தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது

தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஏப்.7 தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம் ஆகும். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3ஆம் பாலினத்தவர் 7192 பேர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மய்யத்திலேயே முகக்கவசம் வழங்கப்பட்டது.

மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி முகவர்கள் முன்னிலையில் முத்திரை வைக்கப்பட்டன. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மய்யங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவை  அறைகளில் பாதுகாப்பாக வைத்து முத்திரை வைக்கப்படும். அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பெண்களை பொதுவெளியில் ஏளனம் செய்கிறார் மோடி  திரிணாமுல் குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஏப்.7  மேற்குவங்க முதல்வர் மம்தாவை தொடர்ந்து ஏளனம் செய்யும் வகையில் பேசி அவரது கட்சியினரின் கோபத்தைத்தூண்டி வன்முறை ஏற்படுத்தும் திட்டத்தோடு மோடி பேசிவருவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து அங்கு பிரச்சாரம் மேற் கொள்ளும் பிரதமர் மோடி, பாஜகவின் தேர்தல் பரப்புரைகளில் உரையாற்றும்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்ததாகவும், பெண்களை அவமதித்தாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான சசி பஞ்சா கூறுகையில், இன்று நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேசவில்லை பிரதமர் பெண்களை வெறுக்கக்கூடிய நகைச்சுவையான தொனியில் பேசுகிறார். இந்த வகையாக பிரதமர் உரையாற்றுவது தவறானது என்று கூறினார்.

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் டி.எம்.சியின் பெண் தலைவர்கள், ஜூன் மாலியா மற்றும் அனன்யா சக்ரபோர்த்தி கூறுகையில், அவர் பிரதமர், ஆனால் அவரது உரைகளில் அவர் தீதி தீதி என்று சொல்லும் தொனியைப் பாருங்கள். இது சரியா? ஒரு முதல்வரைப் பற்றி ஒரு பிரதமர் இவ்வாறு பேசமுடியுமா? இதனால் பிரதமர் பெண்களை வெறுப்பவர், துன்புறுத்துபவர் என்று அழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்றனர்.

மேலும், மாலியா செய்தியாளர்களிடம், இது மம்தாவுக்கு மட்டும் அவமானமல்ல, வங்காள பெண்கள் அனைவருக்கும் அவமானம். இது பெண்மைக்கே அவமானம். கடந்த 25 ஆண்டுகளாக மம்தா மக்களவை உறுப்பினராகவும் அமைச்ச ராகவும் இருந்து வருபவர். இன்று வரை எந்த பிரதமரும் தற்போதைய பிரதமரைப் போல அவமதிக்கவில்லை. இது பாஜகவின் கீழான எண்ணத்தை காட்டுகிறது என்றார்.

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை...

சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை,ஏப்.7- நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இருவருக்கும் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய 'மேஜிக் ஃபிரேம்ஸ்' என்ற நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு - நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தது.  இதற்காக 1.5 கோடியை 'ரேடியன்ஸ் மீடியா' என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்சில் இந்தப் பணத்தை தந்துவிடுவதாகவும், பணத்தைக் கொடுத்தவுடன்தான் 'இது என்ன மாயம்' திரைப்படம் வெளியாகும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

ஆனால் சொன்னபடி நடந்துகொள்ளாமல் சரத்குமார், ராதிகா இணைந்து 'பாம்புசட்டை' என்ற படத்தை தயாரித்ததால், ரேடியன்ஸ் மீடியா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக சரத்குமார், ராதிகா தரப்பில் கொடுக்கப்பட்ட 7 காசோலைகளும் (cheque) பணமில்லாமல் திருப்பப்பட்டதால் சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூவரும் ஆஜராகவில்லை என்றால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறிய நிலையில், மூவரும் ஆஜராகினர். இந்த வழக்கை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. மொத்தம் உள்ள 7 வழக்குகளில் 5 வழக்குகளில் சரத்குமார் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற இரண்டு வழக்கில் சரத்குமார், ராதிகா, ஸ்டீபன் ஆகிய மூவரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் ஏழு வழக்குகளிலும் காசோலை மோசடி நடந்தது உண்மை என நீதிமன்றம் கண்டறிந்து, மூவரும் குற்றவாளிகள் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 வழக்குகளிலும் எதிர்மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு ஏழு வழக்குகளிலும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராதிகாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா ஒரு ஆண்டும், ஸ்டீபனுக்கு தலா ஒரு ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை மூன்றாண்டை விட கீழான தண்டனை காலம் என்பதால், தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகிய மூவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

தண்டனை நிறுத்தி வைப்பு

பிற்பகலில் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக  சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image