முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 ; எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு


சென்னை, ஏப்.10 முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று (9.4.2021)  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம். வணிக வளாகங்கள், முடித்திருத்தகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். சென்னையில் கரோனா  விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா ரூ. 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாநகர் மண்டலத்தில் விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 முறைக்கு மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் மூடி முத்திரை வைக்கப்படும். கரோனா  குவாரண்டன் விதியை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 441 பேருக்குகரோனா  தொற்று

சென்னை, ஏப்.10 தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 441 பேருக்கு கரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய (9.4.2021) கரோனா  பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 87 ஆயிரத்து 505 பேருக்கு கரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 289 ஆண்கள், 2 ஆயிரத்து 152 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 441 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,752 பேரும், கோவையில் 473 பேரும், செங்கல்பட்டில் 468 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 11 பேரும், பெரம்பலூரில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கரோனா வுக்கு அரசு மருத்துவமனையில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 9 பேரும் என 23 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 10 பேரும், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சியில் தலா இருவரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் என 11 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 863 பேர் கரோனா  நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா  பாதிப்பில் இருந்து நேற்று 1,890 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 33 ஆயிரத்து 659 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments