திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள தி.மு.க. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்! ஏன்?

திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்! ஏன்?”

பாஜக - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப் பட வேண்டும்! ஏன்?”

என்ற தலைப்பில் 48 பக்கங்கள் கொண்ட சிறு நூலினை மக்கள் பதிப்பாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. வடிவத்தில் சிறு நூலாக இருந்தாலும் தேர்தல் களத்தில் நிறைந்த பயனைத் தந்து ஆட்சிமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் அறிவாயுதங்களின் தொகுப்பு நூல் இது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை!

திருச்சியில் 07.03.2021 அன்று நடைபெற்ற திமுகழக சிறப்புக் கூட்டத்தில் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட தமிழக வளர்ச்சிக்கான ஏழு அம்ச திட்டங்கள் எனும் தொலைநோக்குப் பிரகடனத்துடன் இந்நூல் தொடங்குகிறது.

கருவறை தொடங்கி கல்லறை வரை கலை ஞரின் திமுக அரசு நிகழ்த்திய அரும்பெரும் சாதனைகளை நூலின் அடுத்த பக்கங்கள் சுருங்கச் சொல்லி நம்மை வியக்க வைக் கின்றன.

2011 இல் திமுக ஆட்சியை விட்டுச் செல்லும் முன் இடைக்கால பட்ஜெட்டின் உபரி வருவாய் ரூபாய் 439 கோடி; இப்போது ஆட்சியை விட்டுச் செல்லும் அதிமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் பற்றாக்குறை ரூபாய் 41,417 கோடி; கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் அளவு

ரூ.1.18 லட்சம் கோடி; இப்போது அதிமுக ஆட்சியில் கடன் அளவு ரூ.5.7 லட்சம் கோடி; ரூ.35000 கோடிக்கு மேல் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டிய அதிமுக அரசின் அபாய நிலை; நிதி ஆதாரம் இல்லாததால் அரசு பணியாளர் ஓய்வு பெறும் வயதை 56 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அவர்களையும், வேலை கிட்டாத இளைஞர்களையும் ஒரே நேரத்தில் வாட்டி வதைக்கும் கொடுமை முதலான அதிமுக அரசின் சீர்கேடுகளை பட்டியலிட்டுக் காட்டுகிறது இந்நூல்!

கடந்தகால தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டது; எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா எனும் அக்கட்சியின் மூலவர்களின் கொள்கைகளுக்கே எதிராக செயல்படுவது முதலான எடப்பாடி அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளையும், அவர்களைப் பயன் படுத்தி தமிழகத்தில் கால்பதிக்க பகல் கனவு காணும் பாஜகவின் ஊழல், ஒழுக்கக்கேடு, மதவெறி, தமிழர்க்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவைகளையும் சான்றாதாரங்களுடன் இந்நூல் நிறைவு பெறுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் அனைவரும், இந்நூலை வாங்கி, ஊன்றிப்படித்து - வாக்காளர்களிடம் பரப்பி, உண்மையை உணர்த்த வேண்டியது அவசிய மான - அவசரமான பணியாகும்! சட்டமன்றத் தேர்தல் களத்தில் திராவிடம் வெல்ல இந்நூல் பெரிதும் துணை நிற்கும்!

- .வந்தியத்தேவன்

Comments