‘‘புத்த சீலம்!''

 கவுதமப் புத்தரிடம் ஒருவன் கேட்டான்:

‘‘நீங்களோ பெரிய மகான்! அப்படிப்பட்ட நீங்கள் ஏன் தரையில் அமர்ந்துள்ளீர்கள்?'' என்பதுதான் அந்தக் கேள்வி.

கவுதமப் புத்தரின் பதில்: ‘‘தரையில் அமர்பவன் ஒருபோதும் தவறி விழமாட்டான்'' என்றார் புத்தர்.

இந்த இடத்தில் புத்தரையும், சங்கராச்சாரியார்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

குடியரசுத் தலைவரே வந்தாலும் - அவர்சூத்திரராக', ‘பஞ்சமராக' இருக்கும்பட்சத்தில் கீழேதான் உட்கார வேண்டும். எந்த இடத்திலும் சங்கராச்சாரியார் அமரும் பீடம் உயரத்தில்தான் இருக்கும்.

இவ்வளவுக்கும் இவர்களுக்குமும்மலம்' (ஆணவம், கன்மம், மாயை) கடந்தவர்கள் என்று பெயர்.

காந்தியாரைச் சந்தித்தபோதுகூட பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் வைத்துதான் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி உரையாடினார் (16.10.1927).

‘‘ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது'' என்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார். (‘‘தமிழ்நாட்டில் காந்தியடிகள்'', பக்கம் 575, 576).

பிரதமர் இந்திரா காந்தியைக்கூட - அவர் கணவனை இழந்தவர் என்பதால், கிணற்றடியில் வைத்துப் பேசினார் அதே சங்கராச்சாரியார்.

(சுப்பிரமணிய சாமியைப் பக்கத்தில் நாற்காலியில் அமரச் செய்து உரையாடிய சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனைத் தரையில் அமர வைத்துதான் பேசினார் என்பது நினைவில் இருக்கட்டும்).

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது - தற்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்த ஆணவத்தையும் நினைத்துப் பாருங்கள்.

புத்தரின் சீலம் எங்கே?

இவர்களின் ஆணவமும், ‘அமர்க்களமும்' எங்கே, எங்கே?

 - மயிலாடன்

Comments