குடந்தைப் பொதுக்குழுவும் கோட்டைக்கு வழியும் - பேராசிரியர் நம்.சீனிவாசன்

தோழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அழைப்பு வந்து விட்டது.

திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்ட அழைப்பு தான்.

'தமிழர் தலைவரை என்று காண்போம்' என ஏங்கித் தவித்தன கண்கள்.

ஓராண்டு காலத்தை முடக்கிப் போட்டது கரோனா எனும் கொடுந்தொற்று.

வீட்டிற்குள் இருப்பு கொள்ளாமல் தவித்தது தோழர்கள், தொண்டர்கள் மட்டுமல்ல; தலைவரும் தான்.

காணொலி நிகழ்ச்சிகள் நடந்தாலும் கண்கள் சந்திப்பது போலாகுமா?

குடந்தையில் பொதுக்குழு - அறிவிப்பு தித்தித்தது.

மார்ச் 13 நாளினை எதிர்பார்த்திருந்தனர் தோழர்கள்.

தமிழர் தலைவர் உற்சாகமாய்ப் புறப்பட்டார் பொதுக்குழுவிற்கு

அய்ஸ்கிரீம் தலையில் இருக்கும் செர்ரிப்பழம் போல

குடந்தையின் உச்சியில் தாராசுரம் எனும் சிற்றூர்.

கழகக் கொடிகள் காற்றில் படபடத்தன.

குடந்தைநகர் நுழைவாயிலில் கழகத் தோழர்கள் திரண்டிருந்தனர்.

தலைவரின் வாகனம் தாராசுரம் அடைந்தது.

வாழ்க முழக்கம் விண்ணைப் பிளந்தது.

அன்பான வரவேற்பை புன்னகையுடன் ஏற்றார்.

பொதுக்குழு நடக்கும் ராயாமகாலுக்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்.

அரங்கம் நிரம்பி வழிந்தது.

வரவேற்புக் குழுவினர் இருக்கைகளை அதிகப்படுத்திக் கொண்டேயிருந் தனர். சரியாய் 10.30 மணிக்குப் பொதுக்குழு தொடங்கியது.

குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதியின் வரவேற்புரையில் மகிழ்ச்சி முகாமிட்டிருந்தது.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை யுரை நிகழ்த்தினார். திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது; ஆனால் தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் வகையில் இயக்கத் தைக் கட்டி எழுப்பியிருப்பவர் தமிழர் தலைவர் என்றார்.

நடைபெறவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், மதவெறி எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்பு, கூட்டாட்சிக்கு எதிரான ஒற்றை ஆட்சி முறை திணிப்புக்கு எதிர்ப்பு, சமத்துவத்திற்கு குரல் கொடுப்பு, சமூக நீதிக்கு ஆதரவு, தமிழ்மொழி காக்கப்பட, தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாகத் திகழ, செயல் திட்டம் வகுக்க பொதுக் குழுவினைத் தலைவர் கூட்டியிருக்கிறார் என்றார்.

திராவிடம் எனும் பெயரை வைத்துக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக அடிமைச் சேவகம் செய்து கொண்டிருப்பவர்களையும் சாடினார். கடந்த காலங் களில் தலைவர் நிறைவேற்றிய தீர்மானத்தை, நெய்மணக்கும் நெய்வேலித் தீர்மானம்' எனக் கலைஞர் புகழ்ந்ததை நினைவு கூர்ந்தார் செயல வைத்தலைவர்.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை நிகழ்த்தும் போது, தமிழர் தலைவர் உடல் நிலை, வயது, மருத்துவரின் ஆலோசனை இவற் றையெல்லாம் மீறி கடந்த ஓராண்டு காலமாக அறிக்கைகள், காணொலி கூட்டங்கள், புத்தகங்கள் படைத்தல் என்று கடுமையாக உழைத்ததை நினைவு கூர்ந்தார். விரைவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தகங்கள் வெளிவரும் என்று அறிவிப்புச் செய்தார். கழகத் தலைவரின் 21 அம்சத்திட்டத்தைத் தோழர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும், கழக அலுவலகப் பதிவேடுகளில் தரவுகள் இடம் பெற்றி ருக்க வேண்டும் என்றும் பணியை முடுக்கி விட்டார்.

பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் வேரூன்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு தோழர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்றார். அலட்சியமாக இருந் தால் விலை கொடுக்க வேண்டி வரும் என எச்ச ரித்தார். இந்திய அரசியல் களம் குறித்தும், 1971 சட்ட மன்ற தேர்தல் முடிவு குறித்தும், இன்றைய நிலை குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்.

இந்தத் தேர்தலின் மய்யப்புள்ளி திராவிட உணர்வா? எதிர்ப்பு உணர்வா? என்பதுதான் என்று அறுதியிட்டு உரைத்த கவிஞர் கலி.பூங்குன்றன், 'திராவிடம் வெல்லும்' முழக்கத்தின் மகத்துவத்தை விரித்துரைத்தார். திராவிடம் எனும் பெயரும், 'அண் ணா எனும் பெயரும் லட்சியத்திற்கு விரோதமாக அடிமை சேவகம் செய்யும் அமைப்பாக மாறி இருப்பதைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வூட்டினார். தேர்தலில் பெறும் வெற்றி தி.மு. வெற்றியோ அல்லது ஸ்டாலின் வெற்றியோ அல்ல; திராவிடப் பண்பாடு காப்பாற்றப்டுவதற்கு இந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் 21.02.2020 அன்று திருச்சியில் நடைபெற்ற பொதுக் குழுவிற்கும், 2021 மார்ச் 13 அன்று குடந்தை யில் நடைபெறுகின்ற பொதுக்குழுவிற்கும் இடை யில் நடைபெற்ற கழக நிகழ்வுகளை வரிசைப்படுத்தி விளக்கினார். இணையவழி நிகழ்ச்சிகளின் எண் ணிக்கையும், விளைச்சலும் வியப்பைத்தந்தன. சிறுகனூரில் நடைபெற்று வரும் "பெரியார் உலகம்" பற்றியத் தகவல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. எல்லா அனுமதியும் மே-2க்குப்பின் கிடைக்கும் என்று முத் தாய்ப்பாய் நிறைவு செய்தது மகிழ்ச்சியின் உச்சம்.

தமிழர் தலைவர் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர் மானத்தைப் பொதுக்குழுவில் முன்மொழிந்தார்.

"தமிழ்நாட்டில் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி நடை பெறவுள்ள 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தி.மு. தலைமையில் அமைந்துள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பல்வேறு முற்போக்குக் கட்சிகள், அமைப்புகள் மதச்சார்பின்மையிலும், சமூகநீதியிலும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி யிலும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட ஜனநாயக முற்போக்குச் சக்திகள் என்பதால், நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு. தலைமையிலான கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வதற்கு தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் பேராதரவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறது.

குமரி முதல் திருத்தணி வரை தமிழ் கூறு நல்லுலகில் வசிக்கும் கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று தீர்மானத்தை வரவேற்கும் வண் ணம் பலத்த கரவொலி எழுப்பியக் காட்சி உணர்ச்சி மயமாய் இருந்தது. விடியலுக்குக் கட்டியங் கூறுவ தாய் அமைந்தது.

தமிழர் தலைவரின் பேட்டிக்காக ஊடகத் துறையினர் திரண்டிருந்தனர். பொதுக்குழுவிற்கு இடையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர், சட்டமன்றத் தேர்தலில் தி.மு கழகக் கூட்டணியை ஆதரிப்பதற்கானக் காரணத்தை தெளிவாக விளக் கினார்.

பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழியும், பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனும் பொதுக்குழுவில் கருத்துமழை பொழிந்தனர். தமிழர் தலைவர் உரை நிகழ்த்தும் போது,

'பெரியார் உலகம்' எப்படி அமையும் என்பதைச் சொல்லோவியம் தீட்டி, தோழர்களின் மனதில் பதியச் செய்தார்.

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள "தி.மு. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் பா.. - .தி.மு. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் -ஏன்? என்ற நூலை நாடெங்கும் பரப்பிட வேண்டும் என்றார்.

கிராமப்புற பிரச்சாரத்தை முடுக்கி விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

'பெரியார் உலகம்' மக்களின் பங்களிப்புடனே நடைபெற வேண்டும் என்று திட்டவட்டமாய்த் தெரிவித்த கழகத்தலைவர், நன்கொடை புத்தகம் மூலம் வசூலியுங்கள்; பெரியாரின் தொண்டைப் பரப்புங்கள் என்றார்.

பயிற்சிப்பட்டறைகளை நடத்தி இளந்தலை முறையினருக்குத் கொள்கை சொல்லித் தாருங்கள் என்றார்.

69 சதவீத இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட முதல மைச்சர் ஜெயலலிதா அவர்களையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வர முதலமைச்சர் கலைஞர் அவர்களையும் திராவிடர் கழகம் பயன்படுத்திக் கொண்டதை தமிழர் தலைவர் விவரித்தபோது தோழர்கள் மகிழ்ந்து கரவொலி எழுப்பினர்.

திராவிடர் கழகம் எளிமையான இயக்கம், ஆனால் பெரியார் என்னும் வலிமையான தத் துவம் இருப்பதால் பெருஞ்சாதனைகளை நிகழ்த்த முடிகிறது என்பதை உணர்த்தினார்.

கழகச் சொற்பொழிவாளர்கள் எப்படி பேச வேண்டும், எப்படி பேசக் கூடாது என்பதை அறிவுறுத் தினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் களைப்படைய வில்லை; கொள்கை உணவு செவியில் பாய்ந்த பொழுதினிலே வயிற்றுக்கும் நொறுக்குத்தீனி தடை யில்லாமல் வந்து கொண்டே இருந்தது. மதிய உணவு நல்விருந்தாய் அமைந்தது. குடந்தை பொதுக்குழு குதூகலமாய் அமைந்தது; தமிழ்நாட்டு விடியலுக்குக் கலங்கரை விளக்காய்த் திகழ்ந்தது.

Comments