பெரியார் யார்? வாரியார் யார்?

குருமூர்த்திகளுக்கு ஒரு பதிலடி!

மின்சாரம்

கேள்வி: பெரியார் - வாரியார் என்ன வித்தியாசம்?

பதில்: பெரியார் கடவுளை இகழ்ந்தார் வாரியார் கடவு ளைப் புகழ்ந்தார்; பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று தூற்றினார். வாரியார் தமிழை தெய்வ மொழி என்று போற்றினார். பெரியாரின் நாத்திகக் கொள் கைகள் பொதுக் கூட்டங்களோடு முடிந்து விட்டது. வாரியாரின் அருள் வாக்குகள் வீட்டுக்கு வீடு பரவி விட்டது. இறுதியாக, பெரியாருக்கு தாடியும், மீசையும் உண்டு. வாரியாருக்கு இரண்டும் கிடையாது.

துக்ளக் 24.2.2021 பக்கம் 26

பெரியாரையும் திராவிடர் கழகத்தையும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களையும் பற்றியும் பொதுவாக சீ(தீ)ண்டாவிட்டால்துக்ளக்க்குக்கோ குருமூர்த்தி அய்யர்வாளுக்கோ தூக்கம் வராது - கல்லாப் பெட்டியும் நிரம்பாது.

பெரியார் கடவுளை இகழ்ந்தார் என்பது உண்மைதான் - கடவுள் இல்லவே இல்லை என்று  ஓங்கி அடித்தார் என்பதும் உண்மை, உண்மையிலும் உண்மையே. குருமூர்த் திகளே, குல்லுகப் பட்டர்களே, உங்களுக்கு ஒரேஒரு கேள்வி. முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லையெனில் முக்காடு போட்டு மூலையிலே ஒதுங்கிக் கிடக்கலாம்.

எது கடவுள் என்று சொல்லுங்கள்! கிறித்தவர் கடவுளை, இந்து ஒத்துக் கொள்கிறானா? இந்துக் கடவுளை கிறித்த வனோ முஸ்லிமோ ஒத்துக் கொள்கிறார்களா? ஏன் குரு மூர்த்தி வகையறாக்கள் முஸ்லிம், கிறித்தவக் கடவுளை ஏற்றுக் கொள்கிறார்களா?

வைஷ்ணவ  வடகலைக்காரன், தென் கலைக்காரனை ஏற்பதில்லையே!

இந்தக் கேள்விக்குப் பதில் தேவை: பிற மதக் கடவுள் களை ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று ஊரு உலகத்துக்கே தெரியும். அப்படியானால் கிறித்தவன் பார்வைக்கு இந்துவும் இந்து பார்வையில் கிறித்தவனும், முசுலிமும் நாத்திகர்கள் தானே!

ஒரு மதக்காரன் இன்னொரு மதக்காரன் கடவுளை ஏற்கவில்லை என்கிறபோது, ஒட்டு மொத்தமாகக் கடவுளே இல்லை என்று தந்தை பெரியார் சொன்னதில் எந்தக் குற்றம்  கண்டீர் என்று எத்தர் வகையறாக்களுக்கு இந்தக் கேள்விக் கணைகள் இருக்கவே இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் இந்து மதத்துக்குள்ளேயே கூட ஸ்மார்த்தர்கள் வணங்கும் கடவுளை வைஷ்ணவர்கள் ஏற்பதில்லை. வைஷ்ணவர்கள் கடவுளை ஸ்மார்த்தர்கள் ஒப்புக் கொள்வது கிடையாதே. வைஷ்ணவர்களிலும் வடகலைக்காரன் தென் கலைக்காரனை ஏற்பதில்லையே!

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா (Y மார்க் அல்லது U  மார்க்) என்ற கதை லண்டன் பிரிவி கவுன்சில்வரை சிரிப்பாய் சிரிக்கவில்லையா?

கல்கி இதழில் வெளிவந்த பேட்டி ஒன்று (11.4.1982) குருமூர்த்தி கும்பலின் முகத்திரையை முற்றிலும் கிழித் தெறியுமே? இதோ அந்தப் பேட்டி:

கேள்வி: சிறீசங்கராச்சாரியார் இந்த கோபுரத்தில் மூன்றாவது கட்டத்துக்குப் பண உதவி செய்திருக்கிறார்... பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவு கிறார்கள்... இது மாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் ஏன் சைவ ஸ்தலப் பணிகளுக்கு உதவக்கூடாது?

ஜீயரின் பதில்: நான் சிவன் கோவிலுக்குச் செய்ய மாட் டேன்... ஏன்னு கேட்டா... சிறீமத் நாராயணன்தான் எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரம்மாவை நாராணயன் தன் நாபியிலிருந்து படைத்தான், அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராய ணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா - பிள்ளை ஆகணும்... அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும் அதேபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணிக் கடைசியிலே தானும் நெருப்பிலே குதித் துச் சக்தி பெற்றார்னும் சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தவம் பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராணயன் எப்பொழுதும் உள்ளவர். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள், வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம்.

நாராயணனைத் தெய்வமாக வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள். நான் தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப்போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன். அவங்க தாராங்களே வாங்கிக்கலாமான்னு கேட்டால்... சிவனுக்கு சிறீமத் நாராயணன் பாட்டனராவார். அதனாலே பிரியத்தோட அவா தரா... அதை வாங்கிக்கலாம்.”

இவை நமது கற்பனை உரையாடல் அல்ல. இட்டுக் கட்டியது அல்ல - ஈரோட்டுச் சரக்குமல்ல! அகோபில மடத்தின் 44ஆவது ஜீயர் அழகிய சிங்கர்கல்கிஇதழுக்குக் (11.4.1982) கொடுத்த பேட்டிதான் இது.

இதற்கு என்ன பதில் எத்தர் கூட்டமே?

வைத்தியரே முதலில் உம் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர்! என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.

வாரியாரையும் பெரியாரையும் மோதவிடும், சிண்டு முடியும் வேலை - சிண்டர்களுக்கு இயல்புதானே - இப்படி யேதானே இந்தக் கூட்டத்தின் பிழைப்புக் காலட்சேபம் சாங்கோ பாங்கமாகவே நடந்து கொண்டு இருக்கிறது.

சரி, அந்த வாரியாரை தான் எடுத்துக் கொள்வோம்.

கடவுள் பக்தியின் யோக்கியதை என்ன? பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று செவிளில் அறைந்தது போல பதில் சொல்லவில்லையா?

முதலாவதற்கு எடுத்துக்காட்டு அக்ரகாரகல்கிஎன்றால், இப்பொழுது சொல்லப் போவதும் அசல் அக்ரகார ஆனந்தவிகடன்தான்.

இதோ வாரியார் வாய் திறக்கிறார்:

கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?

பதில்: “என்னுடைய அனுபவத்தில் சொல்றேன். பக்தி அதிகமாகிக்கிட்டிருக்கு.. கோயிலுக்குப் போறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு!

பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை மூணு கோடி யைத் தாண்டிடுது. பக்தி அதிகமாயிருக்கு. ஆனால் ஒழுக் கம்தான் குறைந்து போயிடுச்சு!”

கேள்வி: “இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கம் இருக்கிறதென்று கொள்ளலாமே?”

பதில்: “ஊஹும். அப்படியில்லை. பக்திக்கும் ஒழுக்கத் துக்கும் சம்பந்தமே இல்லை.

- கிருபானந்தவாரியார் (‘ஆனந்தவிகடன் 22.12.1991)

பக்தி ஒழுக்கத்தை வளர்த்து இருந்தால் சங்கராச்சாரி ஒரு அக்ரகார எழுத்தாளர் பெண்ணான அனுராதா ரமணனைக் கையைப் பிடித்து இழுத்தாரே -  பாதிக்கப்பட்ட அந்த அக்ரகாரப் பெண் கண்ணீரும் கம்பலையுமாகக் கதறிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தோர் பதைபதைக்க வில்லையா?  இந்த யோக்கியர் குருமூர்த்தியோ ஜெயேந்திர ருக்கு வக்காலத்து வாங்கவில்லையா? அக்ரகாரப் பெண் மணி அனுராதா ரமணனோ வட்டியும், முதலுமாக குருமூர்த் தியை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டாரே!

(‘குமுதம் - 10.1.2006)

இந்த யோக்கியர்கள்தான் கடவுளைப்பற்றி தந்தை பெரியார் கூறியதற்காகக் கோபுரத்தின்மீது ஏறிக் கொக் கரிக்கிறார்கள்.

இரண்டாவதாக தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார். வாரியார் தமிழைத் தெய்வ மொழி என்று சொன்னவர் என்று பேனா பிடிக்கிறார்.

வெறும் புராணங்களின் மொழியாக தமிழ் இருக்கக் கூடாது. அறிவியல் மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் மொழிக் கொள்கை.

தமிழ்மொழி ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பல முறை சொல்லி இருக்கிறேன்.

ஆங்கிலம் வளர்ந்தமொழி, விஞ்ஞான மொழி என்ப தும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம், தமிழ்மொழி ஆங்கிலமொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும்; பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர தமிழ்மீது எனக்குத்  தனி வெறுப்பில்லை.”

(‘விடுதலை 1.12.1970 பக்கம் 2)

இவ்வளவு வெளிப்படையாகத் தமிழின் மீதுள்ள அக்கறை காரணமாக அது விஞ்ஞான மொழியாக  வளர்ச்சி அடைய வேண்டும் என்று சொன்ன பிறகு, அறிவு நாணயமற்ற முறையில் அபாண்டமாகப் பழி சுமத்துவது அக்ரகாரத்தின் குருதி ஓட்டத்தில் உள்ள சுபாவமாகும்.

ஆனால் தமிழை நீஷப் பாஷை என்று சங்கராச்சாரி அய்யர்வாள் சொன்னதுபற்றி குருமூர்த்திகள் வாயே திறக் காதது ஏன்? திண்டுக்கல் பூட்டுப் போடப்பட்டு விட்டதா?

(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யின் ஆலோசகர் அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச் சாரியாரின்இந்து மதம் எங்கே போகிறது?” பக்கம் 99- 100)

வாரியார் தமிழைத் தெய்வ மொழி என்று சொன்னார் என்று தூக்கி வைத்துப் பேசும் குருமூர்த்திகள் அந்தத் தெய்வ மொழி கோயில் வழிபாட்டு மொழியாக ஆவதற்கு தடை போடுவது ஏன்?

குருமூர்த்தியின் குரு திருவாளர் சோ. ராமசாமி அய்யர் இது குறித்துதுக்ளக்கில் (18.11.1998) -

தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும்.  அருள் இருக்காது.  சமஸ்கிருதத்தில் வழிபட்டால்தான் அருள் இருக்கும். மொழிக்கு முக்கியத்துவம் அல்ல - மொழியின் ஒலிக்குத்தான் முக்கியத்துவம்என்று வறட்டுத்தனமாக - சமஸ்கிருத வெறியின் உச்சிக்கே சென்றுநிர்வாணஆட்டம் போட்டாரா இல்லையா சோ?

எல்லாம் கடந்த கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் சமஸ்கிருத ஒலிக்குத் தான் கடவுள் மயங்குவார் என்பது - கடவுளைக் கீழே தள்ளி, சமஸ்கிருதத்தை அதன் தலைமீதுஏற்றி நிற்க வைக்கும் அக்கிரகார வெறியல்லவா?

வாரியார் வாக்கு வீட்டுக்கு வீடு பரவிவிட்டதாம். பெரியா ரின்  நாத்திகக் கொள்கைகள்  பொதுக்கூட்டங்களோடு முடிந்து விட்டதாம்? எழுதுகிறார் - இந்தக் குருமூர்த்தி.

தந்தை பெரியாரின் நாத்திகப் பிரச்சாரம் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் வரை பாய்ந்ததுண்டே! “இன்றைய ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம் - இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ்மக்களின் நலம்என்று தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் குறள் போலக் கூறவில்லையா? (‘விடுதலை - 19.2.1971) 

பெரியாரின் பிரச்சாரம் பொதுக்கூட்டத்துடன் முடிந்து விட்ட ஒன்றா? பெரியாரின் மூன்று, நான்கு மணி நேரப் பிரச்சாரம்தான் (மயிலாடுதுறையில் அதிக பட்சமாக நாலரை மணிநேரம் பொதுக்கூட்டப் பேச்சு, செய்யாறை அடுத்த வாழ்குடை என்னும் ஊரில் திருமண உரை அய்ந் தரை மணி நேரம்)  மக்கள் மத்தியிலே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மறந்து விட்டு மமதையாக எழுதலாமா?

இதே குருமூர்த்தி அய்யர்வாள்தான் சென்ற ஆண்டுதுக்ளக்இதழில் (9.2.2020) இவ்வாறு எழுதினார்.

கேள்வி: தமிழக மக்கள் எந்த விதத்தில் தனித்துவம்?

பதில்: ஆன்மீகத்தில்  முழுகிய தமிழ்மக்கள் தொடர்ந்து திராவிடக் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்துவம். (‘துக்ளக் 19.2.2020, பக்கம் 29)

ஆன்மிகத்தையும் தாண்டி தந்தை பெரியார் தமிழ் நாட்டு மக்களின் மனதில் தனித்துவமாக ஒளிர்கிறார் என் பதை திருவாளர் சாமிநாதன்  குருமூர்த்தி - ஓராண்டுக்கு முன் எழுதியதை ஓராண்டுக்குப் பிறகு தலை கீழாகப் புரண்டு வீழ்கிறாரே!

இதே வாரியார் வாய்க்கொழுப்பால் நெய்வேலியில் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

நாத்திகம் பேசியதால் அண்ணா புற்று நோயால் மாண்டார் என்று சொல்லப் போய் - கூடியிருந்த மக்கள் கொந்தளித்து எழுந்ததால் ஏற்பட்ட விளைவு மறந்து போய்விட்டதா?

துண்டைக் காணோம் - துணியைக் காணோம் - வேட்டி யைக் காணோம் என்று விழுந்தடித்து ஓடவில்லையா?

பெரியாரை நச்சாறு என்று வாரியார் கூறப்போய் அண்ணா அவர்கள் ஆற்றல் மிகு எழுத்தால்அர்ச்சனைசெய்ததுண்டே!

காதிலே குண்டலமாட - கனத்த சாரீரம் பாட - காய்ச்சிய பால் தொண்டையில் ஓட - கண்களோ காரிகையைத் தேட வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியார் நச்சாறுதான்என்றுதிராவிட நாடுஇதழிலே சாட்டை அடி கொடுத்தார் அறிஞர் அண்ணா.

திருவாரூரிலே வாரியார் காலட்சேபம். இளைஞர்

மு.கருணாநிதி தம் கருஞ்சட்டை, நண்பர்களுடன் அங்கு செல்லுகிறார்.

உயிர்க் கொலை செய்யக்கூடாது - ஊண் உண்ணக் கூடாதுஎன்று வாரியார் உபந்நியாசம் செய்ய, தாவரங்க ளுக்கும் உயிர் உண்டே என்று மாணவர் மு.கருணாநிதி எதிர் கேள்வி வைக்க, காய்கறிகள்  வெட்ட வெட்ட வளரும், அதனால் உண்ணலாம் என்று கூறிட, அப்படியானால் - கீரைத் தண்டை வேரோடு பிடுங்கிச் சமைப்பது ஏன் என்று மறு கேள்வியை மாணவர் கருணாநிதி கணையாகத் தொடுக்கஉட்கார்! உட்கார்!!” என்று உரக்க கூறியது அன்றி வாரியாரிடம் பதில் இல்லை - வாயடைத்துப் போனார் என்ற வரலாறெல்லாம் தெரியுமா? குருமூர்த்தி கும்பலுக்கு?

வயிற்றுப் பிழைப்புக்கே இந்த உபந்நியாசம் என்று - ஒரு இரயில் பயணத்தில் வாரியார் பெரியாரிடம் ஒப்புக் கொண்டது எல்லாம் உண்டே!

குருமூர்த்திகளே உங்கள் தொப்புளை அறுத்த கத்தி எல்லாம் கருஞ்சட்டைகளிடம் உண்டு. பெரியாரைச் சீண்டாதீர்!

Comments