கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் கனிவான கவனத்திற்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 27, 2021

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் கனிவான கவனத்திற்கு

சமீப காலமாக கோவிட்டுக்கு  தடுப்பூசி பெற்றவர்களுக்கும்  கோவிட் நோய் ஏற்படுவது குறித்து மக்களிடையே அய்யம் ஏற்பட்டுள்ளது. இதைக் களைய வேண்டிய கடமை நமக்குண்டு தற்போது நமது நாட்டில் வழங்கப்பட்டு வரும் கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளாலும் கோவிட் நோயை உருவாக்க இயலாது. இதற்கான காரணம் இதோ கோவேக்சின் தடுப்பூசி என்பது கொரோனா வைரஸை   கொன்று ( INACTIVATE)   அதன் உருவம் அங்கங்களில் மாற்றம் ஏற்படாமல்  அப்படியே பாடம் செய்து வழங்கப்படுவதாகும். செத்த வைரஸ்கள் உடலுக்குள் சென்றாலும் நமது உடலுக்குள் பல்கிப்பெருகவோ தொற்றை ஏற்படுத்தவோ இயலாது என்பதை பதிவு செய்கிறேன்.

கோவிஷீல்டு தடுப்பூசி என்பது சிம்பன்சி யில்  (மனிதக்குரங்கு)  சாதாரண சளியை உருவாக்கும் அடினோ வைரஸ் என்பதில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தின் மரபணுவை புகுத்தி உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டது. இதில் சிம்பன்சி அடினோ வைரஸால் மனிதனுடைய உடலுக்கும் பல்கிப் பெருக இயலாது(NON REPLICATING).

இது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ள உண்மையாகும். எனவே, தடுப்பூசியின் மூலம் கோவிட் நோய் வருவதில்லை. பிறகு எப்படி தடுப்பூசி பெற்றவர்களுக்கு கரோனா ஏற்படுகின்றது?

இதற்கான முதல் காரணம்

கரோனா வைரஸ் ஒருவரை தொற்றிய பின் அதன் அறிகுறிகளான காய்ச்சல் இருமல் போன்றவை தோன்றுவதற்கு மூன்று நாட்கள் முதல் இரண்டு வாரம் வரை ஆகலாம். சராசரியாக அய்ந்து நாட்களில் அறிகுறிகள் தோன்றும். இதை INCUBATION PERIOD  (தொற்றில் இருந்து அறிகுறிகள் தென்பட எடுத்துக்கொள்ளும் காலம்)  என்போம். அதாவது  கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஞாயிறு அன்று காய்ச்சல், நுகர்தல் அல்லது சுவைத்தல் திறன் இழப்பு  போன்றவை தோன்றினால் அது தடுப்பூசியினால் ஏற் பட்டது என்று நினைத்தால் கூடாது.

அந்த நபர் தடுப்பூசி பெறுவதற்கு முந்தைய சில நாட்களில் ஏதோ ஒரு குடும்ப நிகழ்வில் அல்லது பொது இடத்தில் இருந்து தொற்றை பெற்றிருக்கிறார் என்று அர்த்தம் தொற்று உள்ளே வந்து அறிகுறிகள் தோன்றுமட்டும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாது. அதற்கடுத்த இரண்டாவது காரணம் கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸ் போட்ட பிறகு 22 நாட்கள் கழித்தே முழு எதிர்ப்பு சக்தி உருவாகுவதும், கோவேக்சினைப் பொறுத்த வரை இரண்டாவது டோஸ் போட்ட பிறகு 28 நாட்கள் கழித்தே முழு எதிர்ப்பு சக்தி உருவாகுவதும் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

எனவே, தடுப்பூசி பெற்றுக்கொண்ட உடனே தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி உருவாகி விடுவதில்லை. கோவிஷீல்டுக்கு முதல் டோஸில் இருந்து 22 நாட்கள் காத்திருக்க வேண்டும். கோவேக்சினுக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டு 28 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

சரி.. இந்த நாட்களுக்குப் பிறகு ஜாலியாக மாஸ்க் இன்றி சுற்றலாமா? என்று கேட்கும் கேள்வி புரிகிறது. அப்போதும் அவ்வாறு முகக்கவசம் அணியாமல் தனிமனித இடை வெளி பேணாமல் இருப்பது ஆபத்தானதே.

இதற்கான மூன்றாவது காரணம், கோவி ஷீல்டு தடுப்பூசியின் நோய் தடுப்பு திறன் 70% ( ஏப்ரல் 23, 2020 முதல் டிசம்பர் 2020 வரை நடந்துள்ள மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்படி)

கோவேக்சின் தடுப்பூசியின் நோய் தடுப்பு திறன் 81% ( நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை நடந்துள்ள மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்படி)

எனவே, நாம் தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் கோவிஷீல்டு என்றால் 10இல் மூவருக்கு  அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஏற்படலாம். கோவேக்சின் எடுத்துக்கொண்டாலும் 10இல் இருவருக்கு கரோனா தொற்று ஏற்படலாம்.

எனவே, தடுப்பூசி பெற்றுக்கொண்ட சொந்தங்களே, தயவு கூர்ந்து

*காய்ச்சல் 

* இருமல்

* மூச்சுத்திணறல்

* அதீத உடல் வலி

* நுகர்தல் திறன் இழப்பு

* சுவைத்தல் திறன் இழப்பு

* வயிற்று வலி/ வயிற்றுப்போக்கு

போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவமனையை அணுகி

RTPCR பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தாமதிப்பதே தீவிர கரோனா ஏற்படு வதற்கும் மரணங்களுக்கும் காரணமாகின்றன. அதீத உடல் வலியுடன் காய்ச்சல் இருந் தால் அதிகபட்சம் மூன்றாவது நாள்  பரிசோத னைக்கு சென்று விடுங்கள்.

காய்ச்சலுடன் இருமல் இருந்தால் மருத்துவர் பரிந்துரையில் சிடி ஸ்கேன் எடுத்துப்பாருங்கள். தடுப்பூசி பெற்றாலும் தனிமனித இடைவெளி பேணுங்கள். முதியோர்கள் வீட்டிலேயே சமூகத்திடம் இருந்து இயன்ற அளவு தங்களை தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் முறையாக முகக்கவசம் அணியுங்கள். அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். தாமதிக்காதீர்கள்.

விரைந்து நோயைக் கண்டறிந்தால் விரைவில் நலம் பெற முடியும்

அலட்சியம் ஆபத்தானது

எச்சரிக்கை உணர்வு உயிர் காக்கக்கூடியது

நன்றி!

டாக்டர் கி.ஙி. ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்,

சிவகங்கை

No comments:

Post a Comment