புதுவை, கேரள மாநிலங்களுடன் சேர்த்து தமிழகத்தில் ஏப்.6 இல் ஒரே கட்டமாக தேர்தல் அசாமில் 3 கட்டம், மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

புதுவை, கேரள மாநிலங்களுடன் சேர்த்து தமிழகத்தில் ஏப்.6 இல் ஒரே கட்டமாக தேர்தல் அசாமில் 3 கட்டம், மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி, பிப்.27 தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி களை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று (26.2.2021) அறிவித்தது. புதுச் சேரி, கேரள மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் ஏப்ரல்  6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது.

இவற்றில் பதிவாகும் வாக்குகள், மே 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24 ஆம் தேதியுடன் முடி கிறது. கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் முடிகின்றன. இவற்றுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதே நேரம், கூட்டணியோ, தொகுதி பங்கீடுகளோ முடியாத போதி லும், இம்மாநிலங்களில் அரசியல் கட்சி களின் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

தமிழகம் உட்பட தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கும் தலைமைத் தேர் தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு நேரடியாக சென்று, அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தி வந்தது. தமிழகத்தில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் இக்குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக் கையை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் முன்வைத்தன. இந்நிலை யில், டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகம் அமைந்துள்ள விக்யான் பவனில், நேற்று (26.2.2021) மாலை அளித்த பேட்டியில் 5 மாநில தேர்தல் தேதிகளை சுனில் அரோரோ அறிவித்தார். அவர் அளித்த பேட்டி வருமாறு:

தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநி லங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். அசாம் மாநிலத்தில் மார்ச் 27 (47 தொகுதிகள்), ஏப்ரல் 1 (39 தொகுதிகள்) மற்றும் ஏப்ரல் 6  (40 தொகுதிகள்) ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 (30 தொகுதிகள்) ஏப்ரல் 1 (30), 6 ஆம் தேதி (31), 10 ஆம் தேதி (44), 17 ஆம் தேதி (45), 22 ஆம் தேதி (43), 26 ஆம் தேதி (36) மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதி (35 தொகுதிகள்) என மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் மொத்தம் 18.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கும். மனு தாக்கலுக்கு 19 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடக்கும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு மார்ச் 22 ஆம் தேதி கடைசி நாளாகும். ஏபரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி யும் நடைபெறும்.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாகவும், 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங் கத்துக்கு 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தலில் இங்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 5 மாநிலங்களிலும் மொத்தம் 824 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குப்பதிவு மய்யங்கள் அமைக்கப் படும். இது, கடந்த தேர்தலை விட 34.73 சதவிகிதம் அதிகமாகும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனை வருக்கும், தேர்தலுக்கு முன்பாக கரோனா தடுப்பூசி போடப்படும். தேர் தல் நடத்தை விதிமுறைகளும் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச் சாரம் மேற்கொள்ளும்போது வேட் பாளர் உட்பட 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட வாக் காளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தலாம். கரோனா தொற்று அச்சம் காரணமாக, வாக்குப்பதிவு நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.


No comments:

Post a Comment