அன்னை மணியம்மையாரின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள்: எங்களுக்கு வெறும் படம் அல்ல! பாடம் கற்றொழுகும் கடமைப் பாடங்கள்!

அன்னை மணியம்மையார் அவர்கள் எங்களுக்கு வெறும் படம் அல்ல! பாடம் கற்றொழுகும் கடமைப் பாடங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள நினைவு நாள் அறிக்கை வருமாறு:

உலகில் எந்த ஒரு பெண்ணும் - எந்த  ஒரு தாயும் சுமக்காத தனி மனித தாக்குதல்களையும், தாங்கொணாத அவமானத்தையும், தரக்குறைவான இழிசொற்கள் - புயலையும் தாங்குவதில் அவருக்கிணை அவரே! ‘‘பெரியாருக்குத் தொண்டு செய்வதே என் கடன்; என் மான அவமானம் எனக்கு முக்கியமல்ல'' என்று எந்த சூறாவளிக்கும் சாயாத சுயமரியாதைச் சுடரொளி நம் அன்னையார் அவர்களின் 43 ஆவது நினைவு நாள் இன்று! (16.3.2021).

நம் நெஞ்சில் என்றும் வாழ்பவர்!

பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என் பதற்கான இலக்கணமாய்த் திகழ்ந்து, நம் நெஞ்சில் என்றும் வாழுபவர் - கொள்கையாய், தொண்டாய், ஈகையாய் ஆனவர் எம் அன்னையார் அவர்கள்!

நம் அய்யாவுக்கு - அறிவு ஆசானுக்கு மட்டுமா அவர் செவிலித்தாய்?

அவர் கண்ட இயக்கமாம் - திராவிடர் கழகத்திற்கும், அய்யாவிற்குப் பின் தலைமையேற்று, வழிநடத்தி, அகிலத்தை ஆச்சரியப்பட வைத்தவர் நம் அன்னையார் அவர்கள்!

அவரின் உவமை சொல்ல முடியாத சகிப்புத் தன்மைமூலம் எதிரிகளை வென்றார்.

என்றும் களத்தில் துணிவுடன் நின்றார்!

தூற்றியவர்களின் பாராட்டு மழை யிலும் நனைந்தார்!

தூற்றுதலையும், போற்றுதலையும் ஒன்றுபோலவே சமமாக நடத்தி, மனதால்  தத்துவ ஞானித் தாயானார்!

போட்டியில் எதிரிகளை மட்டுமா வென்றார், எம் அன்னையார்?

எந்தையாம் என்றும் நம் சிந்தையில் நின்று வழிநடத்தும் தந்தையையும் வென்றார்.

சிக்கனத்தில் - தந்தையோடு போட்டியிட்டு வென்றார்!

சகிப்புத்தன்மையும் - எதிர்நீச்சலிலும் அவருக்கு வெற்றியே!

எளிமையில் -அய்யாவே அதிசயக்கத்தக்க வகையில் வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தார்  - வென்றார்!

ஈகையில், தனக்களிக்கப்பட்ட, தனது சொத்துக்களை பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் பொதுவுக்காக்கி, பூரித்தார்!

நிம்மதியை பெரு வெகுமதியாய் அவரே பெற்று மகிழ்ந்தார்!

பிள்ளைகளை ஏராளம் பெற்றார் - வளர்த்தார்!

இதோ எங்கள் ‘‘நாகம்மையார் குழந்தைகள் இல்லம்'' என்ற அன்னை யின் தாய்ப் பாடத் தொட்டிலைப் பாருங்கள்!

வாராது வந்த எங்கள் மாமணித்தாயே!

வாராது வந்த எங்கள் மாமணித்தாயே! உங்களது தொண்டறம், நேர்மை, தனக் கென வாழா எடுத்துக்காட்டான பொதுத் தொண்டு!

எனவே, நீங்கள் எங்களுக்கு வெறும் படம் அல்ல! பாடம் கற்றொழுகும் கடமைப் பாடங்கள்!

வாழ்க! வாழ்க!! உங்கள் தொண்டு!

வளர்க! வளர்க!! எம் உறுதியான கொள்கைப் பிடிப்பு!!

 

உங்களின் பல்லாயிரம் பிள்ளைகளில் ஒருவன்

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

16.3.2021

Comments