வேளச்சேரி 92 ஆவது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை, ஏப்.14 தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92 இல் வாக்குப்பதிவு முடிந்ததும், ஓட்டுச்சாவடியில் இருந்து, மூன்று ஊழியர்கள் சேர்ந்து, இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு வி.வி.பி..டி., இயந்திரம் ஆகியவற்றை, இரு இருசக்கர வாகனத்தில்வைத்து எடுத்துச் சென்றனர். வாக்குச்சாவடியில் இருந்து, 200 அடி தூரத்தில் செல்லும் போது, அவர்களை, பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சில கட்சியினர், வாக்குப்பதிவு இயந்திரங்களை கடத்தியதாக, மறியல் செய்தனர். வேளச்சேரி காவல்துறையினர், இயந்திரங்களை மீட்டு, அதை கொண்டு சென்ற நபர்களை மடக்கிப் பிடித்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசுகையில், இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும், வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்காக 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு, விவிபேட்டில் கோளாறு ஏற்பட்டதால், வேறு விவிபேட் மாற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மேலும், இரு சக்கர வாகனத்தில் விவிபேட் எடுத்து சென்றது விதிமீறல் என்பதால், வேளச்சேரி வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92 இல் வரும் 17 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments