பெண் ஊடகவியலாளருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 18, 2021

பெண் ஊடகவியலாளருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

 புதுடில்லி. பிப்.18 பெண் ஊடகவிய லாளருக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் தொடர்ந்த பாலியல் வன் கொடுமை அவதூறு வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மூத்த ஊடகவியாலரும், மேனாள் மத்திய அமைச்சருமான எம்.ஜே.அக்பர், தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பிரபல பெண் பத்திரிகை யாளர் பிரியா ரமானி டுவிட்டரில்மீ டுபிரச் சாரத்தின்போது புகார் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் எம்.ஜே.அக்பர் அவர்மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு ரவீந்திர குமார் பாண்டே விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அப்போது நீதிபதி, ‘தனக்கு எதிராக நிகழ்த்தப் படும் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரை எந்த ஒரு தளத்திலும் தெரிவிக்க பெண்களுக்கு உரிமை உண்டு. பெண்களை வைத்து எழுதப்பட்ட இதிகாசங்களை கொண்ட நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் வெட்கி தலைகுனிய வைக்கின்றன. இந்திய பெண்களுக்கு சுதந்திரமும், சமத்துவமும், சமூகப் பாதுகாப்பும் கிடைக்கப் பெறும்போது எந்த ஒரு துறையிலும் சாதிக்கும் திறமை படைத்தவர் ஆகிறார்கள். இதன்படி, இந்த வழக்கில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்ட பிரியா ரமானிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப் படவில்லை. இதனால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்என்று கூறினார். மேலும் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தார்.

 

உலக அளவில் குறையும் கோவிட் பாதிப்பு

ஜெனிவா,பிப். 18  உலகை அச்சுறுத்திய கரோனா தொற்று ஓராண்டுக்கு மேலாக உலகையே கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதனால் மரணங்கள் மற்றும் இழப்புகளை மனித குலம் அதிகம் சந்தித்தது.

ஓராண்டுக்கும் மேலாக மக்களை பாதித்து வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்தவகையில் உலக அளவில் புதிய பாதிப்புகள் குறைந்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

கடந்த வாரம் 27 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகி இருக்கும் நிலையில், இது முந்தைய வாரத்தை விட 16 சதவீதம் அதாவது சுமார் 5 லட்சம் குறைவாகும். இதைப்போல கடந்த வாரம் 81 ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவும் முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது 10 சதவீதம் குறைவாகும்.

உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5-இல் இரட்டை இலக்க சதவீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. மத்திய தரைக்கடல் வட்டாரத் தில் மட்டும் 7 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது. அதே நேரம் அனைத்து மண்டலங்களிலும் உயிரிழப்பு குறைந்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment