ஆக்சிஜன் தடையால் 22 பேர் உயிரிழப்பு மகராட்டிராவில் நடந்த அவலம்

நாசிக்,ஏப்.22 மகாராட்டிரா மாநிலத்தில் டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு செல்லும் ஆக்சிஜன் தடை பட்டதால், 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராட்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் உள்ள டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டிருந்தபோது, ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியது.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வார்டில் உள்ள நோயாளிகளுக்கு செல்லும் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப் பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயு கசிவை கட்டுப்படுத்தும்  முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகள்  சப்ளை தடைபட்டதால் உயிரிழந்துள்ளனர்.இந்த  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த சோக நிகழ்வுக்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Comments