பெரியார் எனும் பேராயுதம் கொண்டு சமூகநீதியை உயர்த்திப் பிடிப்போம்!

 திருட்டுத்தனங்களால் சமூகநீதி பறிக்கப்படுவதை அனுமதியோம்!

* அய்.அய்.எம். என்ற ஆளுமைக்கான பயிற்சிக் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., .பி.சி., பிரிவினர்க்கான 60% இடங்கள் நிரப்பப்படவில்லை!

* சமூகநீதியை சவக்குழியில்  தள்ளும்  பா... ஆட்சியின் சதி! !        

* சத்தம் இல்லாமல் இந்த இடங்களை உயர்ஜாதியினருக்கே தந்திரமாக தாரை வார்ப்பா?

அய்.அய்.எம். (Indian Institutes of Management) என்ற ஆளுமைக்கான பயிற்சிக் கல்லூரி களில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப் பாமல் 60% இடங்களைக் காலியாக வைத் துள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் மேலாண்மைக்கான படிப்புகள், ஆட்சியிலும், மற்ற மற்ற தொழில் துறைகளிலும் சிறந்த ஆளுமைக்கான அறிவாளிகளையும், திறனாளிகளையும் உருவாக்கவே அரசுப் பணத்தில் IIM (Indian Institutes of Management) என்ற ஆளு மைக்கான பயிற்றுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

அரசமைப்புச் சட்ட  அடிப்படை உரிமைகளின்படி, சமூகநீதி என்பது சட்டப்படி, காலங்காலமாக சமூக அநீதிக்கு ஆளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களான பழங்குடியினர் (S.T.), தாழ்த்தப்பட்டோர் (S.C.), மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட  ஒதுக்கீடு மத்திய அரசின் ஆணைப்படியே முறையே 7.5 சதவிகிதம், 15 சதவிகிதம், 27 சதவிகிதமும் ஒதுக்கப்படல் வேண்டும்.

பிச்சையோ, சலுகையோ அல்ல - உரிமை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 93 ஆவது திருத்தச் சட்டப்படி இது அவர்களுக்குப் பிச்சையோ, சலுகையோ அல்ல! உரிமை! உரிமை!! உரிமையே யாகும்!!!

ஆனால், நடைமுறையில், சமூகநீதி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பா... ஆட்சியில், மோடி ஆட்சியில்  தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக மறுக்கப்பட்டு, அத்துணை இடங்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக, உயர்ஜாதியினரே பகற்கொள்ளையாய் அனுபவிப்பது அல்லது நிரப்பப்படாமல் காலியாகவே வைத்திருப்பது என்ற நடைமுறை சமூகநீதியை சவக்குழியில் தள்ளுகிறது!

இன்று (16.3.2021) வெளிவந்துள்ள (ஆங்கில 'ஹிந்து' நாளேட்டில்)  தகவல்கள் பேரதிர்ச்சியைத் தருகின்றன!

அய்.அய்.எம். என்ற உயர்கல்வி (ஆளுமைக் கானவை) (IIMs) 60 சதவிகித இடங்கள் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாண வர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது!

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக் கிரியால் நிஷாங்க் மக்களவையில் எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு அளித்துள்ள விடைகள் மூலம் இவை வெளிச்சத்திற்கு வருகின்றன!

உயர்ஜாதியினருக்கே தாரை வார்த்து விடுவார்கள்!

S.C., O.B.C.,  சமூகத்தவர்களுக்கு நிரப்பப்படாத இடங்கள் 60 சதவிகிதம் என்றால்,

S.T.  என்ற பழங்குடி மக்களுக்குச் சட்டப்படி தர வேண்டிய இடங்களை 80 விழுக்காடு தராமல், காலியாகவே வைத்துள்ளனர்!

மொத்தம் 24 இடங்கள் S.T. மாணவர்களுக்கு உள்ளதில், வெறும் 5 இடங்களை மட்டும் நிரப்பி, எஞ்சிய 19 இடங்களை நிரப்பாமல் விட்டு (பிறகு பொதுப் போட்டி என்பதில்)சத்தமில்லாமல் உயர்ஜாதியின ருக்கே தாரை வார்த்து விடுவார்கள்! மக்கள் வரிப் பணத்தில்தானே இவை நடக்கின்றன?

‘‘பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை'' என்ற நிலையே தொடரும் அவலம் தொடரலாமா?

பகற்கொள்ளைக்குப் பாதுகாப்புச் சுவர்

இதற்கு இணையான அய்.அய்.டி. (IIT) என்ற மற்ற நிகர்நிலைப் பல்கலைக் கழக தகுதியுள்ள இந்த நிறுவனங்களில் இப்போது இந்த இட ஒதுக்கீட்டினை S.T., S.C., OBC  என்ற ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கப்படுவதை அதாவது இட ஒதுக்கீட்டு முறையை - ரிசர்வேஷனை - அய்.அய்.டி., அய்.அய்.எம்.எஸ். கல்வி நிறுவனங்களுக்கு விதி விலக்குத் தரவேண்டும் என்று பரிந்துரை ‘‘நாடகம்'' நடத்தி ரத்து செய்து, தங்களது பகற்கொள்ளைக்குப் பாதுகாப்புச் சுவர் கட்ட திட்டமிடுகிறார்கள்!

இதனை, அத்துணை சமூகநீதி அமைப்புகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சி களும் கூட்டாக இணைந்து குரல் கொடுத்துத் தடுக்கவேண்டும்.

இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்று ஆலாய்ப் பறக்கிறார்கள்

ஆர்.எஸ்.எஸ். கொள்கை - இட ஒதுக் கீட்டை ஒழிக்க வேண்டும்  என்ற கொள்கை.   அந்தஅஜெண்டாவைத்தான்' ஆட்சியிலிருக்கும்போதே இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்று ஆலாய்ப் பறக்கிறார்கள்; தங் களுக்குள்ளரோட் ரோலர் மெஜாரிட்டியைப்' பயன் படுத்தியும் - எதிர்க்கட்சியினர் பலரைவிலைக்கு வாங்கியும்' அல்லது அச்சுறுத்தியும் துணிந்து செயல்படுகின்றனர்!

உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்கம் இதற்குப் பெரிதும் துணை போவது கொடுமையிலும் கொடுமை!

சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்க தமிழ்நாடுஇந்தியாவுக்கே வழிகாட்டட்டும்!

நடைபெறும் 5 மாநில தேர்தல் முடிவுகள்மூலம் பெறவிருக்கும் மரண அடி கொடுத்தால்தான் அவர்கள் சற்று யோசிக்கக் கூடும். எனவே, தேர்தலைக் களமாகக் கொண்டு, பெரியாரைப் பேராயுதமாகவும், போராயுதமாகவும் கொண்டு, சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்க தமிழ்நாடு, இந்தியாவுக்கே வழிகாட்டட்டும்!

ஏப்ரல் 6 ஆம் தேதிதான் திருப்புமுனையாக அமைந்து, திசை தடுமாறுவோருக்கும்- திருட்டுத்தனங் களால் சமூகநீதியைப் பறிப்போருக்கும் தக்கப் பாடம் புகட்டும் என்பது உறுதியிலும் உறுதி!

 

கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

16.3.2021

Comments