"என்ன வினோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு!!" (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

"என்ன வினோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு!!" (2)

பொது ஒழுக்கச் சிதைவை மிக வேகப்படுத்து வதற்கு இப்போதைய தேர்தல்கள் மிக முக்கிய பங்கு பாத்திரம் வகிக்கின்றன!

பல்லிருந்தும் கடிக்க முடியாதபடி உள்ளது தேர்தல் ஆணையம், ஏன் என்று புரியவில்லை.

தங்களுக்கு வாக்குப் போடுவதற்கு பணம் தரவில்லை என்று சாலையில் அமர்ந்து "சாலை மறியல்" நடத்தினார்கள் என்ற செய்தி எதைக் காட்டுகிறது? எவ்வளவு அசிங்கம் இது! அந்த மக்கள் மீது குற்றம் ஒரு புறமிருந்தாலும் அவர்களை அந்த உத்தரவாதம் தந்து தானே அழைத்து ஏமாற்றும் நிலை!

அதற்குமுன் பெருந் தலைவர்களின் கூட்டம் பெருங் கூட்டமாகக் காட்சியளிக்க காசு - பணம் - குவார்ட்டர் - பிரியாணி கொடுத்து கால்நடை களை அடைத்துக் கொண்டு வருவதுபோல, அழைத்து வந்து கூட்டம் முடிந்த பின்போ, முன்போ 'பணம் பட்டுவாடா' செய்யும் அரிய சேவையை உள்ளூர் தளகர்த்தர்கள்  செய்வது எத்தகைய கேவலமான நடைமுறை?

எல்லோரும் நிர்வாணமாக வசிக்கும் நாட்டில் கோவணம் கட்டியவன்தானே "பைத்தியக் காரன்?" அதுபோன்ற நிலை. முந்தைய தேர்தல் களில் தலைவர்கள் பேச்சைக் கேட்க, கட்டுச் சோறு மூட்டையுடன் இரவெல்லாம் வந்து காத்திருந்து கேட்டுத் திரும்பும் நடைமுறை "அந்த நாள் ஞாபகம்" ஆகிவிட்டது!

திருநள்ளாற்றில் சனீஸ்வர பகவானிடம் பாவம் போக்கும் "புனிதஸ்தலத்தில்" தங்கக்காசு பிரதமர் மோடி உருவம் பொறித்ததுடன் - பா... சின்னம் + ரூபாய் நோட்டுகள் கொடுத்தவரை தேடுகிறார்களாம் - தேடுகிறார்களாம் - தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

'எந்தாடா ஆச்சரியம்!' அது மட்டுமா?

ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகைகளை சொல்லுவார்கள்.

அவற்றின் யோக்கியதையைக்கூட இத் தேர்தல் மிகவும் கேலிக்குரியதாக்கி விட்டது.

கடைசி நாளுக்கு முன்னாள் மூன்று நான்கு பக்க விளம்பரமாக எதிர்க்கட்சியை பற்றி ஆளுங்கட்சி கூட்டணி. முழுப் பக்க விளம்பரம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அதை விளம் பரமாக வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, ஏதோ வழக்கமாக அந்த செய்தித்தாளின் செய்திகள் என்று 'சட்'டென்று பார்த்து வாசகர்கள் ஏமாறும் வண்ணம் ஒரு 'புதுடெக்னிக்'குடன் நடந்தது மோசடித்தனத்தின் முழு வீச்சு அல்லவா?

'பத்திரிகை தர்மம்', 'பத்திரிகை தர்மம்' 'பல்லவி, அனுபல்லவி, 'சரணம் பாடும் இவர்கள் இப்படி தங்களது ஒழுக்கத்தையும்  நாணயத்தையும் பொதுச் சந்தையில் - வாசகர்களிடம் விலைக்கு விற்கலாமா?

மிக மிக வேதனை -

இப்படிப்பட்ட பத்திரிகைகள் 'அய்ந்து நோய்களில் ஒன்று என்று கூறிய தந்தை பெரியார் முன்னோக்கு எப்படி அனுபவத்தால் கனிந்தது பார்த்தீர்களா?

ஏற்கெனவே பழமொழிகள் உண்டு.

"நாய் விற்ற காசு குரைக்காது

கருவாடுவிற்ற காசு நாறாது'

வருமானம் கருதி

தங்கள் பெறுமானத்தை இழப்பது

நியாயம் தானா?

இதுதானா தேர்தல் தந்த வெகுமானம் -

ஜனநாயகத்தின் சன்மானம்?

நிலையிலிருந்து தவறிய பத்திரிகையாளர்களே மீண்டும் இப்படி சறுக்காதீர்!

அறிவுடையாரின் 'சாபத்திற்கும்' கண்டனத் துக்கும் ஆளாகாதீர்!

உண்மைகளைச் சொல்லித்தானே தீர வேண்டும்!

காசேதான் கடவுளடா, என்பதா கொள்கை?

யோசிக்க; யோசிக்க!

No comments:

Post a Comment