இதோ: குடந்தையில் பூத்த ஒரு "குறிஞ்சி மலர்!" (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 18, 2021

இதோ: குடந்தையில் பூத்த ஒரு "குறிஞ்சி மலர்!" (2)

பெரியாரை அழைத்தார்

"காசியிலிருந்து கும்பகோணம் திரும்பிய பின் இராதா இடைநிலைப் படிப்பைப் (Intermediate) படிக்க விரும்பினார். படிக்கத் தொடங்கவும் செய்தார். ஆனால் அரசியல் அவரை வெகு வலுவாக இழுத்தது. ஆகவே இடைநிலைப் படிப்பை படிக்கும் எண்ணத்தை விட்டு விட்டார். இப்பொழுது அவருக்கு வயது இருபது நிரம்பி இருபத்தொன்று நடந்து கொண்டு இருந்தது. பதினாறாவது வயதில் தி.மு..வில் சேர்க்க மறுக்கப்பட்ட இராதா பதினெட்டு வயது முடிந்த உடனேயே அக்கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இராதாவின் வாக்குத் திறன் எந்த ஒரு கூட்டத்திலும் அவரை முதன்மைப் படுத்தியது. இராதா பேசுகிறார் என்றால் அக்கூட்டத்தில் இளைஞர்களின் கூட்டம் அலை மோதும். பல கூட்டங்களில் பேசிய அவருக்குத் தன் சொந்த ஊரில் தான் சார்ந்த சௌராஷ்டிர மக்களிடையே பேசுவதற்கு, பெரியாரை அழைக்க வேண்டும் என்று தோன்றியது. அதன்படி பெரியாருக்கு அழைப்பு விடுத்தார். ஒரு இளைஞன் அவ்வளவு ஆர்வமாக அழைப்பதைக் கண்ட பெரியாரும் வருவதாக ஒப்புக்கொண்டார். 27-02-1955 அன்று பெரியார் கும்ப கோணத்தில் பேசுவது என்று ஏற்பாடு ஆயிற்று.

பெரியார் கும்பகோணத்தில் சௌராஷ்டிர மக்கள் வாழும் பகுதியில் பேச வருகிறார் என்ற செய்தியை அறிந்த அச்சமூகத்தில் உள்ள மூத்த மக்கள் அதை விரும்பவில்லை. சௌராஷ்டிர மக்கள் வைதீகத்திலும் கடவுள் நம்பிக்கையிலும் வெகுவாக ஊறியவர்கள். பொதுவாக அவர்கள் யாருடனும் பகைமை பாராட்ட மாட்டார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை உடையவர் களையும், தங்களுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்பவர்களையும், அமைதியுடன் புறக் கணித்துப் போவார்களே ஒழிய மல்லுக்கு நிற்க மாட்டார்கள். ஆனால் இப்பொழுது அச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனே சமூகத்தின் பொதுக் கருத்துக்கு எதிராக நிற்கும் போது,

அதுவும் இளைஞர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் போது, அவர்களால் கண்டும் காணாமலும் போக முடியவில்லை .

அவர்கள் கும்பகோணத்தில் பெரியார் பங்கு கொள்ள இருக்கும் கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று முயன்றனர். இராதா இக்கூட்டத் திற்கு, திண்டுக்கல் திரு.என்.வி.சுப்புராம் தலைமை தாங்குவார் என்று அறிவித்திருந்தார். திண்டுக் கல்லில் என்.வி.ஜி.பி. (N.V.G.B.) சுப்புராம் என்ற சௌராஷ்டிரர் மிகப் பிரபல மானவர், பணக்காரர். அவர் பெரியார் பங்கு கொள்ளும் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை. கும்பகோணத்திலிருந்து, சில பெரியவர்கள் திண்டுக்கல் சென்று என்.வி.ஜி.பி. சுப்புராமைச் சந்தித்தனர். அவர் கும்பகோணத்தில் நடக்கும் கூட்டம் பற்றி எதுவும் அறியாதவராக இருந்தார். அப்படி என்றால் எஸ்ஆர். இராதா அறிவித்தது பொய்யா?

அவர்கள் கும்பகோணத்திற்குத் திரும்ப வந்து கூட்டத்திற்கு உண்மையில் தலைமை தாங்கப் போவது யார் என்று விசாரித்தனர். அவ்வாறு விசாரித்ததில் என்.வி.சுப்புராம் என்பவர் கும்பகோணத்தில் தறி நெய்து கொண்டு இருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு சௌராஷ்டிரர் என்று அறிந்தார்கள். உடனே அந்த இளைஞனை அணுகி, பெரியார் கலந்து கொள்ளும் கூட்டத் துக்குத் தலைமை தாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் எஸ்.ஆர்.இராதாவின் சொற்படி தான் நடப்பேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

முதல் கட்டத் தோல்வி அடைந்த பின், அவர்கள் கும்பகோணம் நகர தி.மு..வினரை அணுகி, "தி.மு.. கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.இராதா அக்கட்சியின் அனுமதி இல்லாமல் பெரியாரை அழைத்துப் பேச வைப்பது சரியா? இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது ஆகாதா?" என்று கேட்டனர். கும்பகோணம் நகர தி.மு. வினரும் இராதாவிடம் இதைப் பற்றிப் பேச, "தான் செய்வதில் தவறு ஏதும் இல்லை " என்று விடை அளித்துவிட்டார். இராதாவின் மறுமொழியில் மனம் நிறைவுறாத அவர்கள் அண்ணாவிடம் போய் முறையிட்டனர். அண்ணாவோ, பெரியார் கொள்கைகள் பரவுவது தி.மு..வுக்கு வளர்ச்சியே என்று கூறிவிட்டு இராதா தன் விருப்பப்படி செய்ய விட்டுவிடுமாறு கூறிவிட்டார்.

இரண்டாவது கட்டத்திலும் தோல்வி அடைந்தவுடன், சௌராஷ்டிர சமூகப் பெரியவர்கள் திராவிடர் கழகத்தினரை அணுகி தி.மு..வைச் சேர்ந்த எஸ்.ஆர்.இராதா அரசியல் கட்சி, மரபுகள் (Protocol) எதையும் பின்பற்றாமல், கட்சித் தலைவருக்கும் தெரியாமல் திராவிடர் கழகத்திலும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் பெரியாரை அழைத்துக் கூட்டம் போடுவதைப் பற்றிக் கூறினார்கள். பெரியாரின் தொண்டர்களும் எவ்வித மரபும் பின்பற்றப்படாமல் நடத்தவிருக்கும் கூட்டத் திற்குப் பெரியார் செல்லக் கூடாது என்று வற்புறுத்தினார்கள். ஆனால் பெரியார் தான் வாக்கு அளித்து விட்டதாகவும், அதைக் காப் பாற்றுவது மரபைப் பின்பற்றுவதை விட முக்கியம் என்றும் கூறிவிட்டார். மேலும் ஒரு இளைஞன் இவ்வளவு ஆர்வத்துடன் செயல்படும்போது அவரை ஊக்குவித்துத் தான் ஆகவேண்டும் என்றும், அவர்களுக்கு மனம் இல்லாவிட்டால் கூட்டத்தில் கலந்து, கொள்ள வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

ஆகவே கும்பகோணத்தில் பெரியார் வந்து பேசப் போவது உறுதி ஆகி விட்டது. அந்த நேரத்தில் நடிகர் எம்.ஆர்.இராதா நாடகங்களை நடத்து வதற்காக, கும்பகோணத்தில் முகாமிட்டு இருந்தார். இதை அறிந்த எஸ்.ஆர்.இராதா அவரையும் கூட்டத்தில் பேச வேண்டும் என்று அழைக்கச் சென்றார்.

தன்னை அழைக்க வந்த செய்தியை அறிந்தவுடன் எம்.ஆர்.இராதா உடனே வந்து, யாரும் அழைக்கா விட்டாலும் அக்கூட்டத்தில் கலந்து கொள்வது என்று நினைத்து இருந்ததாகவும், அழைப்பு கிடைத்ததில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் கூறினார். சௌராஷ்டிர இளைஞர் சங்கத்தின் சார்பில் 27-02-1955 அன்று நடக்க விருந்த கூட்டத்தில் எம்.ஆர்.இராதா கலந்து கொள்ளு கிறார் எனும் அறிவிப்பு ('விடுதலை'

26-2-1955 இதழில் வெளி வந்தது. "

(தொடரும்...)

No comments:

Post a Comment