கருநாடகத்தில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 5, 2021

கருநாடகத்தில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும்

 அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை

பெங்களூரு, ஏப்.5 பல்வேறு உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அரசுக்கு, நிபுணர்கள் குழு பரிந்துரை வழங்கி உள்ளது.

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு...

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், கரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து அரசால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினர் சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளனர்.

அவற்றில் முக்கியமானதாக பல்வேறு உடல் நலக்குறைவு களால் அவதிப்படும் 20 வயதுக்கு மேற்பட்டோரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உடனடியாக கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரை செய்திருக் கிறார்கள். தற்போது கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் இன்னும் 2 மாதங்கள் அதிகமாக இருக்கும்.

உயிர் இழப்பு குறையும்

அவ்வாறு 2 மாதங்கள் அதிகமாக இருக்கும் போது பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது கடினம். வென்டிலேட்டர் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என்றால், பல்வேறு உடல் நலக்குறைவுகளால் அவதிப்படும் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும். அவ்வாறு அவர்கள் போட்டுக் கொண்டால், கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

மருத்துவமனைகளில் படுக்கை பிரச்சினைகள் ஏற்படாது. அத்துடன் பல்வேறு உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் உயிர் இழக்க நேரிடுகிறது. இந்த உயிரிழப்பை தடுக்க உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியமானதாக இருக்கும். கரோனா பாதித்து உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் குறையும் என்று நிபுணர்கள், அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment