'தினமணி'யின் ஜாதி அரசியல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 18, 2021

'தினமணி'யின் ஜாதி அரசியல்!

சங்கராச்சாரியாரே, "கம்யூனல் ஜி.. விஷயத்தில் நான் கொஞ்சம் கம்யூனல் பேஸிஸில் பேசுகிறேன்"  ('தெய்வத்தின் குரல்' மூன்றாவது பாகம்) என்று கூறினார் என்றால், 'தினமணி'யின்  வைத்தியநாதன் அய்யர்வாள் ஜாதி உணர்வு மேலோங்கிக் கொக்கரிப்பதும்; எதையும் ஜாதீயக் கண்ணோட்டத்தில் பார்ப்பதும் ஆச்சரியமான ஒன்றல்லவே!

கடந்த 16ஆம் தேதி 'தினமணி'யின் ஆறாம் பக்கத்தில் ஒரு கட்டுரையின் தலைப்பு: "சிதறும் முதலியார் சமூக வாக்குகள்!" என்பதாகும்.

"திருமுருக கிருபானந்தவாரியாரின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 25) அரசு விழாவாகக் கொண்டாடப்படும்  என்ற அதிமுக அரசின் உத்தரவு, தமிழகத்தில் முதலியார் சமூகத்தினர் அதிகம் உள்ள தொகுதிகளில் வாக்குகள் சிதறும் நிலையை உருவாக்கியுள்ளது.

இது திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் முதலியார் சமூகத்தினர் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்" என்று எழுதுகிறது 'தினமணி'.

தமிழ்நாட்டின் கடந்த கால தேர்தல்களை அறிந்தவர்களுக்குத் 'தினமணி'யின் கூற்று எத்தகைய அற்பமானது என்பது விளங்காமற் போகாது.

தருமபுரி மாவட்டத்தில் அதிகம் வன்னியர்கள்  என்றாலும் பா...வின் மாநிலப் பொறுப்பாளர்களே மக்களவைத் தேர்தலிலும், ஏன் - ஒரு சட்டமன்ற தொகுதியிலும் குறிப்பிட்ட ஜாதி வெற்றி பெறத் தவறியதுண்டே!

கடலூரை எடுத்துக் கொண்டாலும் பெரும்பான்மையாக இருந்தாலும் ஜாதி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது கிடையாதே! ஜாதிக்கட்சி எல்லாம் கூட்டணி வைத்து நின்ற தேர்தலில் முழு தோல்வியைச் சந்திக்கவில்லையா? பா... தலைவர் அத்தகையதோர் முயற்சியில் ஈடுபட்டு, 60க்கும் மேற்பட்ட ஜாதி சங்கங்களை ஒருங்கிணைத்தும் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையே!

அதுவும் கிருபானந்தவாரியாரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அதிமுக அரசு அறிவித்து விட்டதாம்;  அதனால் முதலியார் வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்குப் போய் விடுமாம் - அதனால் திமுகவுக்குக் கலக்கமாம்!

'தினமணி' சொல்லப் போய்தான் கிருபானந்தவாரியார் முதலியார் என்பது கூட வெளியுலகத்துக்குத் தெரிகிறது. வாரியார் அறியப்பட்டது - ஜாதி அடிப்படையில் அல்ல.  அவரின் பக்தி சார்ந்த கதாகாலட்சேபத்தின் அடிப்படையில்தான்.

வேலூரில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றதுண்டு. அங்கு வெற்றி பெற்றவர்கள் எல்லாம் முதலியார்கள்தானா?

ஏதோ ஒரு வகையில் ஜாதி உணர்வு மங்கிப் போய் விடக் கூடாது - அது பட்டுப் போகாமல் துளிர்க்க அவ்வப்போது தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் புத்தியும், குயுக்தியுமாகும். அதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறது பார்ப்பனீயம்.

இதில் அண்ணாவையும், நாவலர் நெடுஞ்செழியனையும், இனமானப் பேராசிரியர் அன்பழகனையும் இழுத்துக் (படத்துடன் வெளியிட்டுள்ளது) கொண்டு வந்து, அவர்கள் முதலியார் என்று அடையாளம் காட்டும் போக்கிரித்தனத்தை எது கொண்டு சாற்றுவது?

ஜாதி உணர்வைத் தாண்டி ஜாதி ஒழிப்பு இயக்கத்தில் பயணித்த திராவிடர் இயக்க முன்னோடிகள் அவர்கள் இல்லையா? நாவலர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் இல்லையா?

நாவலர் உயிரோடு இருக்கும்போதோ, இனமானப் பேராசிரியர் உயிருடன் இருக்கும் போதோ அவர்களை ஜாதி அடிப்படையில் 'தினமணி'கள் அடையாளம் காட்டியிருந்தால் 'செவுள் பிஞ்சு விடும்' அளவுக்கு முரட்டு அடி கிடைத்திருக்கும்! அவர்கள் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் வைத்தியநாத அய்யர்கள் இப்படி எல்லாம் 'ஜாதிப் புத்தியோடு' எழுதுகோல் பிடிக்கிறார்கள்.

1971ஆம் ஆண்டு தேர்தலின்போது இதே 'தினமணி' "அய்யப்பனையும், விநாயகனையும் 'ஸ்தோத்திரித்து' திமுக தோற்க வேண்டும்" என்று வரிந்து கட்டி எழுதியதுண்டே!

பிள்ளை பிழைத்த பாடு இல்லையே! தமிழ்நாட்டு தேர்தலில் வரலாறு கண்டிராத அளவுக்கு திமுக 184 இடங்களில் வெற்றி பெற்றதை நினைவூட்டுகிறோம்!

'இது பெரியார் பூமி, திராவிட பூமி' என்று சொல்லப்படுவதைக் கண்டு ஆத்திரத்தில் இந்த வகையில் சீழ் பிடித்த பூணூல் பேனாவால் அருவருப்பான முறையில் அரசியல் கட்டுரை எழுதுவது - வெட்கக் கேடானது!

'தினமணி' என்பது 'இனமணி' என்பதை இப்பொழுதாவது தமிழர்கள் புரிந்து கொள்ளட்டும்!

No comments:

Post a Comment