ஆஸ்திரேலியாவை 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 12, 2021

ஆஸ்திரேலியாவை 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும்

 கான்பெர்ரா, ஏப். 12 ஆஸ்திரேலியாவை செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த 2 புயல்களும் வார இறுதியில் அடுத்தடுத்து தாக்கவுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.

இந்த இரண்டு புயல்கள் காரணமாக அரிய மற்றும் ஆபத்தான வானிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளிகளின் தாக்கம் அடுத்த 24 முதல் 28 மணி நேரத்தில் உணரப்படும் என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு கிமோர் மற்றும் இந்தோனேசியாவின் சில பகுதிகளுக்கு செரோஜா புயல் ஏற்கெனவே அழிவு மற்றும் இறப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வெப்பமண்டல சூறாவளிகளான செரோஜா மற்றும் ஓடெட் புயல்கள் நிலத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் மழை கடினமாகவும் வேகமாகவும் உருவாகும் என்று வானிலை ஆய்வு மய்யம் (பிஓஎம்) எச்சரித்துள்ளது.

60 நாடுகளில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

லண்டன், ஏப். 12- கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உருவாக்கி பொது மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

அய்ரோப்பிய நாடுகள், தடுப்பு மருந்துகளை வாங்கி தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகிறது. ஆனால் ஏழை நாடுகளால் தடுப்பு மருந்துகளை வாங்க முடியாததால் அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கியது.

பல்வேறு நாடுகள் இணைந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து அந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.

இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக 60 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

இதனால் அஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து உலகசுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துக்கு அனுப்பப்பட்டும் தடுப்பு மருந்து அளவு பெரும் அளவில் குறைந்து விட்டது. உலகில் உள்ள சில ஏழை நாடுகள் உள்பட 60 நாடுகளில் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் போடப்படுவது நிறுத்தப்பட்டும் சூழ்நிலை உள்ளது.

மேலும் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு 2ஆவது டோஸ் செலுத்த மருந்து இல்லை. தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக அதன் வினியோகம் கடந்த 5ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வினியோகங்களும் ஜூன் மாதம் வரை நிறுத்தப்படலாம். இதனால் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பு மருந்துகளை வாங்கும் உலக நடவடிக்கைகளை சுகாதார அமைப்பு விரைவுப்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment