இராமர் பாலம் என்பது உண்மையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 18, 2021

இராமர் பாலம் என்பது உண்மையா?

ஆதம் பாலம் அல்லது இராமர் பாலம் என்பதை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க சட்டவிதிகளில் இடமில்லை என்றும் அதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மூத்த கல்வியாளரும் அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், திராவிடர் வரலாற்று மய்யத்தின் தலைவருமான  பேராசிரியர் முனைவர் .இராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை கடற்கரைகளுக்கு இடையே தொடர்ச்சியாக உள்ள மணல் திட்டு இராமர் பாலம் அல்லது ஆடம்ஸ் பாலம் என்று அழைக்கப்படுகிறது.

அனுமார் தலைமையிலான வானரப் படைகள் இந்தப் பாலத்தை கட்டியதாக இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் உள்ள ஜீனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோன்ஸ் வால்டர் இந்தப் பாலத்தை ஆராய்ச்சி செய்து இது மனிதனால் கட்டப்பட்டது இல்லை என்று குறிப்பிட்டு இருப்பதாக  வாதியின் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் பேராசிரியர் இந்த ஆய்வை மேற்கொண்ட காலத்தில் எந்தவித கட்டாயமோ அல்லது அரசியல் அழுத்தமோ இல்லாமல் சுதந்திரமான ஆய்வு செய்து, வானர சேனைகள் தான் இந்தப் பாலத்தை கட்டியது என்று ராமாயணத்தில் கூறி இருப்பது ஒரு கட்டுக்கதை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா...வைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் தன்னை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படி கோரி  பேராசிரியர் .இராமசாமி மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தன்னுடைய மனுவில் 1958ஆம் ஆண்டு புராதன நினைவு சின்னங்கள் சட்டம் - புராதன நினைவுச் சின்னங்களாக அறிவிக்க 4 விதிகளை வகுத்துள்ளது.

1. நிலையான கட்டட அமைப்பு இருக்க வேண்டும்.

2. நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

3. அந்த அமைப்பு வேலி போடப்பட்டு பாதுகாக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.

4. மக்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்த இடத்திற்கு எளிதாக போய்வரத்தக்கதாக இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பாலம் நிலையான அமைப்புடையது அல்ல; அவ்வப்போது தோன்றி மறையும் மணல் திட்டுகள்தான் ஆதம்பாலம், நீர்க் குழிழிகள் போல் தோன்றி மறையும் மணல் திட்டுகளே! 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை அல்ல; எனவே 1958ஆம் ஆண்டு புராதன சட்ட விதிகளின்படி இந்தப் பாலம் அமையாத காரணத்தால் இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க முடியாது.

மேலும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையில் சுமார் 32 கிலோ மீட்டருக்கு கடல் பரவியுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையே கடலின் நடுவில் பன்னாட்டு கடல் எல்லை உள்ளது; எனவே பாதிக் கடல்தான் இந்தியாவிற்குச் சொந்தம், பாதிக் கடல் இலங்கைக்குச் சொந்தமாகும். அதுபோலவே பாதி பாலம்தான் இந்தியாவிற்குச் சொந்தம், மீதி பாலம் இலங்கைக்குச் சொந்தம்; இந்திய எல்லைக்கு அப்பால் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, எனவே இந்தப் பாலத்தை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கூடாது என்றும் சுப்பிரமணியம் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் .இராமசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளின் கடற்பகுதிகளிலும் இது போன்ற மணல் திட்டுகள் உண்டு; வடக்கு ஆஸ்திரேலி யாவோடு ஒட்டிய பிரின்ஸ் வேல்ஸ் தீவுகள், தென் அர்ஜெண்டினாவினை ஒட்டிய எஸ்சான்சியா சான் ஜோஸ்கோ, மற்றும் தான்சானியாவின் தலைநகரான தர் அஸ்சலாமிலிருந்து சான்சிபார் தீவை இணைக்கும் பகுதி என உலகின் பல பகுதிகளில், இலங்கை இந்தியாவை இணைக்கும் மணற்திட்டுகளைப் போன்ற பெரிய அளவில் வெளிப்படையாகவே கண்களுக்குத் தெரியும் வகையில் கடலில் மணற் திட்டுகள் உள்ளன.

ஆஸ்திரேலிய அரசு அவற்றை பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் பகுதியாக அறிவித்து ஆழிமூழ்கும் சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளது, அர்ஜெண்டினா அந்த மணற்குன்றுகளில் பலவற்றை அகற்றி கப்பல் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. இவை எல்லாம் பாலம் என்று கூறப்படுவதில்லை.

சேது சமுத்திரத் திட்டம் என்பது ஒரு வளர்ச்சித் திட்டம் - இதில் மதத்தை நுழைத்துத் தடை செய்வது அசல் பிற்போக்குத்தனமே! மத்தியில் உள்ள பா... அரசு - 'இராமர் பாலம்' என்று கூறுவது  புரிந்து கொள்ளத்தக்கதே! ஆனால், இதற்கு அண்ணா பெயரில் உள்ள அதிமுக அரசு துணைப் போவது வெட்கக் கேடானதாகும்.

சரியான தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment