இதோ: குடந்தையில் பூத்த ஒரு "குறிஞ்சி மலர்!" (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 19, 2021

இதோ: குடந்தையில் பூத்த ஒரு "குறிஞ்சி மலர்!" (3)

பெரியார் கூட்டம் நடந்தது

"எல்லாத் தடங்கல்களையும் மீறி, கூட்டம் நடத்துவது உறுதியானது. பின் சௌராஷ்டிர சமூகப் பெரியவர்கள் சோர்ந்து விட்டனர். மேலும் நடிகர் எம்.ஆர்.இராதாவும் அக்கூட்டத் தில் பேசப் போகிறார் என்று அறிந்தவுடன் நடிகரைப் பார்க்க மக்கள் திரண்டு வந்து விடு வார்கள் என்றும், கூட்டம் மிகச் சிறப்பாக நடக்கும் என்றும் அவர்கள் உறுதியாக எதிர்பார்த்தனர். இனி எந்த விதமான தடங்கலும் ஏற்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட பெரியவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட, தெருவெங்கும் பிய்ந்த செருப்புகளை வைத்து தோரணம் கட்டினர். இதனால் வெகுண்டு போன எஸ்.ஆர்.இராதாவின் நண்பர்கள் அரண்மனை இராமையர், நாராயணா, நகர் மன்ற உறுப்பினராக இருந்த சாரங்கபாணி பாகவதர் ஆகியோருக்கு எதிராகக் காவல் துறையில் புகார் கொடுத்து, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டனர். காவல் துறையினரும் அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தனர். சாரங்கபாணி பாகவதர் எஸ்.ஆர்.இராதா தன் தம்பியின் மகன் என்றும், தாங்கள் யாரும் எந்த விதத்திலும் அவர்களுக்கு தடையாக இல்லை என்றும் கூறினார்.

கூட்டம் 27-02-1955 காலையில் தொடங்கியது. கூட்டத்திற்கு வரும் வழியில் செருப்புத் தோரணங்கள் இருப்பதை எம்.ஆர்.இராதா கவனித்து விட்டார். அது அவரைச் சினமூட்டியது. கோபமாக அவர் பேச ஆரம்பித்து விட்டார். காலை 8 மணிக்குப் பேச ஆரம்பித்தவர் இடை விடாமல் பேசிக் கொண்டு இருந்தார். சரியாக 9.30 மணிக்குப் பெரியார் வந்து சேர்ந்தார். பெரியார் வந்தவுடன் எம்.ஆர்.இராதா பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

பெரியார் தன் உரையின் தொடக்கத்தில் எம்.ஆர்.இராதா வின் முகத்தைப் பார்த்தால் அவர் கடுமையாகப் பேசி இருப்பார் என்று தெரிவதாகவும், அதனால் மக்களின் மனம் புண்பட்டு இருந்தால் அதற்காகத் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறினார். சௌராஷ்டிர மக்கள் சாதுவானவர்கள் என்று தனக்குத் தெரியும் என்றும், அவர்கள் தங்களைப் பிரா மணர்கள் என்று அழைத்துக் கொள்வதும் தனக்குத் தெரியும் என்றும் கூறினார். ஆனால் பிராமணர்கள், சௌராஷ்டிரர்களைப் பிராம ணர்கள் என்று ஏற்றுக் கொள்வது இல்லை என்றும், அவர்களைச் சூத்திரர்களாகவே வரை யறைப்படுத்தி உள்ளனர் என்றும் பேசினார்.

மேலும் சௌராஷ்டிரர்கள் மற்ற சமுதாய மக்களுக்கு எவ்விதமான இடையூறும் செய் யாமல் வாழ்பவர்கள் என்றும், தங்கள் சமூகத் தவர்களிடையே எழும் பிரச்சனை களையும் வன்முறையில் ஈடுபடாமலேயே தீர்த்துக் கொள் கிறார்கள் என்றும் அவர் பேசினார். பொதுவாக சௌராஷ்ட்ரர்கள் மீது எந்தவிதமான குற்றவியல் வழக்குகளும் (Criminal Cases) இல்லை என்றும், காவல் நிலையங்களில் உள்ள குற்றவாளிகள் பட்டியலில் ஒரு சௌராஷ்டிரரின் பெயரும் இருக்காது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவ்வாறு ஒரு நல்ல சமூக இயக்கத்திற்கு இயைந்த வாழ்க்கையை வாழும் சௌராஷ் டிரர்கள் கடவுள் நம்பிக்கை என்ற ஒரே காரணத் திற்காக திராவிட இயக்கத்தைச் சந்தேகத் துடன் பார்க்கிறார்கள் என்றும், அதன் காரணமாகவே எஸ்ஆர்.இராதாவையும் சந்தேகத்துடன் பார்க் கிறார்கள் என்றும் பெரியார் குறிப்பிட்டார். அதே கண்ணோட்டத்தில் எஸ்.ஆர்.இராதாவையும் பார்த்து அவருடைய வளர்ச்சியைத் தடுத்துவிட வேண்டாம் என்றும், அவரால் சௌராஷ்டிர சமூகம் மட்டும் அல்லாமல் அனைத்து மக்களும் நன்மை அடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

பின் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த பெரியகுளம் சுப்பையர் தனது நண்பர் என்றும், அவருடைய வீட்டில், தான் மீன் குழம்புச் சாப் பாடு சாப்பிட்டு இருப்பதாகவும், சௌராஷ்டிரர் களின் சமையல் மிகவும் ருசியாக இருக்கும் என்றும் பெரியார் கூறினார். அதன் பின் நெச வாளர்களின் ஏழ்மை நிலையைப் பற்றியும் அவர்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் பேசினார்..

இயந்திரத் தொழில், அதாவது விசைத்தறி வளர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அது வளரும் போது கைத்தறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும், அவ்வாறு நடக்காமல் இருப்ப தற்கு, நெசவாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறிக் கொள்ளும் காலம் வரையிலும், விசைத்தறி வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விசைத் தறித் துணிகள் மீது 100% வரி விதிக்கலாம் என்றும் கூறினார். காந்தியாரின் கதர்த் துணித் திட்டம் ஏட்டளவில் தான் உள்ளது என்றும், அது நெசவாளர்களுக்கு நன்மை அளிப்பதாக இல்லை என்றும், கதர்த்துணி என்பது ஒருவன் காங்கிரஸ் காரன் என்று காட்டுவதற்கான அடையாளம் (Identity) போல ஆகிவிட்டது என்றும் பெரியார் பேசினார். நெசவாளர்கள் பல்லைக் காட்டிக் கெஞ்சியும், பணிந்தும் காரியம் சாதிக்க நினைப்பது அறிவுடைமை ஆகாது என்றும் தங்கள் வலிமையைத் திரட்டியும், வளர்த்தும் அரசிடம் போராடுவதே சிறந்த வழி என்றும் பேசினார். பெரியாரின் பேச்சு 15-03-1955 அன்று 'விடுதலை' நாளிதழில் விரிவாக வெளிவந்தது.

எஸ்.ஆர்.இராதா திட்டமிட்டபடி, கும்பகோ ணத்தில் பெரியார் கலந்து கொண்ட கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்ததை அறிந்து கொண்ட அண்ணா , அவரை வெகுவாகப் பாராட்டினார். பெரியாரை விட்டுப் பிரிந்து இருந்தாலும் பெரியாரின் கொள்கைகளை, பெரியாரின் தலைமையை விட்டுப் பிரியவில்லை என்று தான் அறிவித்து இருப்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட்டவர் எஸ்ஆர்.இராதாதான் என்று மிகவும் பாராட்டினார். புதுக் கட்சியை (தி.மு..வை) ஆரம்பித்த பிறகு கைத்தறிப் பிரச்சாரம் செய்வதற்கும், சுயமரியாதைத் திரும ணங்கள் நடத்துவதற்கும் பெரியாரை அழைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குத் தோன்றாத போது எஸ்.ஆர். இராதாவிற்குத் தோன்றியது என்றால் அவர் சமூக வளர்ச்சித் தத்துவத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு உள்ளார் என்று காட்டுவதாகவும் கூறி இராதாவைப் பாராட்டினார்.

இம்மேடையில், எஸ்.ஆர். இராதா பெரியாருக்கு மலர்மாலையை அணிவிப்பதற்குப் பதிலாக, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த ஓட்டைக் காலணா நாணயங்களில் 6400 (ரூ.100) நாணயங்களை மாலையாகக் கோர்த்து அணிவித்தார். இதைச் சிலர் குறை கூறினார்கள். ஆனால் பெரியார் மலர் மாலையை விடக் காசு மாலை மேல் என்று கூறிவிட்டார்.

(நிறைவு)

No comments:

Post a Comment