பசுமைத் தீர்ப்பாயமும் கிரிஜா வைத்தியநாதன் நியமனமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

பசுமைத் தீர்ப்பாயமும் கிரிஜா வைத்தியநாதன் நியமனமும்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதனை மத்திய அரசு நியமித்துள்ளதுஇது சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரான ஒன்றாகும்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக அய்ந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும், சூழியல் தொடர்பான பல்வேறு கலந்தாய்வு மற்றும் ஆலோசனை நடத்தியவராக இருக்கவேண்டும். கிரிஜாவிற்கு அந்த அனுபவம் சிறிதளவும் கிடையாது, அதே நேரத்தில் அவர் தமிழக தலைமைச்செயலாளராக இருந்தவர்; அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் "தென்னக அமர்வுக்கு" ஆலோசனைக்குழு நிபுணத் துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

 அவர் தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்துள்ளார். தலைமைச் செயலர் என்பதால் "சூழலியல் திட்டங்கள்" தொடர்பாக பல்வேறு முடிவுகளை அரசின் சார்பாக எடுத்தவர்; குறிப்பாக அவர் சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் எடுத்த முடிவுகள் தொடர்பாக சூழலியல் ஆர்வலர்கள், பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அரசின் சூழலியல் பாதிப்புத் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்த  வழக்குகளை இனிமேல் விசாரித்து தீர்ப்பு சொல்லப்போவது யார்? அன்றைய தலைமைச் செயலர், இன்றைய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினர் கிரிஜா வைத்திய நாதன். அதாவது அதிகாரியாக தான் முடிவெடுத்தவை குறித்து நீதிபதியாக தீர்ப்பு எழுதவுள்ளார். 

 சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு தொடர்பாக நடந்ததுதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம். அந்தப் போராட்டத்தில்  பதின்மூன்று தமிழர்களை சுட்டுக் கொன்றனர். அப்போது தலைமைச்செயலாளராக இருந்தவர் இதே கிரிஜா வைத்தியநாதன் தான், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு தான், சர்ச்சைக் குரிய பல திட்டங்கள் தொடர்ந்து கையெழுத்தாயின. 8 வழிச்சாலையை கடுமையான எதிர்ப்பையும் மீறி அமைத்தே தீருவேன் என்று கூறியதும் இவர் தலைமையிலான நிர்வாகம் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, அதே போல் ஹைட்ரோ கார்பன், பொன்னேரி துறைமுகம், நியூட்ரினோ திட்டம் என இவரது நிர்வாக காலத்தில் பல சூழலியல் பாதிப்பு திட்டங்கள் கடுமையான எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து கையொப்பமானது. எதிர்த்து நீதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் மக்கள் பக்கம் நிற்காமல் டில்லி தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்காடியதும் இவரது நிர்வாகத்தின் கீழ் தான். அப்படி இருக்க இவர் தென்னக பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ ஆலோ சனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நீட்' தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் என்ன சொன்னார்?

தமிழ்நாடு அரசு சார்பாக 'நீட்'டை எதிர்த்து வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளதால், நான் இந்த அமர்விலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொன்னதும் சமீபத்தில் தானே! 

அதனோடு - கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டாமா?

ஒரு கால கட்டம் இருந்தது. முக்கிய பொறுப்புகள் என்று வரும்போது சமூகநீதிக் கண்ணோட்டம் இருக்கும். பா... ஆட்சியில் எல்லாம் தலை கீழாகி விட்டது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

No comments:

Post a Comment