் உயர்ந்து உள்ளது. இதனை, 2020 ஆம் ஆண்டுடன் முடியும் 12 மாத காலத்தில்  185 லட்சம் கோடி அளவு கொண்ட பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது என்று கூறலாம்.

நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்று நோய் தொடங்கிய காலம் முதல் நடைபெற்ற இத்தகைய மோசடிககளின்  மீது மேற்கொள்ளப்பட வேண்டிய குற்றவியல் நடை முறைகளின் வேகம் குறைந்து போயிருக்கக் கூடும் என்றாலும்,  கடந்த ஆண்டுகளில் இருந்து பல்வேறு கண்ணோட்டங்களில் தெரியும், இதுபற்றி அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய தோற்றங்கள் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவே உள்ளன.

இத்தகைய மோசடிகள் வங்கிகளின் கடன் வழங்கும்  துறைகளிலேயே அதிக அளவில் நடை பெறுவதால், மிகப் பெரிய பண மதிப்பிலான மோசடிகளைப் பற்றிய ஆய்வில், பணம் கடன் பெறுவதில் முதலிடம் பெற்றுள்ள 50 மோசடிகளில் மொத்த மோசடி பணத்தில் 76 சதவிகித அளவிலான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. இத்தகைய மோசடிகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கும், நடைபெற்றுள்ள மோசடிகளை விரைவில் கண்டு பிடிப்பதற்கும்,  அவற்றைப் பற்றி  வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய வங்கி உருவாக்கித் தந்திருந்த போதிலும், இந்த மோசடி பணப் பரிமாற்றங்களை 2019-2020 இல் கண்டுபிடிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சராசரி கால அவகாசம் 24 மாதங்களாகும். மிகப் பெரிய மோசடி வழக்குகளில் கிடைத்த தகவல்களில் இந்திய ரிசர்வ் வங்கியை மிகமிக அதிக அளவில் கவலை கொள்ளச் செய்தது என்னவென்றால், 100 கோடி ரூபாய் அளவுக்கு மேல் மோசடி செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு சராசரியாக 63 மாத காலம், அதாவது அய்ந்து ஆண்டு காலத்துக்கும் மேலாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுதான்.

இவ்வாறு மோசடியாக கடன் பெற்ற நிதிச் சுமை யின் பெரும் பகுதியை பொதுத்துறை வங்கிகளே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டில் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பணத் தின் அளவில் 80 சதவிகித அளவிற்கும் மேலா னவை பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றுள் ளன.  மோசடிகளின் எண்ணிக்கையிலோ மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவிலோ பொதுத் துறை வங்கிகளையும் மிஞ்சியவையாக தனியார் வங்கித் துறை இருந்துள்ளது.  ஒரே ஒரு தனி நபருக்கு மட்டுமே கடன் அளிக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், ஓர் ஆண்டின் ஒட்டு மொத்த பணப் பரிமாற்றங்களால் ஏற்படும்  ஒட்டு மொத்த மதிப்பீட்டு உயர்வையும் ஒன்றுமில்லாததாக அது செய்துவிடும்.

34,211 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அய்ந்து மடங்கு ஒட்டு மொத்த மதிப்பீட்டு உயர்வில் இந்த தனியார் துறை வங்கிகளில் 34 சதவிகிதத்திற்கும் அதிகமான மோசடிகள் நடந்தேறியுள்ளன. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் இந்த மோசடிகள் 24 சதவிகித அளவில் மட்டுமே உயர்ந்துள்ளன. அதிக அளவிலான தனியார் துறையினர் பங்கேற்கும் அளவில், ஒட்டுமொத்த வங்கித் துறையையும் தனியாருக்கு திறந்து விடுவதற்கான முயற்சியில் அரசு செயல்பட இருக்கும் நிலையினைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குறிப்பாக இத்தகைய உண்மைகள் அனைத்தும் மிகமிக முக்கியமான வையாகும்.

தவறுகள் நடைபெறத் தொடங்கும் நிலையி லேயே அதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகளை அளிப்பதில் தீவிரம் காட்டாததும்,  புலனாய்வுத் துறையினால் மேற்கொள்ளப்படும் தணிக்கை களுக்கு கடன் பெறும் தனிப்பட்டவர்கள் முறை யான ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதும், மோசடிகளை விரைவில் கண்டு பிடிப்பதற்குத் தடையாக இருக்கும் மிகமிக முக்கியமான காரணி களாகும். ஒரு சில கடன் பெற்றவர்கள் மட்டுமே இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற உண்மை, வங்கிகளின் செயல்பாடுகள் முறை யானவையாக மாறிவிடும் என்று நம்புவதற்கு இடம் அளிப்பதாக இல்லை.

மிகமிக ஆழமான ஒரு பெரும் சோகத்தின் ஒரு சிறு துளியின் அடையாளம் மட்டுமே நீரவ் மோடி யின் வழக்கு என்று கூறலாம். தொழில் கட்டுப் பாட்டாளர் என்ற முறையில் இந்திய ரிசர்வ் வங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் மேல் கூடுதலான, கடுமையான கட்டுப்பாடுகளையும் மேற்பார்வையையும் மேற்கொண்டு, நடைபெற்ற தவறுகளை சரி செய்வதுடன், மேற்கொண்டு தவறுகள் நடைபெறாமல் இருப்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும். இத்தகைய நடவடிக் கைகளை மேற்கொள்வதில் காட்டப்படும் எந்த வித தயக்கமும் சுணக்கமும், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலைத் தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதாகவே ஆகிவிடும்.

நன்றி: ‘இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம், 20.04.2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment