கோயிலும், 'தினமணி'யும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

கோயிலும், 'தினமணி'யும்!

'தினமணி' நாளேட்டில் கோதை ஜோதி லட்சுமி என்ற அம்மையார் அடிக்கடி நடுப் பக்கக் கட்டுரையை எழுதி வருகிறார்.

அவை பெரும்பாலும் ஆரிய - பார்ப்பன சார்புத் தன்மை யிலும், திராவிட எதிர்ப்பும், பக்தி மணமும் கலந்த கலவையாக இருக்கக் கூடியவை.

7.4.2021 நாளிட்ட 'தினமணி'யில் "கோயில் என்பது...." என்ற தலைப்பில் அவருடைய கட்டுரை இடம் பெற்றுள்ளது.

(1) 'தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல' என்றதோர் அரசியல் வாதம் நிலவுகிறது. கோயில்களில் நடக்கும் வழிபாடுகள், கோயில் முறைமை அனைத்தும் ஆரியர் புகுத்திய சதி என்பதான அர்த்தமற்ற பேச்சுகள் உலவுகின்றன. தமிழறியாதவர்கள் அவ்விதம் பேசலாம்; தமிழறிந்த சான்றோர் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்" என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கான மதம் என்றால் அதன் பெயர் குறைந்தபட்சம் தமிழில் இருக்க வேண்டாமா என்பது முதல் கேள்வி.

ஹிந்து என்ற பெயரே அந்நியனான வெள்ளைக்காரன் சூட்டிய பெயர். "வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது, அவன் மட்டும் ஹிந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்"

- இவ்வாறு சொல்லியிருப்பவர் 'தினமணி' வட்டாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாவார். (ஆதாரம்: 'தெய்வத்தின் குரல்' முதல் பாகம் - பக்கம் 267)

'தினமணி' கட்டுரையாளருக்கு காஞ்சி சங்கராச்சாரியார் பதில் சொல்லி விட்டதாகவே கருத வேண்டும். வெள்ளைக்காரன் சூட்டிய பெயர்தான் ஹிந்து மதம் மற்றபடி நாட்டில் சைவம், வைஷ்ணவம், சாக்தர், முருக பக்தர் உள்ளிட்ட பல்வேறு மதங்களும்,  கடவுள்களும் இருந்திருக்கின்றன என்பதுதானே உண்மை.

தமிழர்கள் ஹிந்துகள் அல்ல என்றோர் அரசியல்வாதம் கிளம்புகிறதாம். தமிழறியாதவர்கள் அவ்விதம் பேசலாம் என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார் அம்மையார்.

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரும், எம்.எல். பிள்ளை என்று கூறப்படும் கா. சு.பிள்ளை (கா. சுப்பிரமணிய பிள்ளை), நாவலர் சோம சுந்தர பாரதியாரும் தமிழ் அறிஞர்கள் அல்லர் என்று அம்மையார் கூறப் போகிறாரா?

"கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டது அரசன் வரி வசூலிக் கவே"  என்று அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யன் எழுதியதற்கு என்ன பதில்?

பாரதத்தின் வேதாந்தபகுதியான உத்தர கீதை என்ன சொல்லுகிறது?

"துவிஜதர்களுக்கு அதாவது, இரு பிறப்பாளர்களான பிராமணர்களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உள்ளவர்களுக்குத் எங்கும் தெய்வம்!" என்று கூறப்பட்டுள்ளதே. அதன்படி கோயிலும், அதனுள் அடித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுள் என்ற சிலையும் புத்தி குறைந்தவர்களுக்கே என்பது விளங்கவில்லையா?

கால்டுவெல் எழுதிய தமிழ்நூலான "பரதகண்ட புராதனம்" வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம் - பதிப்பாசிரியர் பொ. வேல்சாமி, என்ன கூறுகிறது?

(1) வேத காலம் - பஞ்ச பூத வணக்கம் (பக்கம் 9)

(2) இராமாயண காலம் - வீரர் வணக்கம் (பக்கம் 28)

(3) பாரத காலம் - வீரர் வணக்கம் (பக்கம் 28)

(4) புராண காலம் - பிர்மா, சிவன், விஷ்ணு என்ற தெய்வங்கள் (பக்கம் 97).

வேத காலத்துக்குரிய ஆசாரம் யாகம், இராமாயணக் காலத்துக்குரிய ஆசாரம் தவம், பாரத காலத்துக்குரிய ஆசாரம் தீர்த்த யாத்திரை, புராண காலத்துக்குரிய ஆசாரம் கோயில் பூஜையே (பக்கம் 87,88). இருக்கு வேதத்தில் உள்ள ஆயிரத்து இருபத்தெட்டுப் பாட்டுகளிலும், சிவன் என்கிற பெயர் இல்லை, பார்வதி, உமையவள், துர்க்கை, காளி முதலான பேர்களுடைய வர்களும் அப்போதில்லை. அப்பொழுது பிள்ளையாரும், சுப்பிர மணியனும் இல்லை; வீரபத்திரனும், வயிரவனும், அய்யனாரும் அப்பொழுது இல்லை. அக்காலத்திலே லிங்கமும் தெரியாது. இராமனும், கிருஷ்ணனும் இல்லை, இலட்சுமியும் இல்லை,  அனு மானும் இல்லை, விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அப் பொழுது தெரியாது. கயிலாயமும், வைகுண்டமும் அப்போ தில்லை (பக்கம் 19).

இதற்கெல்லாம் 'தினமணி' எழுத்தாளர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

உண்மைகள் இவ்வாறு இருக்க, கோயில்கள் சமூக ஒருங் கிணைப்புக்கான களமாக இருந்திருக்கின்றன என்று 'தினமணி' கட்டுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

பார்ப்பன உயர் ஜாதித் தன்மையைக் காப்பாற்றுவதற்கும், கோயிலின் பெயரால் சுரண்டல் தொழிலை நடத்துவதற்கும்தானே கோயிலேயொழிய வேறு ஒன்றும் இல்லை என்பதுதான் வரலாறு கூறும் உண்மை   - உண்மையிலும் உண்மையாகும்.

No comments:

Post a Comment