2030க்குள் முக்கிய துறைமுகங்களில் இருந்து 45% சரக்கை கையாள இலக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

2030க்குள் முக்கிய துறைமுகங்களில் இருந்து 45% சரக்கை கையாள இலக்கு

புதுடில்லி, ஏப்.7 நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களின் மொத்த சரக்கு போக்குவரத்தில் 45 சதவீதத்தை வரும் 2030க்குள் கைப்பற்ற, ரயில்வே இலக்கு நிர்ணயித்து உள்ளது.

ரயில்வே துறை தனது எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை, தேசிய ரயில் திட்டம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் இருந்து தற்போது 27 சதவீத சரக்குகளை ரயில்வே கையாண்டு வருகிறது. தற்போது, 70 கோடி டன் சரக்கு பொருட்கள் கையாளப்படுகின்றன.

இதை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் 92 கோடி டன்னா கவும், 2030ஆம் ஆண்டுக்குள் 140 கோடி டன்னாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள், நாட்டின் முக்கிய துறைமுகங்களிடம் இருந்து பெறப்படும்.

முக்கிய துறைமுகங்களின் மொத்த சரக்குப் போக்குவரத்தில் இது 45 சதவீதமாகும்.

இதற்காக, ரயில்வேயின் கட்டமைப்பு வசதிகள் மேம் படுத்தப்படும். 2024க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.தமிழகத்தில் சென்னை கடற்படை - அத்திப்பட்டு (காமராஜர் துறைமுகம்), மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய துறைமுகங்களுக்கான போக்குவரத்து திட்டங்கள் நிறை வேற்றப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் தற்போது பெட்ரோலியப் பொருட்கள், எண்ணெய், இரும்பு தாது, ஸ்டீல், உரம், உணவு தானியங்கள், கன்டெய்னர்கள் மற்றும் இதர பொருட்கள் கையாளப்படுகின்றன.

* நாடு முழுவதும் உள்ள துறை முகங்களின் மூலமாக தற்போது ஆண்டுக்கு 120 கோடி டன் பொருட்கள் கையாளப்படுகின்றன.

* இவற்றில் 70 கோடி டன் சரக்குகள் சென்னை துறைமுகம் உள்ளிட்ட 14 பெரிய துறைமுகங்களில் கையாளப் படுகின்றன.

* மீதமுள்ள 50 கோடி டன் சரக்குகள் நாட்டின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 205 சிறிய துறைமுகங்களின் மூலம் கையாளப்படுகின்றன.

No comments:

Post a Comment