பகுத்தறிவு இல்லாப் படிப்புப் பாழே! பாடத் திட்டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் கல்வி தேவை!

மத மூடத்தனத்தால் இரு மகள்களை அடித்துக்கொன்ற மெத்தப் படித்த பெற்றோரின் கொடூரம்!


முனைவர் பட்டம் பெற்றோர் மத மூடநம்பிக்கை காரணமாக பெற்ற மகள்கள் இருவரை அடித்துக் கொலை செய்த கொடூரம் குறித்தும், படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமே இல்லாத நிலை குறித்தும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் புருசோத்தமன் நாயுடு எம்.எஸ்சி., பிஎச்.டி., பட்டம் பெற்றவர். அரசு கல்லூரியில் துணை முதல்வர். அவரது வாழ்விணையர் பத்மஜாவும் முதுகலைப் பட்டம் பெற்றவர். பல்கலைக் கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப் பதக்கம் பெற்றவர். உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராகவும், முதல் வராகவும் உள்ளவர்.

இவர்களுக்கு இரு மகள்கள். மூத்த பெண் அலேக்கியா (வயது 27) முதுநிலைப் பட்டப் படிப்புப் படிக்கிறார். இரண்டாவது மகள் சாய் திவ்யா (வயது 22) சென்னை அரும்பாக்கத்தில் இசை அமைப்பாளர் .ஆர்.ரகுமானின் கே.எம்.இசைக்கல் லூரியில் பயின்று வருகிறார்.

கரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்தே காணொலிமூலம் படித்து வந்தனர்.

தாய் பத்மஜாவுக்கு வலிப்பு நோயாம். பல இடங்களில் மருத்துவம் பார்த்துப் பலன் ஏற்படாத நிலையில் கருநாடகாவைச் சேர்ந்த சாமியார்களை அழைத்து யாகம் நடத்தியுள்ளனர். யாகத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், இரண்டு மகள்கள்மீதும் தீய சக்திகள் புகுந்துவிட்டதாகவும் கூறி, பெறவேண்டியதைப் பெற்று நடையைக் கட்டியுள்ளனர் சாமியார்கள்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 24 (ஞாயிறு) அன்று இரண்டு மகள்களையும் மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தி பூஜைக்குப் பயன்படுத்திய சூலாயுதத்தால்  மூத்த மகளைக் குத்தியும், மற்றொரு மகளை உடற்பயிற்சி செய்யும் இரும்பால் தலையில் அடித்துப் படுகொலை செய்துள்ளனர் என்ற செய்தியைப் படிக்கும்பொழுது நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

காவல்துறையினர் வந்து கதவைத் திறக்கக் கோரியும், கதவைத் திறக்காமல், ‘‘வீட்டில் நல்ல ஆவிகள் உலவுகின்றன - கதவைத் திறந்தால் அவை வெளியே சென்றுவிடும். ஆகையால், நாளை மாலை வாருங்கள்'' என்று கூறித் தொடர்ந்து சிவப்பு ஆடைகளுடன் பூஜைகளை செய்துகொண்டு இருந்தனராம்.

காவல்துறையினர் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தபோதும், அதைப்பற்றி யெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் பூஜைகளை தொடர்ந்துகொண்டே இருந் தனராம்.

காவல்துறையினரிடம் முதுகலைப் பட்டம் பெற்று, கல்லூரி துணை முதல் வராகவும், பள்ளி முதல்வராகவும்  உள்ள அந்தப் பெற்றோர் கூறியது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகவும் இருந்தது.

‘‘உலக நன்மைக்காக இரண்டு மகள் களைப் பலி கொடுத்துள்ளோம். காவல் துறையினர் அத்துமீறி கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்ததால், எங்கள் மகள் களின் நல்ல ஆவிகள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டன. எங்கள் யாக மும், பூஜைகளும் வீணாகிப் போய்விட்டன. இந்த உலகிற்குத் தீங்கு ஏற்பட்டால் அதற்குக் காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்'' என்று கூறியதோடு நிற்க வில்லை.

காவல்துறையினரைப் பார்த்து, ‘‘நீங்கள் எல்லாம் கடவுள் பக்தி இல்லாதவர்கள்; இந்துக்களாக வாழத் தகுதியில்லாதவர்கள்'' என்றெல்லாம் பேசியிருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன; மூடநம்பிக்கைக்குப் பலியான பெற்றோரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஈஷா யோகா மய்யத்தின் உறுப்பினராம்

சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மய்யத்தின் உறுப்பினர் என்றும், தனது மாத ஊதியத்திலிருந்து 10 விழுக் காட்டை ஈஷா பவுண்டேஷனுக்கு புரு ஷோத்தமன் நன்கொடை அளித்து வரு பவர் என்றும்,  அவரது உறவினர்களும், உடன் பணியாற்றுவோரும் தெரிவித்ததாக தெலுங்கு செய்தி நிறுவனமான ஈநாடு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. (https://www.eenadu.net/districts/latestnews/2/2/121018351).

கல்லூரி துணை முதல்வர் - பள்ளி முதல்வர் என்கிற அளவுக்கு மெத்த படித்த பெற்றோர் தாங்கள் பெற்றெடுத்த இரு மகள்களைக் கொடூர முறையில் கொலை செய்யும் அளவுக்கு மதம் - அதனைச் சார்ந்த நம்பிக்கை என்னும் மூடத்தனம் இரண்டும் சேர்ந்து கொலைகாரர்களாக்கிய கொடுமையை என்ன சொல்ல!

பகுத்தறிவுப்பற்றிப் பேசினால் நான்கு கால் பாய்ச்சலாகப் பாயும் மதவாதிகள், ஆன்மிகவாதிகள், ஊடகங்கள் இந்தக் கொடூரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்? கடவுள், ஆவி இவற்றோடு நிற்கவில்லை. இந்து மதம்பற்றியெல்லாம் பேசி இருக்கிறார்கள்.

மத்தியில் பி.ஜே.பி. என்னும் மதவாத - மூடநம்பிக்கை ஆட்சி வந்தாலும் வந்தது - சாமியார்களின் கொட்டங்களும், நடவடிக்கைகளும் உச்சத்துக்குச் சென்று விட்டன. சமூக சீர்திருத்தவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் முதலியோர் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்தப் படு கொலைகளின் பின்னணியில் காவிகள் இருக்கின்றனர் என்ற செய்திகள் வெளி வந்தும் இதுவரை குற்றவாளிகளுக்கான தண்டனை ஏதுமில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-(எச்) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும். இது ஒவ் வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்துகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதி இந்த ஆட்சியில் மயக்க மருந்து கொடுத்து தூங்க வைக்கப்பட்டு விட்டது.

பிரதமர் உள்ளிட்டவர்களே இதற்கு எடுத்துக்காட்டாக இல்லாததோடு, மவுடி கத்திற்கு மகுடி வாசிப்பவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டில் சிறீசிறீ ரவிசங்கர் என்ற சாமியாரால் யமுனை நதிக்கரையில் உலக ஆன்மிக கண்காட்சி-மாநாடு நடத்தப்படவில்லையா? அந்த நிகழ்ச்சிக்கு இராணுவமே பாலம் அமைத்துக் கொடுக்க வில்லையா? இன்னும் 20 வருடங்களுக்கு அந்த நதிக்கரையில் புல் பூண்டுகூட முளைக்காது எனும் அளவுக்கு நாசப் படுத்தப்படவில்லையா?

பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததே - சாமியார் கட்ட வில்லையே!

இத்தகைய மதவாத மூடநம்பிக்கை ஆட்சியில் ஆந்திரா போன்ற நிகழ்வுகள் தொடர்வதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஊடகங்களோ கேட்க வேண்டியதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு ஆன்மிக இதழ்களை வாராவாரம் வெளியிட்டு, எந்த வகையிலும் மக் களிடத்தில் பகுத்தறிவு மனப்பான்மை துளிர்விடக் கூடாது என்பதில் கவனமாகவே இருக்கின்றன.

திராவிட இயக்கத்தையும், பகுத்தறிவு கருத்துகளையும் எதிர்க்கும் - கேலி செய்யும் சக்திகள், ஆந்திராவில் நிகழ்ந் துள்ள இந்த நிகழ்ச்சிக்குப் பிறகாவது புத்தி கொள்முதல் பெறுமா?

பகுத்தறிவு இல்லாப் படிப்புப் பாழ், பாழே! இதனைத் தெரிந்துகொள்வீர்!

பாடத்திட்டங்களில் நரபலி போன்ற மூடத்தனங்களைத் தோலுரித்தும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் மாணவச் செல்வங்களைத் தொடக்கத் திலேயே வார்த்தெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

27.1.2021

 Comments