தேசியகுடிமக்கள் பதிவேடு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம்

 புதுடில்லி, மார்ச். 19 அசாம் மாநிலத்தில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் தேசிய குடிமக்கள் பதிவேடு என்னும் என்.ஆர்.சி. தயாரிக்கப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இதன் இறுதி விவரங்களின்படி மாநிலத்தில் 19 லட்சத்துக்கு மேற்பட்டோர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மேற்படி என்.ஆர்.சி. கணக்கெடுப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளி யாகின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட் டங்களும் நடந்தேறின. இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்  17.3.2021 அன்று எழுத்து மூலம் பதில ளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தற்போது வரை, தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு  தயாரிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லைஎன்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், குடியுரிமை சட்டம் 1955-இன்படி தடுப்புக்காவல் மய்யங்கள் அமைக்க எந்த வழிமுறையும் இல்லை எனக்கூறினார். அதேநேரம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் உள்ளூர் தேவைகளுக்காக இந்த மய்யங்களை அமைத்துள்ளன எனவும் அவர் கூறினார். மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தற்போது தேர்தல் காலம் ஆகையால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்கி உள்ளது.

Comments