மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பில் இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பில் இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பா?

சட்டமா? தீர்ப்பா? ஆர்.எஸ்.எஸ். கொள்கையா?

பா... அரசு முன்னிறுத்துவது எதை?

சமூகநீதியில் கை வைத்தால் கடும் விளைவு!!

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பில், இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டால், பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராடும் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும்  என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு தாரை வார்க்கும் இடங்கள்!

தமிழ்நாட்டில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 1758. இத்தனை இடங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. இந்த இடங்களில் 50 விழுக்காடு மத்திய தொகுப்புக்குத் தாரை வார்க்க வேண்டும்! அதாவது நம் வரிப்பணத்தில் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொத்த இடங்களில் 879 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்குச் சென்று விடு கின்றன. (அரசியல் சட்ட விதிப்படி இப்போது ஏற்பட்ட  மாறுபட்ட சூழல்படி தரவேண்டியதே இல்லை; இதை ஜஸ்டிஸ் .கே.ராஜன் எழுதிய நூலில் விளக்கியுள்ளார்).

இந்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாதாம். தமிழ்நாட்டிலோ பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 30 விழுக்காடும்; மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 20 விழுக்காடு இடங்களும் சட்ட ரீதியாக உள்ளன.

ஆனால், தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் 879 இடங்களில் இவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது எத்தகைய மோசடி! இதன் காரணமாக 440 பட்ட மேற்படிப்பு இடங்களை ஆண்டுதோறும் நாம் இழந்து வருகிறோம். 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது.

அகில இந்திய அளவில் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 13,237 இந்த இடங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:

அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 8833 இடங்கள் (ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 50 விழுக்காடு) மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 717 இடங்கள், தனியார் கல்லூரிகளிலிருந்து 3688.

ஆனால், கிடைக்கும் இடங்களோ!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 9550 இடங்களில் 7125 இடங்கள். பொதுப் பிரிவிற்கு (74.6 விழுக்காடு) சென்றுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோ ருக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 371 - விழுக்காடு அளவில் சொல்லவேண்டுமானால், வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே!

தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.,) கிடைத்த இடங்கள் 1385 (விழுக்காட்டில் 14.5), பழங்குடியினருக்கு (எஸ்.டி.,) 669 இடங்கள் (விழுக்காடு அளவில் 7) ஒதுக்கப் பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் இந்த அளவுக்காவது இடங்கள் கிடைத்தன. பிற்படுத் தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் வெறும் 3.8 விழுக்காடு என்னும் அளவுக்கு அடி மட்டத்துக்கு ஒதுக்கித்தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலை!

உயர்ஜாதியினருக்கே முன்னுரிமை!

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS) என்பவர் களுக்கு - சட்ட விரோதமாக, அவசர அவசரமாக ஒரு வாரத்திற்குள் சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலை வரின் ஒப்புதலும் பெறப் பட்டதே - அந்த உயர்ஜாதி மக்களுக்கான இடங்கள் எத்தனைத் தெரியுமா? 653. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங் களைவிட கூடுதலாக 282 இடங்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த முன்னேறிய வகுப்பினர் என்றால் யார் தெரியுமா? மாதம் ஒன்றுக்கு 66 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டக் கூடிய ‘‘ஏழைகள்.''

உயர்ஜாதி என்றால், வர்க்கத்தில் கூட வருணம் எப்படி கொடிகட்டி வண்ண வண்ணமாகப் பறக்கிறது-

சட்டம் எப்படி வளைகிறது பார்த்தீர்களா?

மண்டல் குழுப் பரிந்துரையின்படி மத்திய அரசுத் துறைகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக் காடு உண்டு என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், இந்த மருத்துவக் கல்லூரி பட்ட மேற் படிப்பில் அவர் களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது பச்சைப் பார்ப்பன மனுவாதி வருணதர்மம் என்பதல்லாமல் வேறு என்ன?

பிற்படுத்தப்பட்டோர் மட்டும்

வஞ்சிக்கப்படுவது ஏன்?

இட ஒதுக்கீடுப் பிரிவினர் அனைவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், பிற்படுத்தப்பட் டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது எந்த வகையில் சட்டப்படியானது - சரியானது - நியாயமானது?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.. உள்ளிட்ட பல கட்சிகளும் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த நிலையில், இதன் சட்டப்படியான நியாயத்தை உணர்ந்து குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று கூறியது சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பில் (மாநில அரசுக்கு உட்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெறப்படும் 50 விழுக்காடு இடங்கள்) உள்ள சுமார் 15,000 மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களில் மத்திய அரசு தொடர்ந்து ஆறாவது ஆண் டாக இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சட்டப்படி யான இட ஒதுக்கீட்டை அளிக்காமல், வஞ்சனை செய்து வருகிறது.

இதன் காரணமாக இதுவரை சுமார் 40 ஆயிரம் இடங்களை அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர்.

அதிக மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில்தான்!

இந்தியாவிலேயே மிக அதிகமாக அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 960 இடங்களை மத்திய தொகுப்பிற்கு தமிழ்நாடு வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஆண்டுதோறும் 480 இடங்களை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக் காடு அடிப்படையில்) இழந்து வரும் கொடுமை தொடர் கிறது. இதன் காரணமாக 3,000 தமிழகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் பறிபோயிருக்கின்றன.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த சட்ட விரோத - நியாய விரோத மத்திய அரசின் போக்கினை எதிர்த்து தி.மு.. மற்றும் சில கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தன.

இதன் நியாயத்தை உணர்ந்த சென்னை உயர்நீதி மன்றம் அய்வர் கொண்ட ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் மருத்துவ சேவைகளுக்கான இயக்கத்தின் முதன்மை ஆலோசகர் (DGHS) டாக்டர் பி.டி.தானி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தமிழக மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர் பி.உமாநாத், இந்திய மருத்துவக் கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் ஆர்.கே.வியாஸ், டாக்டர் சபியா சாச்சிசஹா, இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் செயலாளர் மற்றும் டாக்டர் பி.சீனிவாஸ், ஏடிஜி (எம்..) ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

அந்தக் குழு தனது அறிக்கையை 2020 நவம்பர் மாதமே மத்திய அரசிடம் அளித்துவிட்டது.

மத்திய அரசு எடுத்த முடிவு என்ன?

அழுத்தம் கொடுத்ததா .தி.மு.. அரசு?

மத்திய அரசு எடுத்த முடிவு என்ன? மாநில அரசு கொடுத்த அழுத்தம் என்ன? என்பது ஒரு புதிராகவே உள்ளது என்றாலும், கடந்த 23 ஆம் தேதி - அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான (நீட்) முன் அறிக்கை ஒன்று (Prospectus) வெளியிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு குறித்து எந்தத் தெளிவான அம்சமும் இதில் இடம்பெறவில்லை.

கடந்தாண்டு சொன்னது என்ன?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்தாண்டு அளிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கடந்த ஆண்டு கூறியது.

அப்படியென்றால், இந்த ஆண்டு (2021-2022) நிச்சயம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருக்கிறது.

நீட்' தேர்வு அறிக்கையில்

உத்தரவாதம் இல்லையே!

ஆனால், ‘நீட்' தொடர்பான அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்த உத்தரவாதமும் காணப்படாமையால் இவ்வாண்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் படுமோ என்ற அச்சமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

கூறுவது என்ன?

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:

தீர்ப்பு அளித்தநாள்: 27.7.2020

1. மாநில சட்டங்களின் அடிப்படையில் இடஒதுக் கீட்டை அளித்திட, இந்திய மருத்துவக்குழு இயற்றிய விதிகள் [(9(4), 5(5)], அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீட்டை மறுக்கவில்லை. (பாரா 85).

2. மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர்க்கு அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்படு வதற்கு இந்திய மருத்துவக்குழு, எந்த விதியையும் குறிப்பிட இயலவில்லை. (பாரா 86).

3. ஓபிசி பிரிவினர்க்கான இடஒதுக்கீடு கொள்கையை சட்டமாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை. (பாரா 87)

4. யுஜி / பிஜி மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் பங்களித்த அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு வழங்க எந்த சட்டமோ அல்லது அரசமைப்பும் தடையாக இல்லை. (பாரா 90).

5. அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு இல்லை என்பதை மாநில அரசுகள் அறிந்திருப்பதாக MCI-இன் வாதம் செய்கிறது.  ஆனால்,  தமிழக அரசு இட ஒதுக்கீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதன்மூலம் MCI-இன் வாதம்  மறுக்கப்பட்டதாகி விடுகிறது.. (பாரா 95).

6. இந்திய மருத்துவக் குழு, மாணவர் சேர்க்கைக்கான தரங்களை நிர்ணயிக்க முடியும். ஆனால், இடஒதுக்கீடு கொள்கை அரசாங்கத்தின் சட்டத்தின்மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவு மூலமாகவோ செய்யப்படவேண்டும். (பாரா 97)

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைப்

புறக்கணிக்க முடியாது!

7. தமிழக மனுதாரர்களின் மனுவில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்டுள்ளது.இதுமத்திய அரசின் யோசனைக்கு மாறாக உள்ளது. (பாரா 98)

8. சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றைப் பாதுகாப் பதற்கான முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை MCI மற்றும் மத்திய அரசு புறக்கணிக்க முடியாது. (பாரா 102)

9. இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அரசமைப்பு கடமைஉள்ளது. இது இப்போது அவசியமாக உள்ளது. (பாரா 104)

10. மத்திய அரசின் சுகாதாரச் செயலாளர், எம்.சி.அய். மற்றும் தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர், இட ஒதுக்கீடு சதவீதத்தை முடிவு செய்யக் குழு அமைக் கப்படவேண்டும்.

11. செயல்படுத்துதல் தற்போதைய கல்வியாண்டில் அல்ல, எதிர்கால ஆண்டுகளிலும் செய்யலாம். (பாரா 105)

12. இடஒதுக்கீடு சதவீதத்தை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் வழிமுறைகளை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கவேண்டும். (பாரா 106)

அரசமைப்புச் சட்டப்படியும், உயர்நீதிமன்றத் தீர்ப்புப் படியும் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது திட்டவட்டமாக - தெளிவாக இருக் கும் நிலையில், 2021-2022  ஆம் ஆண்டிலும்கூட பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படு மானால், அதன் விளைவு கடுமையாகவே இருக்கும்.

.தி.மு.. அரசின் மவுனம் ஏன்?

மக்கள் தொகையில் பெரும்பாலானோரான பிற் படுத்தப்பட்டோரை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதும், தமிழ்நாட்டில் உள்ள அரசு கண்டும் காணாமல் மவுனமாக இருப்பதும் (கடந்த 23 ஆம் தேதியே அறிவிப்பு வந்த நிலையில்கூட) எந்த வகையிலும் சகித்துக் கொள்ளவே முடியாத சமூக அநீதியாகும்.

சட்டமா? தீர்ப்பா? ஆர்.எஸ்.எஸ். கொள்கையா?

சட்டத்தையும், நீதிமன்றத் தீர்ப்பையும் புறந்தள்ளி, மத்திய  பா... அரசு சமூகநீதிக்கு எதிரான தனது ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கே முதன்மையான இடம் கொடுத்து அதன் சித்தாந்தத்தை மட்டும் மதிக்கிறது என்பதாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.

சட்டமா? தீர்ப்பா? ஆர்.எஸ்.எஸ். கொள்கையா? என்பதுதான் மக்கள்முன் இப்போது இருக்கும் பிரச்சினை.

விவசாயிகளின் போராட்டம்போல்

கிளர்ந்து எழுவீர்!

வேளாண் சட்டத்தை எதிர்த்து உழைப்பாளிகள் களத்தில் நிற்பதுபோல, சமூகநீதிக்கு எதிரான மத்திய பா... அரசின் போக்கை எதிர்த்து மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் இந்தியா முழுவதும் பொங்கி எழுவர் என்பதில் அய்யமில்லை.

நாடாளுமன்றத்தில் உள்ள சமூகநீதியாளர்கள் கட்சிகளைப் புறந்தள்ளி மிகப்பெரிய அளவில் உரத்த குரல் எழுப்பிடுவது அவர்களின் இன்றியமையாத கடமையாகும்.

பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுதான் இவர்கள் உறுப்பினர்களாகியுள்ளனர் என்பதை மறக்கவேண்டாம்!

வாக்குச் சீட்டு என்னும் ஆயுதம்!

வாக்குச் சீட்டு என்னும் ஆயுதத்தின்மூலமும் கடுமையாகத் தண்டிக்கக் காத்து நிற்கின்றனர் ஒடுக்கப்பட்ட சமூக வாக்காளர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

26.2.2021

No comments:

Post a Comment