இராமச்சந்திர குகாவின் கணிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 24, 2021

இராமச்சந்திர குகாவின் கணிப்பு!

வயர் இணைய இதழ் சார்பாக கரண் தாபர், சிந்தனை யாளர் இராமச்சந்திர குகாவைப் பேட்டி கண்டிருக்கிறார்.

இதில் நாடு எதிர்கொண்டு வரும் கோவிட் அபாயம் குறித்துதான் பெரும்பாலும் பேச்சு எழுந்தது. கோவிட் பிரச்சினைக்குக் காரணங்களை ஆராயும் குகா, அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் சில குணாதிசயங்களை முக்கிய காரணமாக முன்வைக்கிறார்.

‘‘பிரதமரைப் பொறுத்தவரையில் பொறுப்பேற்றுக் கொள்ள மறுக்கும் தன்மையைக் காண முடிகிறது. ஏதாவது நல்லது நடந்தால் பிரதமர் மோடிதான் காரணம்; ஏதாவது மோசமாக நடந்தால் துறை அதிகாரிகள்தான் பேசுவார்கள், என்பது முக்கிய பிரச்சினை'' என்கிறார் குகா. தரவுகள் குறித்த கவலை இல்லாதது, பிரச்சினையின் ஆழத்துக்குப் போய் புரிந்து கொள்ள மறுக்கும் தன்மை போன்றவை மோடியை பீடித்துக்கொண்டிருக்கும் குறைகள் என்றும் குறிப்பிடுகிறார்.

‘‘மோடிக்கு அவரது சக அமைச்சர்களும், பா...வினரும் கொடுத்திருக்கும் அதீத பிம்பம் ஒரு பெரும் தடையாக இருக்கிறது. இதில் மயங்கிப் போய் பிரதமரும், தான் தவறே செய்ய இயலாதவர் என்ற அளவுக்கு அவருக்கே ஒரு நம்பிக்கையை நாம் எல்லாரும் கொடுத்திருக்கிறோம்; அப்படி ஒரு பிம்பம் அவருக்கு மாற்றத்துக்கும், புரிதலுக்கும் உள்ள பெரும் தடை'' என்பது இராமச்சந்திர குகாவின் கணிப்பு!

மோடி எந்தத் துறை நிபுணர்களையும் மதிப்பதில்லை என்றும் குகா குற்றம் சாட்டுகிறார். ‘‘முந்தைய அரசுகள் நிபுணர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு வைத்திருந்தன. ஆனால், மோடி நிபுணர்களையும்கூட அரசியல் சார்பாக ஆக்கி விட்டார்; இந்தியாவில் தொண்டு நிறுவனங்களை நடத்தும் இரண்டு தொழிலதிபர்கள் (பெயரைக் குறிப் பிடாமல்) தடுப்பு மருந்து கொள்கையில் பங்களிக்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அவர்களை அரசு உதாசீனப்படுத்தி விட்டது  ஏன்?'' என்பது குகாவின் முக்கிய கேள்வி.

ஹிந்துத்துவ சிந்தனை அறிவியலுக்கும், நடுநிலை அணுகுமுறைக்கும் எதிராக இருக்கிறது.  முஸ்லிம்களின் தப்லீக் மர்கஸ்சை, மத்திய அரசு அணுகிய விதம் மற்றும் கும்ப மேளாவை அணுகிய விதம் எப்படி? கும்பமேளாவில் ஷாஹி ஸ்நான் முடியும் வரை சும்மா இருந்து விட்டு, விரைவில் முடித்து விடலாம் என்று பரிந்துரைத்ததையும், அதை சில மடங்கள் மறுத்த பொழுது அமைதி காத்து நின்றதையும் இராமச்சந்திர குகா குறிப்பிடுகிறார்.

கூடவே குகா, அமித்ஷாவையும் விமர்சிக்கிறார். ‘‘அவர் உள்துறை அமைச்சர் ஆனது முதல் கவனம் செலுத்தி வரும் விஷயங்கள் இரண்டே இரண்டுதான்: மகாராட்டிராவில் எப்படி ஆட்சியைக் கவிழ்ப்பது, வங்காளத்தில் எப்படி ஆட்சியைப் பிடிப்பது, இவைதான்''  என்கிறார்.

தேசம் ஒரு மாபெரும் கொள்ளைத் தொற்று நோயை எதிர்கொண்டு போராடி வரும் வேளையில் இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி, ‘எவ்வளவு பெரிய பேரணிஎன்று வினா எழுப்புவோர், கும்பமேளாவில் அமைதி காத்தது ஏன்? இவர்தான் இன்று பிரதமராக இருக்கிறார். வங்காளத்தில் பேரணி நடத்துவது பற்றிய விமர்சனம் வந்த பொழுதுவங்காளத்தில் கோவிட் பிரச்சினை இல்லை, மகாராட்டிராவில்தான் இருக்கிறது!’ என்று பதில் சொல்கிறார். மக்களிடம்சும்மா அநாவசியமா வெளியே போகாதீங்க,’ என்று அறிவுரை சொன்னதற்கு அடுத்த நாள் மூன்று பேரணிகளை நடத்தியவர் - இவர் இன்று உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

இவர்கள் இருவரையும் பெரும்தேச பக்தர்கள்என்று நம்புபவர்கள் தேசமெங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

இராமச்சந்திர குகா எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர். பொது நிலையில் நின்று திறந்த மனதோடு கருத்துகளை எடுத்துக் கூறும் பான்மையர்.

இதுபோன்று இடித்துக் கூறுபவர்கள் நாட்டுக்கு அவசியம் தேவை.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப் பாரிலானுங் கெடும் (448)

என்பது குறள்.

தவறு நேரும்போது தடுத்து நிறுத்தி, இடித்துரைக்கும் நல்லோரைப் பாதுகாப்புக் கொண்டிராத அரசன் கெடுப்பார் இல்லாமலேயே தானே கெட்டழிவார்.

தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது திருக்குறளைப்பற்றிப் பேசும் பிரதமருக்கு இந்தக் குறளை பா...வினர் நினைவூட்டலாமே!

No comments:

Post a Comment