கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கரோனா தொற்று உறுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 16, 2021

கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கரோனா தொற்று உறுதி!

 டேராடூன், ஏப்.16 கும்பமேளா பகுதியில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1,700 பக்தர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

உத்தரகாண்டின் அரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகிறது.

கரோனா காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம், தனி நபர் இடைவெளி, முக கவசம் போன்ற விதிமுறைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் 670 எக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவிபவர்களால் இந்த விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி நீராடி வருகின்றனர்.

கும்பமேளாவின் மிக முக்கிய நாட்களான சோமவதி அமாவாசை (ஏப்ரல் 12 ஆம் தேதி), மேஷ் சங்கராந்தி ஆகிய 2 நாட்களில் மட்டும் சாமியார்கள், சாதுக்கள், பக்தர்கள் என 48 லட்சத்துக்கு அதிகமானோர் நீராடியுள்ளனர்.

இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் மக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்பு படையினராலும் முடிய வில்லை. அத்துடன் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் சாதுக்கள், கரோனா பரிசோதனைக்கும் மறுப்பு தெரிவித்தனர்.

இதன் விளைவாக அங்கு கரோனா தொற்று அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு கடந்த 10 முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் வரத் தொடங்கி இருக்கின்றன.

இதில் 1,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோரின் முடிவுகள் வர வேண்டி யிருக்கின்றன. இதனால் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment