மராட்டியத்தில் முழு ஊரடங்குபோல் 15 நாள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

மும்பை, ஏப்.14 அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளித்துள்ள மராட்டிய அரசு இன்று இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. மராட்டியத்தில் தினசரி கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சிகிச்சை பெறும் தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது.

கரோனாவின் கொட்டத்தை அடக்க மாநில அரசு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் தொற்று நோய் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு திணறி வருகிறது.இதனால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசு முடிவு செய்தது. இதற்கான புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

இந்தநிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்றிரவு 8.30 மணிக்கு சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு உரை யாற்றினார். அப்போது அவர் மாநிலம் முழுவதும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தார். ஆனால் இது முழு ஊரடங்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

அதன் விவரம் வருமாறு:-

* மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

* சரியான காரணமின்றி யாரும் வீட்டை விட்டு பொது இடங்களுக்கு வரக்கூடாது.

* அனைத்து பொது இடங்களும் மூடப்படும்.

காய்கறி, மளிகைக் கடைகளுக்கு அனுமதி

* மருத்துவம், மளிகைக் கடை, பால், பேக்கரி, காய்கறி, பழம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

* அத்தியாவசியத் தேவைகளுக்காக பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் பொதுப் போக்கு வரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

பொதுப் போக்குவரத்தில் நின்று செல்ல அனுமதி இல்லை. முகக்கவசம் அணிய வேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதம்.

* டாக்சி, ஆட்டோ அத்தியாவசியத் தேவைகளுக்கு அனுமதிக்கப்படும். ஆட்டோவில் ஓட்டுநர் மற்றும் 2 பயணிகளுக்கு அனுமதி. டாக்சியில் 50 சதவீத பயணிகளுக்கு அனுமதி.

* தனியார் பேருந்து உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி. இதில் விதிமுறை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

* வீடுகளுக்குச் சென்று உணவு வினியோகிக்க அனு மதிக்கப்படும். சாலையோர உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.

* பத்திரிகைகளை விநியோகிக்க அனுமதி.

* திரையரங்கு, அத்தியாவசியமற்ற பொருட்களை விற்காத கடைகள், மால்களுக்கு அனுமதி இல்லை.

* மத வழிபாட்டுத் தலங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

* பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

மேற்கண்ட உத்தரவுகள் இன்று(புதன்கிழமை) இரவு 8 மணி முதல் அமலுக்கு வருகிறது. மே  ஒன்றாம் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும்.

Comments