கரோனாவின் இரண்டாவது அலை படையெடுப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 22, 2021

கரோனாவின் இரண்டாவது அலை படையெடுப்பு!

 இதுவரை தன் பொறுப்பில் எல்லா உரிமைகளையும் வைத்திருந்த மத்திய பா... அரசு இப்பொழுது மாநிலங்களின் தலையில் சுமத்துவது தன் கடமையைத் தட்டிக் கழிப்பதாகும்!

பிரதமர் மோடியினுடைய ஆளுமை என்பது இதுதானா?

கரோனாவின் இரண்டாவது அலை படை யெடுப்பு - இதுவரை தன் பொறுப்பில் எல்லா உரிமைகளையும் வைத்திருந்த மத்திய பா... அரசு, இப்பொழுது மாநிலங்களின் தலையில் சுமத்துவது என்பது தன் கடமையைத்தட்டிக் கழிப்பதாகும்! பிரதமர் மோடியினுடைய ஆளுமை என்பது இதுதானா? என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் கரோனாவின் பாதிப்பு காற்று வேகத்தில் இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, முன்பைவிட இப்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. இது வேத னையானதும், சோதனையானதுமான ஒரு காலகட்ட மாகும்.

பொறுப்பிலிருந்து நழுவுகிறதோ மத்திய அரசு...?

முதற்கட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு முழுப் பொறுப் பேற்று கரோனா தொற்று தடுப்பு மேலாண்மையைக் கையில் எடுத்த மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா... - ஆர்.எஸ்.எஸ். அரசு, மிக முக்கியமான - இக்கட்டான இத்தருணத்தில் தனது கையைக் கழுவி விடுவதுபோல், ‘இனி எல்லாம் மாநிலங்கள் பொறுப்பு' என்று கூறிடுவது, பொறுப் பிலிருந்து நழுவுகிறதோ என்ற அய்யத்தையே உருவாக்குவதாக இருக்கிறது.

பிரதமர் மோடியின் ஆளுமை - கரோனாவைப் பொறுத்தவரை - தலைகீழான ஆளுமையாகவே நடைபெற்று வருகிறது.

1. முதலில் கலந்தாலோசித்திருக்க வேண்டியது பிரபல தொற்று நோய் மருத்துவர்களிடமாகும். பிரதமர் தொடக்கத்தில் அதைச் செய்யாமல், இப்போது அவர் களை அழைத்து ஆலோசிப்பது தாமதிக்கப்பட்ட ஓர் ஆளுமை அணுகுமுறையாகும்.

2. மாநிலங்களின் பொறுப்புக்கு விட்டு மத்திய அரசு கண்காணிப்பும், மேற்பார்வையும் செய்து வந்தால், அந்தந்த மாநில நிலவரத்திற்கேற்ப ஆங்காங்கே நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்றிருக்கக் கூடும்.

பொது சுகாதாரம் என்பது அரசமைப்புச் சட்டப்படி - மாநில உரிமைகள் என்பது ஒருபுறமிருந்தாலும், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவை மாநிலங் கள்தானே!

ஆக்கபூர்வ தடுப்பு அணுகுமுறைகள் இல்லை

ஒரு சிறு எடுத்துக்காட்டு, மாநிலங்கள் தங்கள் தங்கள் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை வரவழைப்பதை அனுமதித்து, (கண்காணிப்பை நிகழ்த்தி) பாதிக்கப் பட்டோரின் வயது, தேவைகள் இவற்றை ஒருங் கிணைக்கும் பணியில் மத்திய - மாநில ஆளுமைகள் அமையவில்லை.

பிரதமர் பேசிய பேச்சில் ஆக்கபூர்வ தடுப்பு அணுகுமுறைகள் இல்லை.

முன்பு முழு ஊரடங்கை முதலில் செய்ய யோசனை கூறிய மத்திய அரசும், பிரதமரும் இப்போது ‘‘அது கடைசி ஆயுதமாக இருக்கவேண்டும்'' என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டுக் கூறுவது விசித்திரமாக உள்ளது!

ஆக்சிஜன் பற்றாக்குறை' என்ற குரல் மாநிலங்களில் எழுகிறது; ‘‘இல்லை, இருப்பு இருக்கிறது'' என்கிறது மத்திய அரசு - பின் எப்படி நோயாளிகள் அந்தப் பற்றாக்குறையினால் மரணம் அடையும் வேதனை ஏற்படுகிறது? எங்கோ ஆளுமையில் இருக்கும் இடைவெளிதானே இதற்குக் காரணமாக இருக்க முடியும்!

வட மாநிலங்களில் நடைபெறும் அவலங்கள்!

வட மாநிலங்களில் பலவற்றில் போதிய படுக்கைகள் ஏற்பாடு இல்லை. வெட்ட வெளியில் பரிசோதனை நடைபெறுவதை ஊடகங்கள் காட்சிப்படுத்தும் அவ லமும் உள்ளது!

‘‘உண்மைகளை மறைப்பதால் கரோனாவைத் தடுக்க முடியுமா?'' என்ற தலைப்பில்இந்து தமிழ் திசை' நாளேட் டில் வெளிவந்துள்ள தலையங்கம் (2 ஆம் பக்கம் காண்க) உண்மையை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. மக் களாட்சியில் இந்த அணுகுமுறை நோய் பரவுதலைவிட மிகவும் கொடுமை அல்லவா?

தடுப்பூசிக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது ஏற்கத்தக்கதா?

எல்லா மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய - மாநில ஆளும் அரசுகளின் தலைமை, உறுதியளித்துப் பிரச்சாரம் செய்துவிட்டு, இப்போது 18 வயதுள்ளவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் போடப்படும் தடுப்பூசிக்குக் கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது என்பது ஏற்கத்தக்கதா?

பேரிடர் நிதி, பிரதமர் உருவாக்கிய தனி அறக் கட்டளை நிதி (‘PM Cares') இவை இந்த நிதிச் சுமையை ஏற்பதுதானே நியாயம்?

தனியார் நிறுவனங்கள் இனி இதை வெளிச்சந்தையில் தாறுமாறு விலையில் விற்கும் நிலையை ஏற்படுத்து வதைத் தவிர்க்க முடியுமா?

குஜராத் மாடல்' என்று மார்தட்டிய மோடியின் ஆளுமை குஜராத்தில் எப்படிப்பட்ட அடிக்கட்டு மானத்தை அவரது 13 ஆண்டு ஆட்சி கால பொது சுகாதாரத் துறை ஏற்படுத்தியுள்ளது? பொது சுகாதாரத் துறையின் மேன்மையைப் பெருக்கவோ, வளர்க்கவோ மத்திய அரசு, மாநிலங்களில் கடந்த ஓராண்டில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  ‘‘வளர்ச்சி, வளர்ச்சி,'' ‘சப்கோ சாத், சப்கோ விகாஸ்' தேர்தல் முழக்கமான நிலை - செயலுருவம் கொள்ளவில்லையே!

செயலுருவம் கொண்டிருந்தால், இன்றுள்ள தொடர் வேதனைகள் பற்பல மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்குமா?

நீட்' தேர்வு போன்ற மருத்துவ வளர்ச்சி முட்டுக் கட்டைகள் வேகமான வளர்ச்சியைத் தடுக்கத்தான் பயன்பட்டன என்பதை ஏனோ இன்னமும் ஒப்புக் கொள்ள மோடி அரசு மறுக்கிறது?

விரைந்து செயல்படவேண்டியது அவசியம்

‘‘Better late than Never'' இப்போது - ‘‘காலந்தாழ்ந்தேனும் செய்க'' என்ற அடிப்படையில், பொது சுகாதாரம் - மக்கள் நல்வாழ்வுத்  துறை - அடிக்கட்டுமானத்தை - மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள் இவற்றை நாடு தழுவிய அளவில் - மாநில அரசுத் துறையில் பெருக்கிட தாராளமாக நிதியை ஒதுக்கவேண்டும். 3 விழுக்காடு பொது சுகாதாரத் துறை நிதியை - 6 விழுக்காடாக உடனே உயர்த்தி, கட்சிக் கண்ணோட்டம், அரசியல் கண்ணோட்டமின்றி, மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஆளுமைக் குழுக்களை - ஆலோசனைக் குழுக்களை அமைத்து விரைந்து செயல்படவேண்டியது அவசியம் என்ற பாடத்தை காலம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கரோனா இழப்புகள் மீண்டும் திரும்பாமலும், விரிவாகப் பரவாமலும் தடுக்க இப்படிப்பட்ட ஆக்க ரீதியான அணுகுமுறைகளை மத்திய அரசு - மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, செயல்படல் அவசியமாகும்!

மக்களாட்சியில் அனுபவங்கள் நமக்குப் பாடங்களாகட்டும்

மக்களாட்சியில் அனுபவங்கள் நமக்குப் பாடங் களாகட்டும்; பாடங்களால் ஏற்படும் படிப்பினைகள் நமக்குத் தீர்வுக்கான சரியான பாதையை அமைத்துக் கொடுக்கட்டும்!

அலட்சியமோ, பிடிவாதமோ, தன்முனைப்போ, மக்களாட்சியின் மாண்புகளைச் சிதைத்துவிடும் - மறவாதீர் ஆட்சியாளர்களே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

22.4.2021            

No comments:

Post a Comment