பொதுவுடைமை இயக்க சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

பொதுவுடைமை இயக்க சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்!

மாணவர் பருவந்தொட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் இணைத்துக் கொண்டு 88ஆம் வயதுவரை பொதுவுடைமைத் தத்து வத்தினை உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் மறைவுற்றார் என்ற தகவல் கம்யூனிஸ்டு கட்சியையும் கடந்து, தமிழகப் பொது வாழ்வுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்பதே சரியானது.

கல்லூரி விரிவுரையாளராகத் தொடங்கி, பின் வழக்குரைஞராகப் பணியாற்றி, அதற்குப் பின் அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து முழுநேரப் பொதுப் பணியில் ஒப்படைத்துக் கொண்ட ஒப்பற்ற தொண்டறச் செம்மல் தா.பா.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் பல முக்கிய ஊர்களில் எல்லாம் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகள் ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்'' எனும் நூலாக நாம் வெளியிட்டோம் - பல பதிப்புகளாக வெளிவந்துள்ளன.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட அனைத்து மாநாடுகள் - நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற சமூகநீதியாளர் அவர்!

கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளில் (24.12.2020) அவருக்குப் ‘‘பெரியார் விருது'' அளித்து பெருமகிழ்ச்சி கொண்டது திராவிடர் கழகம். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சென்னை பெரியார் திடலில் கடைசிவரையில் அமர்ந்து, ‘இந்த விருதுக்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை!' என்று மனந்திறந்து நெகிழ்ச்சியுரையாற்றினார்.

கடந்த 18.2.2021 அன்று மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்டு மாநாட்டில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், கோடையிடியென அவருக்கே உரித்தான வகையில் ஆற்றிய உரை அவரின் மரண சாசனமாகி விட்டது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராக, மத்தியக் குழு உறுப்பினராக, ‘ஜனசக்தி'யின் ஆசிரியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, தலைசிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராகப் பரிணமித்தவர் தோழர் தா.பா.

உடலால் தோழர் தா.பா. மறைந்தாலும், அவரின் உரைவீச்சு என்னும் சங்கநாதம் - முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அவரது பிரிவு - இந்தியக் கம்யூனிஸ்டுக்கு எவ்வளவு துயரமோ, அதே அளவு துயரத்தை திராவிடர் கழகம் வெளிப்படுத்துகிறது.

அவரின் அளப்பரிய பொதுத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்கள் கிளர்ந்துள்ள ஒரு காலகட்டத்தில், ஒரு போர்ப் படைத் தளபதியை நாடு இழந்துவிட்டது.

அவர் எந்த இலட்சியத்துக்காக வாழ்ந்தாரோ - அந்த இலட்சியச் சுடரை ஏந்துவோம் - பணி முடிப்போம்!

அவரின் மிகப்பெரிய இழப்பால் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ள இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும், தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்,  ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

26.2.2021

No comments:

Post a Comment